வாழ்வும் வீழ்வும்
தமிழா
வாய்மொழியே பேசாமல் வையகம் இருந்த போது
தாய் மொழியில் பேசுவதை மையகப்படுத்தியவன் நீ
இன்றும் சித்திரமே எழுத்தென்று போற்றுவோனுக்கிடையில்
அன்றே எழுத்தை சித்திரமாக தீட்டியவன் நீ
மானம் மறைக்க ஆடையே கட்டாமல் வாழ்ந்தவனுக்கிடையில்
மாமழை நிறைக்க அணை கட்டியவன் நீ
ஐம்புலன் வேறுபாடு அவனவன் அறியும் முன்
ஐந்திணை கூறுபோட்டு வாழ்முறை வகுத்தவன் நீ
மனிதன் மனிதனாக வாழ்ந்தானென்ற சாட்சியே இல்லாத போதே
மனுநீதி காத்து முறைசெய்யும் மன்னனாக ஆட்சி செய்தவன் நீ
இன்றும் கட்டுப்பாடில்லாமல் கண்டபடி உலகம் சுழல்கையில்
அன்றே கலாச்சாரம் எதுவென்பதை கண்டறிந்து வாழ்ந்தவன் நீ
**********************
தமிழா நீ
அடைந்த உயரங்களை விட
உடைந்த துயரங்களே அதிகம்
அன்று ஊருக்கே சோறு போட்டாய்
இன்று உன் வேருக்கு நீரின்றி நிற்கிறாய்
கற்பொறி காலம் தொட்டு
கணிப்பொறி காலம் வரை
தனித்திருந்தே பிணித்திருக்கிறாய்
குகையில் வாழ்ந்ததிலிருந்தே
பகையோடே வளர்ந்திருக்கிறாய்
இணைந்து இருந்திருந்தால் வெல்லப்பட்டிருக்க மாட்டாய்
இறைந்து இருந்ததனால் கொல்லப்பட்டிருக்கிறாய்
************************
ஆதியாய் இருந்த நீ
சாதியாய் பிரிந்த போது
பாதியாய் முறிந்து போனாய்
சதமாய் இருந்த நீ
மதமாய் பிளவு கண்ட போது
வதமாய் இழவு கொண்டாய்
உச்சியாய் இருந்த நீ
கட்சியாய் கலைந்த போது
பட்சியாய் தொலைந்து போனாய்
ஒளியாய் இருந்த
மொழியின் அடையாளம் மறந்த போது
பழியின் மடையாழம் அறிந்து கொண்டாய்
இனத்துக்காக கூடாமல்
பணத்துக்காக ஓடியதால்
ரணத்துக்கான போர் உற்றாய்
பிணத்துக்கான பேர் பெற்றாய்
இனிமேலும் இணையாமல்
தனியாக இருப்பாயானால்
தமிழரென்ற பெயரோடும் இருக்க மாட்டாய்
தரணியிலே உயிரோடும் இருக்க மாட்டாய்
********************************
உலக தமிழனே
உன் குழுவையெல்லாம்
ஒரே கூரையின் கீழ் நெறிப்படுத்தவும்
உன் கருத்தையெல்லாம்
ஒரே குரலில் வெளிப்படுத்தவும்
உன் இனமானம் காக்க
தீர்மானம் போடவும்.
அறமான இயக்கத்தை சேர்ந்திரு...
திறமான தலைவனை தேர்ந்தெடு...