நிழற் படம்
உறைந்து கிடப்பது
காலம் மட்டுமல்ல
காலத்தின் சிறகுகளை
கெட்டியாக பிடித்துக் கொண்ட
கனவுகளின் விடியலும்தான்
என்பதாகவே,
உணரும் நொடியின்
உறைதலில்- அதுவாகவே
அதுவாகும் காரணம்
ஒரு தேடலென
தொலையாமல்
தன்னை நீட்டித்துக் கொண்டே
மௌன சாட்சியென
நிற்பது
சிந்தனையில் அற்புதமாகும்
சிற்பங்களின் நுட்பமென
தீரா பயணத்தை,
தூர தேசத்தை
நோக்கிசெலுத்தும்
நதியொன்றில் விழும்
நிழல் என நிற்கும்
ஒரு துளி மழை நீரில்
மீண்டும் துளிர்க்கும் ...
ஆவியாக தன்னை
ஒளித்து மறைத்து
வெளிப்படுத்தும்
சிறைப் பறவையின்
சிறகாகவே சிரிக்கிறது
யாவருக்குமான
புகைப் படம்....