அவள் கதை முடிந்த நேரமிது - குமரி

இது கற்பனை அல்ல..! தமிழகத்தில் நடந்த சம்பவம்..!
-----------------------------------------------------------
அழகிய பெண்ணா நான் பொறந்தேன்
அப்பா... அவன் காமமும் அதிகமாச்சாம்
அம்மாவும் விட்டு விட்டு பிரிந்ததாலே
அப்பத்தா வீட்டோட நான் வளந்தேன்...

நாலஞ்சு கல்லாணம் கட்டினானாம்
நல்ல ஒரு கணவனா வாழவில்லை
கட்டுன பொண்ணுங்க கழன்றாளுக
கடைசியில் கண்ணுலே பட்டு விட்டேன்...

பாட்டியும் கண்மூடி போயிடுச்சு
படிச்ச என் படிப்பும் நின்னுபோச்சு
அப்பனும் எனை வந்து கூட்டி போச்சு
அப்பவே வில்லங்கம் தொடங்கியாச்சு..

என் ஆத்தாவின் முகம்போல நான் தெரிய
எமனாட்டம் என்னப்பன் எனை இழுக்க
எல்லாமே போதையில் முடிஞ்சுபோச்சு
என் வாழ்க்கை அங்கே பெரும் கந்தலாச்சு..

சித்தியாய் ஒரு பேயும் கூட்டிருக்க
சித்திரவதையிலே நான் கிடந்தேன்
சிறுபிள்ளை இரண்டுக்கு தாயுமானேன்
சிந்திக்க முடியாமல் சிறுமையானேன்....

என்னப்பன் என்பிள்ளை அப்பனானான்
எப்படி அழைப்பதென்று தெரியவில்லை
உறவுக்கு சொல் கேட்டு ஊரை கேட்டால்
உயிரோடு எரிப்பேன் சொல்லிவைத்தான்...

மூன்றாம் பிள்ளைக்கு விதைவிதைச்சான்
முடியாமல் ஒரு நட்புக்கு தூதுவிட்டேன்
முரடனாய் அன்று அவன் பார்த்து விட்டான்
முலையோடு ஓர்செவியும் வெட்டிவிட்டான்...

உயிரோடு உள்ளே ஓருயிர் சுமந்து
உள்ளத்தின் நட்பை கண்டு நின்றேன்
உண்மைகள் கொட்டி மனம் திறந்தேன்
உதவிய கரத்தை உளம் தொழுதேன்....

மூன்றாம் குழந்தையை பெற்றேடுத்தேன்
முன்பின் தெரியாமல் விட நினைத்தேன்
ஒரு கோவிலின் வாசலில் விட்டு வந்தேன்
ஒரு பாவியாய் வானத்தை பாத்து நின்றேன்...

விதியின் விளையாட்டு விந்தையம்மா
விடாமல் வீதியில் எனை பிடித்தம்மா
மகளிர் காவலில் நான் மாட்டி விட்டேன்
மங்கையிடம் கதைகூறி அதிர வைத்தேன்...

அப்பனை பிடிச்சாச்சு சிறையிலடைசாச்சு
அந்த குழந்தையை என்கையில் தந்துமாச்சு
சானலு பொட்டிக்கு செய்தி கிடைச்சாச்சு
சாதி சனங்களும் பெரு மூச்சு விட்டாச்சு...

அவனுக்கு தண்டனை கொடுப்பாங்களா..?
அவன்தந்த புள்ளைக்கு காவலு நிப்பாங்களா..?
எனக்கொரு வாழ்க்கை யாரும் தருவாங்களா..?
என்கதை மட்டும் கேட்டு நீங்க போறீங்களா..?

============= நில்லுங்கள்..! =====================

நமது "டாஸ்மார்க்"கின் புண்ணியத்தால் ராயப்பன் என்ற ஆட்டோ ஓட்டுபவன் ஜெலிலியா என்ற தன் முதல் மனைவியில் பிறந்த மகளை வீட்டில் வைத்து நான்காவது மனைவியின் துணையுடன் காமத்துக்கு பலி கொடுத்து மூன்று பிள்ளைகளுக்கு தாயாக்கி கொடுமைபடுத்தி வாழ்ந்து இருக்கிறான்..!

ஜெலிலியா BBA படித்து இருக்கிறாள்..! அவள் கண்ட கனவுகள்..! அவள் எதிர்காலம்... அவள் வாழ்க்கை எல்லாமே ஏதோ ஒரு பாதாளத்தில்..!

ராயப்பனை எதற்கும் என்னால் உவமை படுத்த முடியவில்லை..!
அந்த வார்த்தைக்கு அவமானம் வந்து விடும் என்பதால்...!

இதுபோன்ற கொடுமைகள் தொடராமல் இருக்க மதுவிலக்கை அமல்படுத்த மனிதனாய் குரல் கொடுப்போம்..!
நட்புடன்
குமரி

எழுதியவர் : குமரி பையன் (10-Dec-13, 5:38 pm)
பார்வை : 428

மேலே