மச்சானே மச்சானே
முண்டாசு கட்டிக்கிட்டு
முறுக்குமீச வச்சிக்கிட்டு
முடக்கிப்போட்ட என்மனச மச்சானே ....!!
வெள்ளந்தியா மனசவச்சேன்
வெக்கத்துல செவந்துநிக்கேன்
வெத்தலபாக்கு மாத்தவாநீ மச்சானே ....!!
ஊரக்கூட்டி மேளங்கொட்டி
ஊர்வலமா நடந்துவந்து
பட்டுக்கட்டி பரிசம்போடு மச்சானே ....!!
மல்லியப்பூ சடையில்வச்சி
மங்களமா பொட்டுவச்சி
மஞ்சக்கயிறு கழுத்தில்கட்டு மச்சானே ....!!
தாரமான பின்னால
தாராளமா பாசம்வைப்பேன்
தாயாக தாங்கிடுவேன் மச்சானே .....!!
கழனிக்குநீ போவயில
கஞ்சிக்கலயம் சுமந்துகிட்டு
கால்கடுக்க கொண்டுவாரேன் மச்சானே ....!!
அலுப்பாநீ வாரயில
அசதியப் போக்கிடவே
அமுக்கிடுவேன் காலுகைய மச்சானே .....!!
ஒடம்புக்கு முடியலன்னா
ஒத்தடமும் கொடுத்திடுவேன்
ஒத்தாசயா தானிருப்பேன் மச்சானே ....!!
அம்மியில வத்தலரைச்சி
அயரமீனு கொழம்புவச்சி
அருமையா சமச்சிதாரேன் மச்சானே ....!!
பத்துமாசம் கருசுமந்து
பக்குவமா பாதுகாத்து
பெத்துத்தாரேன் புள்ளஉனக்கு மச்சானே ....!!
காசுபணம் தேவப்பட்டா
கவலப்பட வேணாமைய்யா
கடுகுடப்பா துட்டுதாரேன் மச்சானே .....!!
வரவுக்குள்ள செலவுசெஞ்சு
சொச்சபணத்த சேத்துவச்சு
ஊருமெச்ச வாழ்ந்திடுவோம் மச்சானே .....!!