தோழனே எழு - நாகூர் கவி

தோழனே...
சிலநேரம் இருக்கன்னங்களில்
கை வைத்திருக்கிறாய்...
பலநேரம் மதுக்கிண்ணங்களில்
கை வைத்திருக்கிறாய்...

எப்போது உன்
எண்ணத்தில் கை வைத்து
தன்னம்பிக்கையை
தட்டியெழுப்பப் போகிறாய்...?

பிழைக்கவா வழியில்லை
உழைக்கவா வழியில்லை
இந்த உலகத்தில்...?

உன் தலைக்கு
நரையேறி விடப்போகிறது
தோழா...

கறைப்படும் முன்னே
கரையேறிவிடு தோழா...
வீர நடைப்போட
நெஞ்சினில் உரங்கொள் தோழா...

காதலை நினைந்து நினைந்து
மடிந்தது போதும்...
வெட்டிக்கனவுகள் கண்டு கண்டு
துவண்டது போதும்...

வேலைவாய்ப்பு அலுவலகத்தின்
வாசலில் நின்று நின்று
வெட்டிவேலைப் பார்த்தது போதும்...

உன் அப்பா
உழைத்த பணமெல்லாம்
உன் கையில்
பத்தரமாய் பட்டங்களாகவே
இருக்கின்றன....

வானில் பறக்கும்
பட்டம்போல
எப்போது நீ மாறுவாய்...?

உனது வருமானத்தில்
உன் பெற்றோர்கள்
மனம் குளிர்ந்து
உன்னிடமிருந்து பெற்றதை
அக்கம் பக்கத்து வீட்டாரிடம்
சொல்லி தம்பட்டம்
அடிக்க வேண்டாமா...?

வறுமையாலே
வாடிடுவோரெல்லாம்
உன் கவிதைகளைப் படித்து
பசியாற்றிடுவாரா...?

முச்சந்தி தெருவோரத்தின்
இருக்கும் கடையொன்றில்
நண்பர்களின் சந்திப்பால்
விளைந்தக் சில்லறைக்
கடன்களையெல்லாம்
யாரடைப்பார் தோழா....?

ஈன்றொன்னைத் தூக்கி
இன்னமுதூட்டியவளுக்கு
சேலையொன்று வாங்கித்தரவேண்டும் தோழா...

இடுப்பில் உனை இடுக்கி
நிலவைக் காட்டி
சோறுட்டியவளுக்கு
சோறுபோட வேண்டும் தோழா...

சமயநெறிகளை
சாலமும் புகுத்தி
கெட்ட நடத்தைகளை
சலித்துப் புடைத்த
உன் அப்பனுக்கு
வேட்டி வாங்கித்தரவேண்டும் தோழா...

வேளா வேலைக்கு
இட்லி தோசை
பூரி பொங்கல்
அம்மா சுட்டுத்தர...

ஆசையாய் கொண்டுவந்து
அன்போடு தட்டில் வார்க்கும்
உன் வீட்டு ஒற்றை ரோஜா
உன் தங்கைக்கு மகிழ்வோடு
மணமுடித்து வைக்கவேண்டும் தோழா...

இரும்மல் தும்மல்
ஏதும் வந்தால்
நாட்டு வைத்தியம்
நயமாய் பார்க்கும் பாட்டிக்கு
ஒரு வெற்றிலைப் பாக்காவது
நீ வாங்கித்தரவேண்டும் தோழா...

வா தோழா வா...
புது உலகைப்பார்
இருளாக இருந்தது
இவ்வுலகல்ல...
உன் உள்ளம்தான்...
இருளின் திரைகளை விலக்கு
இருக்கும் திறமைகளே விளக்கு...!

எழுதியவர் : muhammadghouse (23-Nov-13, 4:20 pm)
பார்வை : 203

மேலே