இந்திய முஸ்லீம் ஆட்சியாளர்கள் தொடர்ச்சி 3

நரசிம்ம சாமி கோயிலில் பிரகாரத்தின் மேல் தளத்தில் புராண நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் படங்களுக்கு மத்தியில், திப்புவின் படமும் அழகிய வண்ணத்தில் காட்சியளிக்கிறது. (மைசூர் ஆர்க்கியலாஜிகல் சர்வே, 1945, பக்கம் 59).

பாபா புதன் கிரி என்ற ஊரில் தாத்தாரிய பீடம் என்ற மடம் இருக்கிறது. அதற்கு ஆனகொண்டி அரசவம்சத்தினர் இருபது சிற்றூர்களை இனாமாகத் தந்திருந்தனர். இந்த இனாம் உரிமை, பின் வந்த அரசர்கள் காலத்தில் நீக்கப்பட்டிருந்தது. ஆனால் திப்பு சாஹிபு மீண்டும் அந்த 20 சிற்றூர்களையும் அந்த மடத்துக்கே உரிமையாக்கினார். (மைசூர் ஆர்க்கியலாஜிகல் சர்வே, 1931, பக்கம் 21).

புஷ்பகிரி என்ற இடத்தில் உள்ள மடத்திற்கு இரண்டு சிற்றூர்களை திப்பு வழங்கினார். இந்தத் தகவல், ப்ராக்ஸி ஃபெர்னாண்டஸ் என்பவர் எழுதிய என்ற Storm in Seringapatam திப்புவைப் பற்றிய ஆதாரப்பூர்வமான நூலில் உள்ளது.

சிக்மளூர் மாவட்டத்தில் உள்ள சிருங்கேரி என்ற திருத்தலத்தில் உள்ள சாரதா பீடம் பிரசித்தி பெற்றது. இந்த மடத்திற்கும் திப்புவிற்கும் சிறப்பான தொடர்புகள் இருந்தன. அந்த மடத்திற்கு திப்பு கொடுத்த 'சன்னது' கள் மட்டும் 30 இருந்தன. இவையும் பட்டயங்களும், அம்மடத்தின் தலைவர் ஜகத் குரு சச்சிதானந்த பாரதி ஸ்வாமிக்கும் திப்புவிற்கும் இருந்த நெருக்கத்தை எடுத்துரைக்கின்றன.

மூன்றாம் மைசூர்ப் போரின்போது, சிருங்கேரி மடம் சூறையாடப்பட்டது. எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களின் மதிப்பு 60 இலட்சமாகும். அதோடு, சாரதா தேவியின் சிலையையும் மூல பீடத்தில் இருந்து பெயர்த்து எடுத்துச் சென்றனர் மராட்டியர். மடத்தின் தலைவர் திப்புவிற்கு எழுதிய கடிதத்துக்கு பதிலாக திப்பு, "இந்த கலியுகத்தில், இப்படிப்பட்ட அற நிலையங்களுக்கு கேடு செய்பவர்கள் தக்க தண்டனை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை. சிரித்துக் கொண்டே கொடுஞ்செயலில் ஈடுபடுபவர்கள், அழுது கொண்டே அதன் பலனை அனுபவிப்பார்கள்" என்று எழுதினார்.

மேலும் சாரதா தேவியின் சிலையை மறு பிரதிஷ்டை செய்வதற்குத் தேவையான எல்லா செலவுகளையும் அரசுக் கருவூலத்திலிருந்து கொடுக்கும்படி அரசு அதிகாரிகளுக்கு திப்பு உத்தரவிட்டார். ஒரு பெரிய வெள்ளிப் பல்லக்கும், சுவாமிகளுக்கு ஆபரணங்களும், ஆடை அணிகலன்களும் அள்ளி வழங்கியதோடு, பல ஊர்களையும் இனாமாகக் கொடுத்தார். (ஸ்ரீ சிருங்கேரி ஆவணங்கள், மைசூர் ஆர்க்கியலாஜிகல் அறிக்கை, 1916, பக்கம் 16).

தொடரும்...

எழுதியவர் : நாகூர் ரூமி (15-Dec-13, 9:01 pm)
பார்வை : 121

மேலே