மழை

பால்வழியின்
நெருப்புருப்பு உமிழ்ந்த தீ,
ஊரெல்லாம் பரவியது.

புவி ஈர்த்த அதை
நீர் ஈர்த்திட, நீராவியாய் உருமாறி,
பரிணாம வளர்ச்சியில் மேகங்களாகி
ஆகாய கோபுரத்தின்
சிற்பங்களென திரிகின்றன.

பசுந்தாள் உடையுடுத்திய
மரத்தினைக் கண்டதும்
தழுவும் காற்று,
கடற்பிள்ளையாம் முகிலினையும்
தொட்டு பார்க்க
ஒட்டிய நீர்த்துளிகள்
மண் துகள் போல் பிரிந்து, உதிர்கின்றன.

தமிழ் எழுத்துக்களாய் துளிகள்,
கோர்த்த வார்த்தைகளடுக்கி வரும்
கவிதையாய்,
வரித்தூரல் தொடங்கி
தரை தழுவிய தண்ணீரில்
விழ,
அதிர்வினில் அலையெழுப்பி
ஓடுகிறது.

தீவிர மழையென்ற தீர்மானத்தில்
வந்த மேகங்கள்,
வஞ்சகமில்லாது கொட்டித் தீர்க்கிறது.

ஊர்வன, பறப்பன மற்றும் நடப்பன
யாவும்
அகமகிழ்ந்த நேரம் கடந்து
அச்சமுறும் காலத்தின் முகவரி நாடி
தற்காப்புக்கென தன்னில்லம் ஒடி ஒளிகின்றன.

உயிர், நனைய உத்தேசிக்க
உடல், நடுங்குமென வழிமொழிய
நனைந்த தென்றலில் சிக்கிய இன்னொருக்கூட்டம்
கூனிக்குருகி கூட்டிற்குள் கிடக்கின்றன.

உருவற்ற நீர்,
உருக்கொண்ட குழிப்புகுந்து
ஒரு சில வினாடி ஓய்வில் நிரம்பி
ஒய்யாரமாய் வழிய எத்தனிக்கிறது.

வான் தந்த கொடை தீர,
வழிந்தோடும் நீர்ச் சத்தம் காதடைக்க,
மேகத்திரை விலக,
மெல்ல வரும் சூரியன்,
வெப்பக்கதிர் வீசி குளிரகற்ற,
ஓடியொளிந்த ஜீவன்கள் ஒவ்வொன்றாய்
வெளிவர,
கண்டது,
வெளியில் தவழ்ந்தது,
வண்ணகள் ஏழும் அனைத்தபடி
அரைவட்டம் தொலைத்த
வானவில்.

வள்ளூவனார் புகழ்ந்த மழை
வருடத்திற்கொருமுறை வருவது
நம்மால் தானே?.

எழுதியவர் : இர.சிவலிங்கம் (9-Dec-13, 6:06 pm)
பார்வை : 55

மேலே