மாவீரர் வாழ்த்து

கொஞ்சு மிருபைங் கிளியதன் கூட்டில்
குஞ்சு பொறித்து வாழ்ந்ததொரு நாட்டில்
நல்ல கானகமது தீவினிற்கு நடுவே
மெல்ல பெருவாகனம் நுழைந்தது மதிலே

உதிர்ந்த கானகத்திடை விட்டதொரு வேளையில்
அதிர்ந்து கேட்டதொரு சத்தம் அதிகாலையில்
நட்ட மரமெல்லாம் புவிதழுவிய தெதனாலது
விட்ட குண்டொன்று வெடித்த தனாலது

வாடிய பயிரைக்கண்டு வாடிய மாந்தர்
பாடிய தெந்திசை புகழுடை மாந்தர்
அம்மை மொழியெனப் பைந்தமிழ் மொழியால்
எம்மை அழிக்கத் தொடங்கிய தொருவழியால்

கொட்டிச் சிரித்தன எம்பிள்ளைகளின் சாவில்
வெட்டிச் சாய்த்தன திருஇலங்கைத் தீவில்
விழுப்புண் கண்டோட வழியேது மில்லை
எழுந்து போராடுவதன்றி விதியேது மில்லை

பகை கூடிக்கொன்று புதைத்தது வலியென
தொகை கூடிச்சென்று கிழித்தது புலியென
மதுசூது ஏதுமில்லா மாவீரர் கூட்டம்
மாதுவின் மீதில்லை இவர்களுக்கு நாட்டம்

இசை ஏழென சுவை ஆறென
நிலம் ஐந்தென திசை நாலென
தமிழ் மூன்றென வாழ்வு இரண்டென
ஒழுக்க மொன்றே வெனநின்ற எங்கள்

இம்மை துறந்த கரும்புலியே போற்றி
வெம்மை செறிந்த கடற்புலியே போற்றி
வளியெனச் சூழ்ந்த வான்புலியே போற்றி
புலியென வீழ்ந்த மாவீரரே போற்றி போற்றி

எழுதியவர் : குட்டிமணி செங்குட்டுவன் (6-Dec-13, 5:06 pm)
பார்வை : 1209

மேலே