கவலை இல்லாத மனிதன்
மகேந்திரபுரி என்ற நாட்டின் மன்னன் ஒவ்வொரு இரவும் மாறுவேடமணிந்து அவன் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று குடிமக்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா என்று கண்டுவருவது வழக்கம்.
பெரும்பாலவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திலாவது கவலை சற்று கொண்டிருப்பதைக் கண்டு மனம் வருத்தினான். வாழ்நாளில் எப்பொழும் மகிச்சியுடன் இருக்கும் ஒருவரையாவது கண்டுகொள்ள வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நின்றது அவனிடம்.
ஒரு நாள், மாலை வேளை, மாறு வேடமிட்டு சென்று கொண்டிருந்த பொழுது, ஆடு மாடுகளை மேய்க்கும் ஒரு குடிமகன் மிகவும் சந்தோஷமாக பாட்டுப் பாடிச் சென்றுகொண்டிருந்தான். அவனைத் தொடர்ந்து ஆநிரை சென்று கொண்டிருந்ததைக் கண்டு மனம் பூரித்து அவனை அணுகி, "இந்த ஆடு மாடுகளெல்லாம் உன்னுடயவைகள் தானா ? நீ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது. நீ பாடிக் கொண்டு முன் செல்ல ஆடு மாடுகள் எல்லாம் உன்னை பின் தொடர்ந்து வருவது மிகவும் ஆச்சரியமா இருக்கிறது" என்று கூறி, "உனக்கு கவலைகள் எதுவும் இல்லையா" என்று வினவ, அந்தக் குடிமகன், "ஐயா, இந்த ஆநிரை எனதல்ல. ஆடு மாடுகளை மேய்த்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் என் வாழ்வு ஒடுகிறது. கண்ணன் குழலூத ஆநிரைகள் அவரிருந்த இடத்திற்கு வந்தது போல், என்னிசை கேட்டு இந்த ஆநிரைகளும் நானிருக்கும் இடத்திற்கு வந்து விடும். என் எசமான் இருப்பிடம் அடைந்தபின்பு, நான் என் குடிசைக்குச் சென்று விடுவேன். அங்கு என் மனைவி, என் வருகைக்காக காத்திருப்பாள். இருவரும் கஞ்சி குடித்து விட்டு, சற்று நேரம் சந்தோஷமாக ஏதாவது பேசிக்கொண்டே உறங்கிவிடுவோம். இருப்பதற்கு ஒரு குடிசையும், வயிறு கழுவ ஒரு தொழிலும், பசிக்கு உணவு தர மனைவியும் இருக்கிறாள், இருப்பதை வைத்துக் கொண்டு வாழ்ந்தால் மகிழ்ச்சி தானாக வரும். ஆகவே, எனக்கு ஒரு கவலையும் இல்லை", என்று கூறி முடித்தான்.
மன்னனுக்கு ஒரே ஆச்சரியம். ஆடு மாடுகள் மேய்க்கும் இவனுக்கு இவ்வளவு மகிழ்ச்சியா என்று எண்ணியவாறே அரண்மனை அடைந்து, மந்திரியிடம் அதைக் கூற, “மன்னா .. பெரும் பாலானவர்கள் கிடைத்ததை வைத்து மகிழ்வதைவிட, கிடைக்காததை எண்ணியும், சிலர் கிடைத்தது கை நழுவி விட்டாலும் அதை எண்ணி கவலை கொள்கிறார்கள். அவனும் அதற்கு விதிவிலக்கல்ல" என்று கூற, "அப்படி இருக்கமுடியாது .. மந்திரியாரே" என்று மன்னர் கூறவும், "வேண்டுமானால், பரீட்சித்துப் பார்க்கலாமே" என்று சொல்லவும், மன்னர் ஒப்புக்கொண்டுவிட்டார்.
மறுநாள் மாலை நேரம் ...
