வழிப்போக்கன்

ஒன்றை எழுதி தீர்ப்பதற்குள் பிராணன் போய் விட்டுதான் மீண்டும் வருகிறது. மூளையின் நரம்புகளுக்கு இடையில் சாக்கு தைக்கும் கோணி ஊசியை வைத்து இந்த பக்கம் குத்தி அந்தப் பக்கம் இழுப்பது போன்ற ஒரு வித தையல் வேலைதான் எழுத்து. முழு மூச்சாக மனம் குவித்து எதையாவது எழுத வேண்டும் என்று கணிணியில் அமர்ந்த அந்த நொடிக்குப் பின்னரே முடிச்சுக்கள் மெல்ல மெல்ல அவிழ்ந்து கொள்கிறது.

எழுதுதலை ஒரு பெண்ணோடு சல்லாபித்துக் கூடுவதற்கு சமம் என்று கூறலாமா இல்லையா என்று எனக்குத் தெரியாது ஆனால் நான் அப்படித்தான் கூறுவேன். உச்சத்தில் துடி துடித்து தன்னை மறக்கும் பொழுது அது சில மணித் துளிகள்தான் என்றாலும் அதற்கு ஈடான ஒரு அனுபவத்தை ஒரு கட்டுரையோ அல்லது கதையோ எழுதி முடிக்கும் வரை நான் அனுபவிக்கிறேன்.

மிகச் சிறந்த ஆக்கங்களை தருவிக்கும் ஒருவனுக்குத்தான் இப்படியான உணர்வு வரும் என்று சொல்வதற்கில்லை. உள்ளுக்குள் இருக்கும் வலியை இறக்கி வைக்கும் எவனொருவனுக்கும் இது சுகம்தான்...!

ஆமாம் கூடலின் உச்சத்தை ஒத்த சுகம்.

உள்ளுக்குள் படிந்து கிடக்கும் கறைகளையும், சமுதாயத்தால் ஏற்பட்ட வடுக்களையும், குற்றம் என்று அறிந்தே செய்த செயல்களுக்கான பிராயச்சித்தங்களையும், ஆன்ம தேடலின் உச்சத்தையும், சமூகத்திற்கு செய்ய நினைத்தும் இயலாமல் போகும் ஆற்றாமையையும்..., உருவம் கடந்த காதலின் உன்னதத்தையும்...

இறக்கி வைக்க இந்த எழுத்து உதவியாயிருக்கிறது.

எழுத்து எழுதுபவனுக்கு சுகம். சில நேரங்களில் வாசிப்பவனுக்கும் சுகமாய் இருக்கிறது. பல நேரங்களில் அது எரிச்சலாகவும் போய் விடுகிறது. எப்படி பார்த்தாலும் எழுதுபவன் சுகமாய்த்தான் உணர்வான்.. இந்த சுகத்தை ருசித்தவன் யார் என்ன சொன்னாலும் ஏதோ ஒரு மூலையில் எப்போதும் கிறுக்கிக் கொண்டுதான் இருப்பான்.

ஏதோ ஒன்றை வாசித்து விட்டு அதன் மையக் கருவினை மனதிலாக்கிக் கொண்டு அந்த செய்தியை தான் பார்க்கும் விதம் இப்படி என்று எழுத்துக்களை கோர்த்து கொண்டு வருவது மிகச் சுலபமானதுதான் என்றாலும் எழுதும் அந்த செய்தி வலுவானதாய் அடிமனதை ஓங்கி அறைந்து அந்த வலியை உள்ளுக்குள் பரவவிட்டிருக்க வேண்டும். வெறுமனே மனம் போடும் உணர்ச்சிக் கூச்சலைக் கேட்டு விட்டு அதை எழுத்தாக்கும் போது அங்கே படைப்பு முழுமை பெறுவது கிடையாது.

எந்த ஒரு செய்தியும் இல்லாமல், எழுத ஒரு புறக் காரணமுமின்றி உள்ளுக்குள் ஏற்படும் உணர்வுகளின் மாற்றங்களை அழுந்தப் பிடித்துக் கொண்டு உயிரால் உயிர் தொட்டு வாஞ்சையோடு அதை எழுதும் தருணங்கள் மிக அற்புதமானவை.

