இலக்கணக் குறிப்புகள் -03
முற்றியலுகரம் தனி எழுத்தாக வரும் உகரம்: ------- -------(உ,கு,சு,து,ணு,பு,று.ளு),
தனிக்குறில் எழுத்தை அடுத்து வருவது:
-------( நகு;படு;அது;புழு;கணு;)
இரு குறிலை அடுத்து வருவதும், அதுபோன்றே கு,சு,டு,து,பு,று தவிர மற்ற உகரங்களும் : (மதகு;கதவு; அரவு;பரிவு; விழவு;புளுகு; உழவு)
முற்றியலுகரங்கள்;
குறுக்கங்கள்: ஐகாரக் குறுக்கம், ஔகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம், ஆய்தக் குறுக்கம் என்பன ;
ஐகாரக் குறுக்கம்:
ஐ என்னும் உயிர் தன்னைத்தானே குறிக்கும் பொழுது இரண்டு மாத்திரை அளவானது;
அதுவே தனது வடிவம் மாறாமல், சொல்லுக்கு முதலிலோ, இடையிலோ, அல்லது இறுதியிலோ வரும்பொழுது தன்னளவில் குறைந்துவிடும்; இதற்கு ஐகாரக் குறுக்கம் என்று பெயர்.
எ-டு (1) ஐந்/தவித்/தான்/—முதலில் வந்து வடிவம் மாறாமலேயே குறுகி ஒலித்தது;
எ-டு(2) வை/யத்/துள்/ –வடிவம் திரிந்து முதலில் வந்தும் மாத்திரை குறைந்தது;
எ-டு(3) மாசில னாத லனைத்/தற/ --ஐ வடிவம் திரிந்து சொல்லுக்கு இடையில் குறுகி வந்துள்ளது;
எ-டு(4) வீழ்நாட் படாஅமை – படாமை என்பதில் இறுதியில் ஐகாரம் தன் வடிவம் திரிந்து குறிகியுள்ளது;
------
ஔகாரக் குறுக்கம்:-
தன்னைத்தானே குறிப்பதாய் வரும் ஔ என்னும் உயிரெழுத்துக்கு மாத்திரை இரண்டு;
அதுவே சொல்லுக்கு முதலில் வரும்பொழுது தனது மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும்- இதற்கு ஔகாரக் குறுக்கம் என்று பெயர்.
எ-டு(1) உறாஅதோ வூரறிந்த கௌவை யதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
இதில் கௌவை என்னும் சொல்லுல் உள்ள ஔகாரம் தன் வடிவம் திரிந்து சீருக்கு முதலில் வந்து குறைந்து ஒலிக்கின்றது; ஆயினும் அலகிடுகையில் நேர் என்றே கொள்ளப்படும் ; (கௌ/வை);
------
மகரக் குறுக்கம்:-
மகர மெய்யான ம்-என்ற எழுத்துக்கு மாத்திரை அரை
ணகர, னகர மெய்களுக்குப் பின்னோ, வகரத்திற்கு முன்னோ மகர மெய் வரும்பொழுது குறுகி கால் மாத்திரையளவாக ஒலிக்கும்;
எ-டு(1) மருளும், போலும் என்னும் ஈரசைச் சொற்களை ஓரசைச் சொற்களாக ஆக்கும் பொருட்டு –மருண்ம் எனவும், போன்ம் எனவும் குறுக்குவதுண்டு; இவ்வாறு குறுகுவது மகரக் குறுக்கம் ஆகும்;
வகரத்திற்கு முன் வரும் மகரமாக –தரும் வளவன் என்பதிலும் மகரமும் குறுகி ஒலிப்பதாக வரும். இதுவும் மகரக் குறுக்கமே!
------
ஆய்தக் குறுக்கம்:-
தனிக் குறிலை அடுத்துவரும் லகர மெய்யும், ளகர மெய்யும் ஒரு சொல்லின் இறுதியில் இருந்து வரும் சொல்லின் முதலில் தகரம் வந்து இணையுமானால், ல்-லும்.ள்-ளும் ஆய்தமாகத் திரியும்-அதுவே ஆய்தக் குறுக்கம்.
எ-டு= கல்+தீது =கஃறீது; அல்+திணை =அஃறிணை; முள்+தீது =முஃடீது.
----
புணர்ச்சி :-
நின்ற சொல்லொடு வரும் சொல் சேர்வது புணர்ச்சி;
இது இரண்டு வகை-அவை: இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி.
