வானவில்லில் பாய்விரித்து
வானவில்லில் பாய்விரித்து......
==========================================ருத்ரா
வானவில்லில் பாய்விரித்து
படுத்துக்கிடந்தேன்.
இந்த நெசவுக்கு
மேலும் கீழும் இறங்கிய
வற்றிய கையின் பச்சை நரம்புகளுக்கு
என்ன கூலி கொடுத்திருப்பார்கள்?
அங்காடியில்
ஆடித்தள்ளுபடிக்கு
வாங்கிவந்த
ஏழு வர்ண சமுக்காளம் இது.
நெசவாளியின்
நெற்றி வேர்வை
இங்கு ஏழு வர்ண சமுத்திரமாய்
அலை விரித்தது.
அக்கினியின் ஏக்கம்
ஒவ்வொரு நூலிலும்.
மனது மழுவதும்
வர்ணங்களை நிரப்பிக்கொண்டு
வயிறுகளில்
காலியாக கிடக்கும்
அந்த தறிச்சத்தங்கள் தோறும்
தெறிக்கும் அந்த ஒலிவிரிப்பில்
தூங்க முடியவில்லை.
கனவுக்குழம்பை
போர்வையாய் பூசிக்கொண்டு
சுருட்டிக்கொண்டேன்.
புழுக்கூடுகள் கிழியட்டும்.
சிறகுகள் தோறும் ஆன்மாக்கள்.
அதோ
கிழக்குத்திசை...
கந்தல் கந்தலாய்.
சூரியனின் நிர்வாணம்
காண முடியவில்லை.
கண்டாலும்
காணாவிட்டாலும்
அது சகிக்க முடிவதில்லை.
___________________________
ருத்ரா