என் மழைத் தோழியுடன்
நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!
என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!
மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!
சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!
தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!
வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!
பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடியிலே..!!!
நொடியில் துயில் கலைத்து
புறப்பட்டாள்
கொஞ்சம் ஓய்வெடு என்றேன்..!!!
ஓய்வா ..?? எனக்கா..??
நான்
வீட்டிலே அடைந்து கிடக்க
பூலோக கன்னியுமல்ல
படுக்கையிலே படுத்து கிடக்க
பொறுப்பில்லா பாலகனுமல்ல
படி தாண்டி வா என்னோடு
கடமைகள்
மலையாய் குவிந்துள்ளதென்று
கனத்த குரலில்
கன்னத்தில் அறைந்தாள் ..!!!
புறப்பட்டேன் அவளோடு...
வழியில் நின்ற தடைகளை
உளியின்றி உடைத்து
தன்னோடு கட்டியிழுத்து
சீறிப் பாய்ந்தோடினாள்..!!!
மனித கிருமிகளால்
தாவரங்களுக்கு இரத்தசோகை
வேர்களில் ரத்தமாய் பாய்ந்து
நோய் தீர்த்தாள்...!!!
வெட்டிய மரத்தின்
உயிரில்லா விதைகளுக்கு
தன்னை மண்ணில் மரித்து
உயிர் கொடுத்தாள் ...!!!
குளம் குட்டைகளில் நிரம்பி
பாலையான விவசாயின்
கண்களை சோலையாக்கினாள்...!!!
கட்டியிழுத்து வந்ததை
தங்க துகளாக்கி
கரையெங்கும் தூவி
கடல் அன்னையோடு கலந்தாள்..!!!
கடமை முடியவில்லை
மேக கன்னிகளோடு
மீண்டும் வருவேனென்று
பரிதியின் பார்வையிலே
உடன்கட்டை ஏறி
ஆவியாகி பறந்தாள்..!!!
கடற்கரையில் தனி மரமாய்
நின்றிருந்தேன்
தோழியவளின் வருகைக்காக..!!