கரம் சேர்ந்த வரம் நீ
வறண்டு துவண்டு இருண்டு
கிடந்த என் வீதிக்குள்
கரண்ட் போல் கால் வைத்தாய்
பூட்டிக் கிடந்த கதவுகளையெல்லாம்
அன்பு ஊட்டி வீழ்த்தினாய்
உள்ளத்தின் உள்ளறைகளையும்
அதின் கறைகளையும் - பலரின்
கைத் தடயங்களையும்
சலவை செய்யும்
பாசத் திரவியமாய்
என்னுள் பாய்ந்தாய்...
சிரிக்க மட்டும் தெரிந்த என்
இதயம் - முதல் முறையாய்
சிலிர்த்ததை உணர்ந்தேன்
இப்போது பார்க்கிறேன்
உள்ளப் பள்ளத்தாக்கு எல்லாம்
அன்பு பூக்கள் - உன்
பெயர் சொல்லி பூத்து நிற்கிறது
வாடிக்கை இல்லா வாழ்க்கை
இது எனக்கு....
கீறல் போடப்பட்ட
கண்ணாடிப்போல்
திண்டாடிக் கொண்டிருந்த என் இதயம்
கொண்டாடிக் கொண்டிருக்கிறது - காரணம்
கீறல்கள் மாறும் வகை
உண்மை நட்பு பூசினாய்....
என் இதயத்திற்கு
செரிக்காத அன்பைத் தான்
இத்தனை ஆண்டுகளாய்
திணித்திருக்கிறேன் - என்று
உன் வரவு தணித்து காட்டியது
உன் நட்பை பருகிய பின் தான் - எனக்கு
நட்புத் தாகம் அடங்கியது
நண்பனாய் வந்த
நட்புத் தடாகம் நீ...
நான் விண்ணப்பிக்காத நட்பு நீ
என்னை ஆதரித்த
ஓர் உறவுக்குள்
ஓராயிரம் உணர்வு நீ
சுருங்கச் சொல்லின் - நான்
விரும்பி படிக்கும் கவிதை நீ .....
ஒருவேளை இந்த நொடிகள்
கணவென்றோ கலங்கிவிட்டேன்
இல்லை இல்லை
ஒவ்வொரு முறையும் காண்கிறேனே
கலையாமல் தெரிகிறதே
தொலையாமல் இருக்கிறதே....
கூப்பிடும் தூரத்தில் நீ வேண்டும்
சாப்பிடும் நேரத்திலும் அருகில் வேண்டும்
சாலை வழி எல்லாம் நீ தான் வேண்டும்
சலிக்காமல் பேசிக் கொண்டே இருக்க வேண்டும்
யோசிக்காமல் உன்னிடம் எல்லாம் செய்ய வேண்டும்
சுவாசம் போல் நீ வசம் இருக்க வேண்டும்
நுகரும் பாசம் உன்னுடையதாய் இருக்க வேண்டும்
சாயும் நேரம் சாய்ந்து கொள்ள நீ வேண்டும்
அலைபேசி அழைக்கும் போதெல்லாம் - அதில்
நீ தான் அழைக்க வேண்டும் ......