பெயரென்ன தோழி

நம் சிநேக நந்தவனத்தில்
கடைசிவரை
கால்சுவடு பதிக்காமலேயே
போன
அந்த உறவுக்கு
பெயரென்ன தோழி ?

புரிதலில் விபத்துக்கள்
நேர்ந்து விட்டால்
நம் சிநேகம்
ஊனப்பட்டு விடுமென்பதால்
கடைசிவரை
புரியாதது போலவே
அந்த நேசம் போட்ட
வேசத்திற்கு
பெயரென்ன தோழி ?

சிலந்தி வலையில்
சிக்கல் பிரிக்கும்
நுண்ணியத்துடன்
வெளிப்படுத்தியும் கூட
பொய்யான போலிமைகளை -
ஸ்திரப்படுத்திக்கொள்ள
பண்டமாற்று முறையில்
பரிமாறிக் கொள்ளப்பட்ட
அந்த மெல்லிய உணர்வுகளுக்குள்
ஊடலாடிய
உறவுக்குப் பெயரென்ன ?

எட்ட நின்று எச்சரித்த
எதிர்காலத்தின் பொருட்டு
தப்பித்தலுக்காக ...
நமக்கு நாமே
ஏற்படுத்திக்கொண்ட
இந்த
கட்டாய உறவு முறிவுக்குப்
பெயரென்ன தோழி ?

...........லம்பாடி பாலா


.............தோழமைகளே இது எனது படைப்பு அல்ல இந்த படைப்பு என்னை மிகவும் கவர்ந்தமையாலும் இதை திரும்பத் திரும்ப நான் படிக்க தோன்றியமையாலும் சொல் வளமும் சிந்தனையும் பயன் படுத்திய சொல்லாடல்கள் அருமையாக இருந்தமையாலும் எழுத்துத் தளத்தில் இதைப் பதிக்க விரும்பி எனது தோழமையின் அனுமதியுடன் இக்கவிதையை பதித்துள்ளேன் என் தோழமைக்கு உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள் நன்றி

எழுதியவர் : lampaadi paalu (14-Dec-13, 9:40 am)
பார்வை : 201

மேலே