எங்கும் நான்

என்னத் தேடித்தேடி அலைந்த நீங்கள்
ஏகமனதாக முடிவுகட்டி விடுகிறீர்கள்
காணாமல் போய்விடடேன் என்று

உங்கள் எண்ணத்தின் வலைகளில்
நான் சிக்கவில்லை என்பதறிந்து
அலுத்துக் கொள்கிறீர்கள்
இவன் அகப்பட மாட்டான் என்று

இன்னும் உங்கள் வலைகளை
வீசிக் கொண்டே இருக்கிறீர்கள்
நான் கிடைக்கவில்லையென்றாலும்
என் தடையங்களையாவது
கைப்பற்றலாம் என்று

முயற்சிகளில் பின்வாங்கிய நீங்கள்
என்னால் கிடைத்த தோல்வியைத்
தூக்கித் தோளில் சுமந்து கொண்டு
உங்களுக்குள் புதைகிறீர்கள்

நான் காதல் கவிதைகளைப்
பாடிக் கொண்டிருக்கிறேன் என்று
எண்ணிக் கொண்டிருக்காதீர்கள்
காதலின் புனிதத்தை
போதித்துக் கொண்டிருப்பேன்
எங்காவது

வாழ்க்கையில் மதர்த்துக் கிடக்கிறேன்
என்று எண்ணிவிடாதீர்கள்
வாழ்க்கையின் தத்துவங்களை
உணர்த்திக் கொண்டிருப்பேன்
எங்காவது

மௌனத்தில் உறைந்து கிடக்கிறேன்
என்று கனவிலும் நினைத்து விடாதீர்கள்
காலத்தோடு மோதும் சக்தியை வேண்டி
தவம் இருந்து கொண்டிருப்பேன்
எங்காவது

மஞ்சத்தில் புரண்டு கொண்டிருப்பேன்
என்று கற்பனை செய்துவிடாதீர்கள்
உழைத்துக் களைத்த தொழிலாளியின்
வியர்வை துடைக்க
விசிறியாக வீசிக் கொண்டிருப்பேன்
எங்காவது

யாருக்காவது பாராட்டுப் பத்திரம்
வாசித்துக் கொண்டிருப்பேன்
என்றும் யோசித்து விடாதீர்கள்
காஷ்மீர் எல்லையில் காவலிருக்கும்
என் வீரனின் வீரத்தைப்
போற்றிக் கொண்டிருப்பேன்
எங்காவது

தமிழ் தமிழ் என்று உருகி உருகி
போலி வேடம் புனைந்து நடிக்கும்
சாணக்கியர்களின் பிடியில்
சிக்குண்டு சீக்குண்டு வீழ்ந்ததாக
ஒரு நொடியும் எண்ணி விடாதீர்கள்...

தமிழனுக்கான சுதந்திரக்காற்று
எத்திசையில் இருந்து வீசும் என்றும்
எப்போது வீசும் என்றும்
எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பேன்
எங்காவது

நான் எங்காவது
முடங்கிக் கிடப்பேன் என்றும்
சிந்தித்து விடாதீர்கள்
முடங்கிப் போவதற்கு
நான் ஒன்றும்
இன்றைய மத்திய அரசு அல்ல -
நான் சுதந்திரக் காற்று
தடையற்ற தன்மானக் காற்று !

இதற்கு மேலும்
என்னைத் தேடிப்பிடிக்க
வேண்டுமென்று
நீங்கள் ஒற்றைக் காலில்
நின்று தவம் கிடக்க வேண்டாம்...

உங்களைத் திறந்து பாருங்கள்
உங்களின் இதயமாக
துடித்துக் கொண்டிருப்பேன் !!

********************
[27.10.2013 அன்று திருப்பூர் இணையதள நண்பர்கள் கூட்டத்தில் வாசித்தது]

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (26-Nov-13, 4:27 pm)
Tanglish : enkum naan
பார்வை : 231

மேலே