படிபடிஎனப் படி

[ கற்க கச[டு]அறக் கற்பவை
கற்றபின்
நிற்க அதற்குத் தக.
திருக்குறள் 0391 ]

விடியல் வரும்படி,
விடியலி லும்படி---
விடியலில் படிப்பது,
படியும்; படியும்---

படிப்புஅது இலைஎனில்,
படிஇது மதிக்காது---
விடிவது எப்போது?--துயர்
வடிவது எப்போது?

காலையில்படி--கடும்பகல்
வேளை யிலும்படி---
மாலையில்படி--இரவு
வேளையி லும்படி---

படிமீது அமர்ந்துபடி---
படியைப்படி; படித்தபடிபடி---
அடுப்படி அங்கும்படி---
படிஅளக்கும் படியைப்படி---

சோலையில்படி; சாலையில்படி---
வீட்டில்படி; வகுப்பில்படி---
வீதிதோறும் பாடம்படி---
யாண்டும் படிஎனப்படி---

நின்றுபடி; நடந்துபடி---
நிலத்தில் அமர்ந்துபடி---
நன்றுஎன நவிலும்படி,
நாள்தோறும் நினைந்துபடி---

படிதனில் உயர்ந்திடப்--படியும்
படிப்பே முதன்மைப்படி---...
படிப்பே வெற்றிப்படி--மற்ற
படிஎலாம் அடுத்தபடி---

வரும்படி தரும்படி,
சிகரப்படி ஏறும்படி,
உடும்புப்பிடி எனும்படி,
படிப்பைப் பிடித்துப்படி---

அதைப்படி, இதைப்படி,
என்பதெலாம் தப்படி---
முப்பால்படி; படித்தபடி,
எப்போதும் நிற்கப்படி---

தீட்டும் திட்டப்படி--அறிவைத்
தேடும்படிபடி--நல்வழி
காட்டும்படிபடி--ஐயந்தனை
ஓட்டும்படி ஓதிப்படி---

மூளைக்கு எட்டும்படி,
நூலைப்படி--மூத்தோர்
நூலைப்படி--நலந்தரும்
வேலை வரும்படிபடி---

அடிமுடி தொடும்படிபடி---
படிபடிஎனப் படித்துமுடி---
அடிதடி வராதபடிபடி---
மடிமடியும் படிபடி---

துன்பப்படி, துயரப்படி,
தூளாகும்படி துணிந்துபடி---
அன்புப்படி, பண்புப்படி,
நட்புப்படி ஏறிப்படி---

மேம்பாடு தோன்றும்படி,
ஆய்ந்துபடி; ஆழ்ந்துபடி---
செப்படி வித்தைகள்
செய்யாது, சிந்தித்துப்படி---

நல்லபடி, வெல்லும்படி---பேர்
சொல்லும்படி என்றும்படி--
நுண்பொருள் காணும்படி,
நுழைந்துபடி; விழைந்துபடி---

தமிழைப்படி; தாயைப்படி---
தந்தையைத் தெரிந்துபடி---
கண்ணைப்படி; கருத்தைப்படி---
மண்ணைப்படி; மனிதனைப்படி---

உருப்படி ஆகும்படிபடி---
உன்னைப்படி; உறவைப்படி---
இப்படிப் படித்தால்,
உலகம் உன்கைப்பிடி---

வரலாறுபடி; அறிவியல்படி---
வாழ்விக்கும் இலக்கியம்படி---
சான்றோரைப்படி; சிந்தைகுளிரச்,
சீர்படும்படி சிறப்புறப்படி---

கற்றவர் உள்ளம் களிக்கும்படி,
சுற்றிலும் உள்ளவர் சுவைக்கும்படி,
முற்றிய பலாச்சுளை பற்றும்படி,
உற்றுப்படி; ஊன்றிப்படி; முற்றும்படி---

துடிப்போடு படி--
படிப்போடு துடி---

எழுதியவர் : பேராசிரியர் வெ அரங்கராசன (23-Dec-13, 7:11 pm)
பார்வை : 138

மேலே