அன்புள்ள தாத்தாவிற்கு

நாளைய மழலையின்
இன்றைய கேள்விகள்.
கர்ப்பப்பை பனிக்குடத்தில்
மிதந்து கொண்டே கேட்கிறேன்
தாத்தா நீ அமர்ந்து கொண்டே கேளு !

பல கோடி தமிழ் இதயங்களில்
பலவந்தமாக எழுதப்பட்டிருக்கும்
உனது பெயர் “கலைஞர்” என்று.
எந்தையும் உந்தன் தொண்டனே
அன்னையும் உந்தன் ரசிகையே
எதுவரை ?
ஈழத்தின் இறுதிப்போர்வரை..


உந்தன் புகழுக்கும்
உலக அறிவுக்கும்
தமிழ் ஆற்றலுக்கும்
சிந்திக்கும் வல்லமைக்கும்
சமுதாய சீரமைப்புக்கும்
உனக்கும் நாளை
இந்திய பெருங்கடலில்
சிலை வைத்திருப்போம்
ஏன் தாத்தா ? ஏன்
நாடகமாடினாய்?

எவர் எவரோ
நாடகமாடலாம்
ஈழத்தாயாக அவதானிக்கலாம்
தமிழ் கடவுளாகவும் சித்தரிக்கப்படலாம்
அவரெல்லாம் உந்தன்
அடிபாத சுவடுக்கும்
ஈடு ஆகாதே...!

நீ ஏன் தாத்தா
நாடகமாடினாய் ?

அவரும் இவரும்
ஆட்சி அமைத்திருக்கலாம்
எவரும் தமிழ் உணர்வை
துச்சமாக தூக்கி எறிந்திருக்கலாம்
அவையெல்லாம்
“கரு”வின் குற்றம்
நீ மட்டும்தானே
”கரு”வாக இருந்தபோதே
தமிழை “ ஆண்ட’வன்”

நீ ஏன் தாத்தா
நாடகமாடினாய் ?

நான் என்ன செய்ய தாத்தா ?
இதோ இன்னும்
சில நிமிடங்களில்
என் அன்னையின்
பன்னீர் குடத்திலிருந்து
கண்ணீரோடு வெளிவரப்போகிறேன்

உன்னை நம்பி நான்
பிறக்கவா ? இல்லையேல்
கருப்பிண்டமாக இறக்கவா?

உந்தன் மனசாட்சிக்குள்
மீண்டும் தமிழ் உணர்வு
குடிபுகுந்தாலே போதும்
மீந்துப்போன ஈழம் பிழைத்திடும்

நான் பிறக்கவா ?
கருவிலே தற்கொலை செய்யவா ?

உந்தன் வாரிசுகளுக்கு
பணம் பற்றாக்குறையா ?
என்னை பிரசவிக்கும்
செலவுக்கு காத்திருக்கும்
சேமிப்பு பணத்தை
அனுப்ப சொல்லவா ?

உன் குடும்ப நிவாரணத்திற்காக

இதோ....இதோ
இப்போது
ஈழத்தில் வாழும்
என் அன்னையின்
கர்ப்பப்பைக்குள்ளே
தொப்புள் கொடியில்
தூக்கிட்டு சாகவா ?


இனியேனும்
மீண்டும்
தமிழினத் தலைவனாக
முத்திரை பதிப்பாயா?
என்ன செய்தேனும்
உந்தன் துரோக
நாடகத்தை நிறுத்திவிடுவாயா ?

உன் அரசியல் நாடகத்தால்
நாதியற்று கிடக்கிறதாம்
தமிழ் சமுதாயம் ..!

அன்புள்ள தாத்தாவே..!
உன் நெஞ்சு’க்குள்
மிச்சம் மீதியாக
நீதி’யிருக்குமா ?


நான் பிறக்கவா?
இன தற்கொலை செய்யவா ?
------------------------------------------------------------------------

இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (15-Dec-13, 7:05 pm)
பார்வை : 379

மேலே