தோழமை நெஞ்சங்களே இதை வாசியுங்கள் --3
வினா-அகன்:
விடியும் பொழுதுக்கு
என்ன சொல்லி
விடை பெற்றிருக்கும் இரவு..?
விடை-அகமது அலி:
வெளுக்க நீ வந்ததால் ...
அழுக்கை களைகிறேன்
என்றிருக்கும் !
வினா-அகன்:
மலர்ந்து உதிரும் மலரிதழ்கள்
என்ன சொல்லி
செடியிடம் விடை பெற்றிருக்கும்..?
விடை-அகமது அலி:
பூத்தது உதிர்வதற்கே
புரிந்ததா
என்றிருக்கும் !
வினா-அகன்:
உயிர் எதைக் கூறிவிட்டு
விடை பெற்றிருக்கும்
உடலிடமிருந்து..?
விடை-அகமது அலி:
இவ்வுலகில் எதுவும்
நிலையில்லை
என்றிருக்கும் !
வினா-அகன்:
மேலே என்ன சொல்லிவிட்டு
கீழியிறங்கிருக்கும் மழைத்துளிகள்..?
விடை-அகமது அலி:
ஆவியாய் அலைவதை விட
அழுது விடப் போகிறேன்
பூமி சிரிப்பதற்கு
என்றிருக்கும் !
வினா-அகன்:
நிலா இல்லாதபொழுது
விண்மீன்களிடம்
என்ன சொல்லியிருக்கும் வானம்..?
விடை-அகமது அலி:
(அளிக்கவில்லை )
வினா-அகன்:
ஊழல் புரிபவனின் உள்மனம்
என்ன சொல்லிக் கொண்டிருக்கும்
சிக்கிடும் போது..?
விடை-அகமது அலி:
ச்சே ....
சிக்காமல் சில்லரை
பார்த்திருக்க வேண்டும்
என்றிருக்கும் !
வினா-அகன்:
சரியில்லாதவனுக்கு
வாக்காளன் வாக்களிக்கும் போது
வாக்குச்சீட்டு என்ன சொல்லியிருக்கும்..?
விடை-அகமது அலி:
பாவத்திற்கு
துணை போக
என்னை ஏன் தூதனுப்புகிறாய்
என்றிருக்கும் !
வினா-அகன்:
எழுதிமுடிக்கப்பட்ட எழுத்துகள்
விரல்களிடம்
என்ன சொல்லி நீங்கியிருக்கும்...?
விடை-அகமது அலி:
சிந்தனையால் உயிர் பெற்று
விரல்களால் உரு பெற்றேன்
நல்லதை சொல்ல
நான் வாசிக்கப் பட்டால்
மகிழ்வேன் என்றிருக்கும்!
அன்பானவர்களே கவிதை என்பது எவருக்கும் தோன்றும்...ஊறும்...அன்றியும் ஒரு தலைப்பின் கீழ் படைப்பது என்பது பயிற்சியின் விளைவெனில் சிறப்பு அதிகம்..இவ்வகையில் ஒரு முயற்சி - இந்த வினா விடை படைப்பு...
முக்கிய குறிப்பு :
அகனது அலியும் நானும் முன்கூட்டி இது குறித்து எந்தவொரு முன் உரையும் நிகழ்த்திக் கொள்ளவில்லை என்பது முக்கியமாக தோழமைகள் உணர்தல் நன்று...
அன்புடன் அகன் -அகமது அலி ...