முருகா

1. முருகா உன் ஆலயம் வந்து நான்
முறையிட வேண்டும் என் வினையெனும்
காட்டாற்றுக்கு நீயே அணையிட வேண்டும்
தட்டாமல் இது செய் தண்டபாணியே

2. சின்னஞ்சிறு கவலையெல்லாம் சிதறட்டும்
என் நெஞ்சில் ஏக்கமெல்லாம் மறையட்டும்
பொன்னூஞ்சல் தனில் ஆடும் பெருமாளே
என் ஊட்டம் உன்னருளே

3.உன்னை அணுக வினை மாறும்
தீராத வினை தீரும்
தினைப்புற வள்ளியை மணந்த மணாளா
எம்மையும் உன்னுள்ளத்தே நினை

4.அருளிருந்தால் போதும் உன்னருளிருந்தால்
பொருளுக்குப் பொருளில்லை முருகா உன்
திருவடிக்கீழ் படிந்தவர்க்கு என்னாளும்
குறையில்லையே குமரா.

5.விற்பனைக்கோ நான் செய்யும் கவி
கற்பனையாய் வருவதல்லால் -சொற்தமிழும்
அருளின்றி வாராது அவன் ஆணையின்றி
ஒரு பொருளும் அசையாது

6.பொழிகின்ற மா மழையாய் பாடல் கொட்டும்
வழிகின்ற கண்ணீரில் ராகம்-இழைகின்ற
கானமெல்லாம் கார்த்திகேயன் புகழ் பாடும்
வானவர்க்கும் இனிதே வா

7.எதை நான் உன்னருள் இன்றிச் செய்ய?
இதைச்சொல்லவும் இடமளிப்பவன் நீயே
பாதை தெரிய விழிகள் வேண்டுவது போல்
தீதை விளக்க உன்னருளே தேவை

8.முடிவில்லா பயணங்கள் முடிவதுதானெப்போது
வடிவேலா குமரா முருகா -கடிகாரம்
காட்டும் காலம் கணநேரமும் எனதன்று
மாட்டு வண்டி முன் மாடு நான்.

9.நல்லவை நான் கேட்கிறேன் நலமருள்
அல்லவை அறுதியாய் அடங்கிட-சில்லறைத்
துன்பங்களும் துயரங்களும் தொலைந்திட
இன்முகத் தெய்வமே என்னுடன் இரு

10.தொட்டவை யாவும் துலங்கிட தொடர்ந்திட
திட்டங்கள் யாவும் தீயில்-எட்டட்டும்
இலக்கை நோக்கி, இயலாதது ஒன்றில்லையென
உலகில் உயர வழி தா.

11.எதிர்க்கும் யாரும் எனைவிட்டகல
புதிராயிருக்கும் புதர் தடைகளெல்லாம் -விதியென
கொள்ளாமல் களைந்திடு காலமெல்லாம்
அள்ளக் குறையா அட்சயமே

12.சற்றேனும் தளர்வறியா சரீரம் நல்கு
வெற்றியால் களிப்படையா விவேகம் நல்கு
பற்றறியா மனம் நல்கு பாமரனும் மகிழ
உற்ற தமிழால் நான் பாட உயர் மதியை நல்கு

பாடல்கள் மு.பாலசுப்ரமணி

எழுதியவர் : மு.பாலசுப்ரமணி (9-Dec-13, 7:49 pm)
சேர்த்தது : mu balasubramani
Tanglish : MURUGAA
பார்வை : 193

மேலே