வெண்ணிற இரவு

ஒட்டிய ரோஜா இதழ் உடைய
கொட்டியச் சிரிப்பில்
பனிக்கட்டி பல் தெரியும்
பவளக்கொடியாள்
விழியில் விழ,
வழி மாறும் எண்ணங்களை
வசமாக்கி கொண்டாள்.

உற்று நோக்கியதால்
உருக்குலைந்த என்னிதயத்தில்
எல்லோரா ஓவியமாய்
ஒட்டிக்கொண்டாள்.

நிஜம் மறந்து
புஜம் மறந்து
அவள் பிம்பமாய்
நடைபாதை மீதேறி
தடுமாறி
ஒருமாறி
அறை வந்து
விரியாத படுக்கையில்
விரிந்து கிடக்கும் நினைவோடு
விழுந்த நான்,
மண்புழுவாய் நெளிகிறேன்.

“யாரிவள்?” எனக் கேட்டு
விடைத்தேடி அலையும்
ஹாத்திமாய் எண்ணுகிறேன்.

ஓசையென்று ஒதுக்கி வைத்த பாவெல்லாம்
கீதமென்று கேட்டதோடு,
நாங்களே, ஆடுவதாய்
கனவுகள் கண்டேன்.

கண்மூடி
காதலி முகம் முன்னிறுத்தி
எழுதுமொரு கவிதைக்கு
பொருந்தா உவமையால் நிரம்பியதால்
பொருத்தமான பரிசென்று
கசக்கப்பட்ட காகிதங்களெண்ணி
புன்முறுவலித்தேன்.

புவியைச் சூழ்ந்த காற்றாய்
என்னைச் சூழ்ந்த அவள் நினைவோடு
நானிருந்தது
விடியும் வரை,
அது
இமைக்குள்
இருள் சூழாத
வெண்ணிற இரவு.

எழுதியவர் : இர.சிவலிங்கம் (10-Dec-13, 7:23 pm)
Tanglish : vennira iravu
பார்வை : 190

மேலே