சன்னலில் குருவி

சன்னலில் குருவி..................ருத்ரா
================================

சன்னச்சிறகும்
சின்ன அலகும் கொண்டு
அந்த இரும்புக்கம்பிகளை
நீ கொத்தி கொத்தி
ரத்தம் வடிகிறது.

அவளை
இன்று முழுவதும்
பார்க்க முடியவில்லையே
என்ற என் ஏக்கத்தை
அங்கு தான் காயப்போட்டிருந்தேன்.

அதையா இப்படி
குத்திக்கிளறுவது?
குருவியே
ஏழுகடல் தாகத்தையும்
இங்கு வந்து
அலகு பிளந்து
ஆயாசம் கொள்கிறாய்.

அந்த ஓசைகளுக்குள்ளும்
செருகியிருக்கும்
அவள் மௌனத்தையே
நான் வருடிக்கொன்டிருக்கிறேன்
என் செவிகளால்.

குருவியா?
அருவியா?
சத்தங்களால்
இந்த சாளரமே
தொப்பலாய்
நனைந்து போனது.

உன் கீச்சுக்குரல்களின்
கூரிய நகங்கள்
கீறும் ரத்தவரிகளில்
தோய்த்த "லிப்ஸ்டிக்கில்"
அவள்
உதடுகளை
சாயமேற்றிக்கொள்கிறாள்.

ஆனால்
முகத்தையே
காட்டாமல்
அந்த உதட்டுச்சாயம்
இந்த பட்டப்பகலில்
அந்திவானமாய்
என்னை
அமிழ்த்திக்கொண்டிருக்கிறது.

குருவியே
உருவியது போதும்
என் இதயத்தை
ஓடி விடு.

=======================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (22-Nov-13, 9:55 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : sannalil kuruvi
பார்வை : 94

மேலே