இருக்கும் ஏழு நிறங்களையும் தான் வரையும் ஓவியத்திற்குள் கொண்டு வர முயலுவது ஒரு பழக்கப்பட்ட புத்தி அல்லது தனக்குத் தெரிந்த வர்ணங்களைக் கூட்டிக் குறைத்து ஓவியத்தை படைக்கும் ஒரு தற்சார்பான புறம் சார்ந்த ஒரு முயற்சி. இதற்கு மாறாக ஒருவன் தனது கற்பனையில் தோன்றிய ஒரு புது வர்ணத்தை, இது வரை இவ்வுலகம் கண்டிராத நிறத்தைக் கொண்டு இயல்புகளைக் கடந்த ஒரு உருவமற்ற ஓவியம் வரைகிறான் என்றால்....

அது அவனின் கற்பனா உலகின் சஞ்சரிப்புகளை அனுபவமாக்கி, அனுபவத்தை மூளைக்குள் உணர்வாய் கிரகித்து அந்த கிரகிப்பினை முற்றிலும் புற உலகு சாராத ஒரு ஓவியமாக்குகிறான். அந்த ஓவியத்திற்கு ஒரு அர்த்தமும் இருக்க முடியாது. அது எந்த உருவத்தையும் சாராமல் இருக்கும். அது இந்த உலகோடு சம்பந்தப்பட்டது அல்ல...சராசரி மனிதக் கண்களுக்கு அது வெறும் வர்ணக் கலவையாய் ஏதே ஒரு பைத்தியக்காரனின் வேலையாத்தான் தெரியும்...

ஆனால் அது ஒரு படைப்பாளியின் மிகப் புதிய யாருமே செய்திராத ஒரு படைப்பு. அதன் ருசியினை படைத்தவன் அறிவான்....! அந்த வர்ணக்கூட்டு அவன் புத்தியிலிருந்த போதும் அதை அவன் படைத்து முடித்த போதும் அவன் கொண்டிருந்த சந்தோசம் கூடலின் உச்சத்தில் ஒரு சில மணித்துளிகள் பெறும் சுகத்தை விட...கோடாணு கோடி முறை அலாதியானது.

பெரும்பாலும் எல்லோருக்கும் புரியும் அல்லது எல்லோரும் கை தட்டி பாரட்ட வேண்டும் என்ற நிலை கடந்து ஒருவன் தன்னுள் ஏற்படும் உணர்வு பரிமாற்றங்களை, உடல் கடந்த சூட்சும அனுபவங்களை எழுத்தாக்கும் போது அது அவனைப் பூரணப்படுத்துகிறது.

பல நேரங்களில் எழுதிக் கொண்டிருக்கையில் புற உலகு அறுபட்டுப் போகிறது. உலகு சார்ந்த விடயங்கள் அற்பமாகிப் போகின்றன. எழுத்தினூடே குறுக்கிட்டு நலம் விசாரிக்கும் மனிதர்களும், சில தொலை பேசி அழைப்புகளும் சட்டென புத்தி மாற்றும் சில நிகழ்வுகளும் என்று வரும் போது.. ச்ச்சே....உங்களுக்குத் தெரியுமா நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று...? என்னை விட்டு விடுங்கள் நான் இல்லை என்று தயவு செய்து எண்ணிக் கொள்ளுங்களேன் என்று கெஞ்சத்தான் தோன்றுகிறது.

வாழ்க்கையின் ஓட்டத்தில் சக மனிதர்களில் பெரும்பாலனவர்கள் நம்மை மதிக்க, நாமும் லெளகீகத்தில் நகர பொருள் இன்றியமையாததாகி விடுகிறது. என்னை இந்த சுழற்சி இன்றி விடுவிக்க ஏதேனும் ஒரு சக்தி உதவுமா என்று கூட சில நேரம் ஏங்கியும் போய் விடுகிறேன்.