இயல்புப் புணர்ச்சி நின்ற சொல்லொடு வரும்சொல் சேரும்பொழுது, எந்தவித மாற்றமும் நிகழாமல் இயல்பாக இருப்பது;
எ-டு:- தமிழ்+வளம்=தமிழ்வளம்;
விகாரப் புணர்ச்சி-3 வகை
01.தோன்றல் விகாரம்:
எ-டு:- ஏழை+குடும்பம்= ஏழைக்குடும்பம்- நின்ற சொல்லுக்கும் வந்த சொல்லுக்கும் இடையே க்-என்ற மெய்யெழுத்து தோன்றியுள்ளது;
02.திரிதல் விகாரம்
எ.டு:- வில்+பொறி= விற்பொறி : நின்ற சொல்லின் இறுதியிலுள்ள மெய்யெழுத்து (ல்), வரும் சொல்லின் முதலெழுத்து (பொ) வல்லினமாக உள்ளதால் (ல்-ற்-ஆகத்) திரிந்துள்ளது;
03.கெடுதல் விகாரம் நின்ற சொல்லொடு வரும்சொல் சேரும்பொழுது, மாற்றம் நிகழ்வது;
எ.டு:- மரம்+வேர் = மரவேர்: நின்ற சொல்லின் இறுதி எழுத்தான (ம்) இல்லாமல் போனது- கெட்டு விட்டது;
இம்மூன்று விகாரங்களும் பொது விகாரம் எனப்படும்; இவை உரை நடைக்கும் செய்யுளுக்கும் உரியவை ஆகும்;
செய்யுள் விகாரம் :-
இது தவிர செய்யுளுக்கே உரிய, செய்யுள் இயற்றுகின்ற புலவர்களுக்கும், கவிஞர்களுக்கும் தரப்பெற்றுள்ள விதிவிலக்கான - செய்யுள் விகாரமும் உண்டு; யாப்பிலக்கணத்தில் தவறு நேர்வதைத் தடுக்கும் விதமாகக் கொண்டுவந்த கட்டுப்பாடான இது வலித்தல்(1) விகாரம், மெலித்தல்(2) விகாரம்,நீட்டல்(3) விகாரம், குறுக்கல்(4) விகாரம், விரித்தல்(5) விகாரம், தொகுத்தல்(6) விகாரம், முதற்குறை(7), இடைக்குறை(8),கடைக்குறை(9) விகாரங்களென ஒன்பது வகையாகும்;
வலித்தல் விகாரம் செய்யுளின் முதலடியில் வந்துள்ள எதுகைக்கு ஏற்றவாறு அடுத்த அடியில் வரும் மெல்லின மெய்யை வல்லின மெய்யாக மாற்றி அமைப்பது :
எ-டு:
அரக்கரோர் அழிவு செய்து, கழிவரேல் அதற்கு வேறோர்
குரக்கினத் தரசைக் கொல்ல மனு,நெறி கூறிற் றுண்டோ?
அரக்கர் என்ற சொல்லுக்கு ஏற்ப குரங்கு என்பது குரக்கு என்று வந்துள்ளது;
மெலித்தல் விகாரம் செய்யுளில் எதுகையில் அமைந்துள்ள மெல்லின எழுத்துக்கு ஏற்றவாறு மற்ற அடியில் அமையும் சீரில் உள்ள வல்லின மெய்யை மெல்லினமாக மாற்றியமைத்தல்.
எ-டு:
தண்டையின் இனக்கிளி கடிவோள்
பண்டையள் அல்லள் மானோக் கினளே!
தட்டையின் என்ற சொல் பண்டையள் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு தண்டையின் என்று மெலிந்து வந்துள்ளது; தட்டை என்பது கிளியை ஓட்டும் கருவி;
நீட்டல் விகாரம் :-
எ-டு:-
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்..(திருக்.1034)
யாப்பிலக்கணத் தவறு நேரா வண்ணம், இரண்டு சீர்களில் நிழல் என்ற இயல்பான சொல் நீழல் என்று குறில் நெடிலாக மாறி வந்துள்ளது;
குறுக்கல் விகாரம்:-
செய்யுள் யாப்பிலக்கணத்தில் தவறு நேராமலிருக்க இயல்பாக வரவேண்டிய நெடிலைக் குறிலாக மாற்றி அமைப்பது.
எ-டு:-ஒருநாள் எழுநாள்போற் செல்லுஞ்சேண் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு. (குறள்.1269)
ஒரு நாள் என்ற தேமா வாய்பாட்டின் பின்னர் நிரைச் சீர் வரும்பொருட்டு, ஏழுநாள் என்ற சொல் எழுநாள் என்பதாக வந்துள்ளது;
---------தொடரும் --------
[புலவர் திரு வெற்றியழகன் அவர்கள் யாப்பரங்கம் என்ற புத்தகம்]