என்னக்கி நீ கொழம்பு வச்சி நான் சாப்புட போறனோ

"சித்தப்பா சித்தப்பா"

"வாத்தா ஏன் சித்தப்பாவத்தான் பாக்கவந்தியா எங்கலெல்லாம்
கண்ணுக்கு தெரியாதா"

"அ என்ன சின்னம்மா இப்படி கேட்டுப்புட்டீங்க.. சும்மா
இந்தப்பக்கம் வந்தேன்.. ஒரு எட்டு பாத்துட்டு போலாமேன்னு வந்தா"

"சரித்தா வீட்ல எல்லாம் சவுக்கியந்தானே"

"அதுக்கென்ன அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு"

"அதுக்கு ஏண்டி இப்படி இழுக்குறவ"

"ம்...வாசனை மூக்கைத் தொலைக்குது.. நாட்டுக் கோழியா.. மருமவ எங்க..."

"வாங்க வாங்க.. எப்ப அண்ணி வந்தீங்க"

"இப்பத்தான் எப்படி இருக்குறவ..ம் பாத்தாலே தெரியுது நல்லாத்தான் இருப்பே.. ம் சரி நான் வாரேன்"

"ஏண்டி வந்துட்டு ஒரு வாய் சாப்டுட்டு போ"

"இல்ல சின்னம்மா பால்வாடில பையன கூப்டுட்டு வீட்டுக்கு போவணும். அவரு வந்துருப்பாரு..
சரி நான் வாரேன்..
வந்து நான் வாரேன்"

"ம்..எதுக்கு இழுப்பு..ம் புரியுது புரியுது.. இருடி.. அம்மாடி ராஜலட்சுமி.."

"இதோ தூக்குசட்டில குழம்பு...இந்தாங்க அண்ணி"

"ஆத்தாடி என் சின்னம்மா பேரத்தான் சொல்லி கூப்டாக.. நீ எல்லுன்னா எண்ணையா நிக்கறியே.."

"சரித்தா.. நான் வாரேன்.."



"ஏண்டி எங்கடி போன.. சோத்த போட்டு வச்சுட்டு அதுக்கு வொண்ணும் வெஞ்சனம் இல்ல.."

"இதோ இந்தாங்க.. நாட்டுக்கோழி கொழம்பு.."

"பாரு பயபுல்ல.. கறிய ரெண்டு துண்டு ஜாஸ்தி போட்டாத்தான் என்னவாம்.. இந்த சின்னம்மாவ சொல்லணும்..நேத்து வந்தவலெல்லாம்.. தூக்கிவெச்சி கொண்டாடுறா.."

"ம்.. என்னக்கி நீ கொழம்பு வச்சி நான் சாப்புட போறனோ.."

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (24-Nov-13, 9:28 pm)
பார்வை : 315

மேலே