ஒரு மழையை ரசிக்கவும், வெயிலை உணரவும், மாலை வேளையின் ரம்யத்தை உள்வாங்கிக் கொள்ளவும், அதிகாலையின் குளுமையை உணரவும், பட்டாம் பூச்சியை பரவசமாய் பார்க்கவும் கூட பொருளாதார தன்னிறைவு வேண்டும் என்று லெளகீகம் கண்டிப்பாய் சொல்கிறது.

லெளகீக பந்தங்களில் இருந்து கொண்டு வாள் எடுத்து உடலாய் நின்று ஒவ்வொரு பிரச்சினையையும், கபட மூளைகள் கொண்ட மனிதர்களையும், போட்டியையும் பொறாமையையும் வெட்டி வீழ்த்தி விட்டு சற்று திரும்பிப் பார்த்தால் முழுமையாய் வாழ முடியாமல் வாழ்க்கையில் இழந்து போனதும் மிகுதியாய் இருக்கிறது. ஏனென்றால் பொருள் தேடி ஓடும் ஓட்டம் ஒரு இலக்கு நோக்கிய நகர்வு.., அது ஒரு புலிப்பாய்ச்சல், இரைதான் கண்ணுக்கு தெரியுமே அன்றி... சூழலும், இருப்பும் அங்கே உணர முடியாத ஒரு மிருக நிலை அது.

புறம் நோக்கிய வாழ்க்கையை தொட்டு விட்டால் அது விடாது ஒரு முரட்டுக் குதிரையாய் நம்மை இழுத்துக் கொண்டு வெறித்தனமாய் ஓடி, ஓடி எங்கோ கொண்டு போய் எது எதுவோ நமது இலக்கென்று காட்டி, யார் யாரோ எதிரிகள் என்று தீர்மானித்துக் கொடுக்கிறது...

சட்டென்று அகம் நோக்கி திரும்ப அப்போது சாத்தியமே இல்லாமல் போகிறது. எழுத்து என்பதும், உணர்வு, அனுபவித்தல் என்பதும் கருங்கல்லில் ஆணி அடிப்பது போல கடினமாகிப் போகிறது. இரண்டையும் சரி சமமாய் அங்கே, இங்கே.. இங்கே.., அங்கே என்று ஓடி ..ஓடி.. அகம்.. புறம்....புறம்.. அகம்....என்று அலைந்து அலைந்து மனம் சமப்பட்டு....

இரண்டும் குவிந்த ஒரு இடத்தில் மெலிதாய் பிடிபடுகிறது இதுதான் வாழ்க்கை. இதுதான் முழுமை. இங்கேயே இருக்க வேண்டும் என்ற சூழல் இல்லாமல் இங்கேயே இருப்பவனும் முட்டாள்...

அங்கேயே இருக்கவேண்டும் என்ற சூழலும் நிபந்தனையுமின்றி அங்கேயே கிடப்பவனும் முட்டாள்...!

சமப்பட்டுக் கிட.....!

மிருகம் போல போரிடு ஆனால் ஒரு வண்ணத்துப் பூச்சி பூக்களைப் புணர்வதைப் போல மென்மையாயிரு...! ஒரு இராட்சசனாய் வாழ்க்கையை எதிர் கொள் ஒரு சாதுவாய் அதைக் கவனி....!

இப்படித்தான் நகர்கிறது பொழுதுகள். எழுதி எழுதி வைத்துக் கொள்கிறேன். வேண்டும் என்று யாராவது கேட்கும் பொழுது கொடுக்கலாம்...என்று தீர்மானித்தும் இருக்கிறேன். கூவிக் கூவி விற்பதையும், கூச்சல் போட்டு நான் யாரென்பதையும் ஒரு போதும் கூறப்போவது இல்லை....

ஏனேன்றால்..நான் ஒரு வியாபாரி அல்ல....

வழிப்போக்கன்....!

எழுதியவர் : Dheva .S (19-Dec-13, 6:24 pm)
Tanglish : vazhipokkan
பார்வை : 177

சிறந்த கட்டுரைகள்

மேலே