இடையன் வீடு திரும்புவதைக் கண்ட, மந்திரி அவன் வீட்டு வாயிலில் 99 பொற்காசுகள் அடங்கிய கிழியை வைத்துவிட்டு, தலை மறைவாகி விட்டார். வீட்டு வாயிலில் இருந்து கிழியைக் கண்டு, இடையன் அதை எடுத்துக் கொண்டு குடிசைக்குள் சென்று திறந்து பொற்காசுகளைக் கண்டு மகிழ்ச்சி கொண்டு, அதை எண்ணத் தொடங்கினான். 99 பொற்காசுகள் இருப்பதைக் கண்டு, மீண்டும் மீண்டும் எண்ணிக்கொண்டே இருந்தான். 99 பொற்காசுகள் தானே இருக்கின்றன. நூறு பொற்காசுகள் இருக்கவேண்டும் என்று மீண்டும் எண்ணினான். அவன் மனைவியை அழைத்து அவைகளை எண்ணச்சொல்ல, அவளும் 99 காசுகள் தான் இருக்கின்றன என்று சொல்லவும், அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. அவனுக்கு மேலுமொரு சந்தேகம் தோன்றியது. அவைகள் உண்மையிலேயே பொற்காசுகள் தானா அல்லது பொற்காசுகள் போல் தோன்றுகின்றனவா. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பொற்கொல்லனிடம் காட்டிவிடலாம் என்று முடிவு செய்து, மறுதினம் ஒரு பொற்கொல்லனிடம் அவைகளை எடுத்துச் சென்றனர். பொற்கொல்லன் நாணயங்களை ஒவ்வொன்றாக உரைகல்லில் உரசியபடியே, இடையனியம் இவ்வளவு பொற்காசுகளா என்றெண்ணி, அவனை ஏமாற்றக் கருதி, "இவைகள் எல்லாம் பொற்காசுகள் அல்ல. உனக்கு இவை எங்கிருந்து கிடைத்தன " என்று பல கேள்விகள் கேட்டு, "இந்தக் காசுகள் உன்னிடம் இருப்பது மன்னருக்கு தெரிய வந்தால், உங்கள் இருவர் கதியும் அதோ கதிதான் .. பல வருடங்கள் சிறை வாசம் கிடைக்கும்" என்று சொன்னதும், அவர்கள் இருவரும் பயந்து நடுங்கி விட்டனர். "தமக்கு அவை வேண்டாம் .. உழைத்துப் பெறாத ஒன்றிலும் மகிழ்ச்சி இருக்காது" என்று கூறிச் சென்று விட்டனர்.
சில நாட்கள் பிறகு ...
மீண்டும் மன்னர் மாறுவேடமிட்டுச் செல்ல அந்த இடையனைக் கண்டார். அவன் ஆடு மாடுகளை மேய்த்துவிட்டு வீடு சென்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் முன்பிருந்த சந்தோசத்தைக் காண்பதற்கில்லை. அவனை அணுகிய மன்னர், "அன்றொருநாள் உன்னைக் கண்ட பொழுது, நீ மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாய். இன்று அப்படி இல்லையே. உனக்கு உடல் நலமில்லையா" என்று வினவ, "உடல் நலத்திற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை ஐயா .. என் மனநலம் பாதிப்படைந்து விட்டது" என்று கூறவும், "அப்படி என்ன நடந்தது" என்று கேட்க, "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போயிற்று" என்று சொல்ல, மாறு வேடத்தில் இருந்த மன்னர், "கொஞ்சம் புரியும் படி சொன்னால் .. என்னால் முடிந்த உதவி செய்கிறேன்" என்று கூறவும், அவன் நடந்தவற்றை எல்லாம் சொல்லி முடித்தான்.
அதைக் கேட்ட மன்னர் மிகவும் கவலை கொண்டு, கவலை இன்றி வாழ்ந்த இவன் மனநிம்மதியை குலைத்துவிட்டோமே என்றெண்ணி, "நாளை நீ உன் மனைவியை அழைத்துக்கொண்டு ராஜசபைக்கு வா" என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
மறுநாள் ..
ராஜா சபையில் இடையன் அவன் மனைவியுடன் வர, அந்த பொற் கொல்லன்னும் அங்கிருந்தான்.
மந்திரி எழுந்து, "நீ பொற்காசுகளை கொடுத்தது இவரிடம் தானா" என்று கேட்க, இருவரும் தலையசைத்து "ஆம்" என்றனர்.
பொற்கொல்லன் கண்களில் நீர் மல்கி, "மன்னா .. என்னை மன்னித்தருளுங்கள் .. சிலப்பதிகாரத்தில் வரும் பொற்கொல்லன் போல் நானும் தவறிழைத்து விட்டேன். பேராசையால் நான் அறிவை இழந்து விட்டேன்" என்று கூறியபடியே அந்த இடையன் அவன் மனைவி இருவர் பாதங்களில் விழுந்தான்.
மன்னரும் பொற்கொல்லனுக்கு சிறைத் தண்டனை விதித்து, அந்த தொன்னித்தொன்பது பொற்காசுகளுடன் மேலுமொரு பொற்காசை சேர்த்து நூறு பொற்காசுகளை இடையனிடம் கொடுத்தார்.