மனிதன் என்பவன் மிருகம் ஆகலாம்

"மனிதன் என்பவன் மிருகம் ஆகலாம்"
========================================ருத்ரா

எத்தனை நாளைக்கு
எங்களை மிருகம் மிருகம் என்று
சொல்லிக்கொண்டிருப்பாய்
உனக்குள் ஒரு மிருக காட்சி சாலையை
வைத்துக்கொண்டு.?.
உன் அசிங்கங்களைக் கண்டு
சிங்கங்களே மாண்டு போகும்..
பாவம் நரி
உன்னை விடவா அது தந்திரமானது?
நான்கு வர்ணம் பூசி
விற்றுக்கொண்டிருக்கிறாயே
நாற்றம்பிடித்த சாத்திரங்களை..
நாய் கடித்து
குரைத்து குரைத்து
மனிதன் சாவது அந்தக்காலம்..
"மதம்" பிடித்த சொற்பொழிவுகள்
கேட்டு கேட்டு
நாய்கள் கூட செத்துப்போகின்றன.
சாதி மத நஞ்சு தீண்டி
நல்ல பாம்புகள் மரித்துப்போகும்.
உன் தொலைக்காட்சி பெட்டிக்குள்ளோ
மன நல மருத்துவக்கூடம்..
இத்தனைக்கும் ஏன்
அறுபது ஆண்டுக்கும் மேல்
வாக்குப்பெட்டி பொதி சுமந்தும் உன்
வாக்குகள் வெளுக்க வில்லை.
கழுதைகளுக்கோ தன் சிரிப்பை
அடக்கவே முடியவில்லை..
மிருகங்களை பார்த்து வாழ்ந்தால்
சீக்கிரம் நீயும் கூட
புது மனிதனாய் மாறிப்போவாய்.
==================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா. (19-Nov-13, 2:04 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 91

மேலே