அலைபேசி
அலைபேசியே
உன்னை வரமென்பார் பலர்
உன் வலை விழுந்தோர் பலர்
உன் அலையில் மூழ்கி
நிலை மறந்தோர் பலர்
உன் பின்னே அலைவோரிடம்
அப்படிஎன்ன பேசிவிட்டாய்
பேசும் தன்மையே
அற்று வருகிறது
உன்னிடம் நான் கொஞ்சம்
பேச வேண்டும் - உன்னை
ஏச வேண்டும்
உள்ளங்கைக்குள்
நின்று
உண்டாக்கியவர்களை
இயக்கும் - ஓர்
இயந்திர இதயம் நீ
உன்னுள்
புகுந்தவர்களை
வெளிபுகவிடாத
மாய உலகம் நீ
காயங்களை
கண நேரத்தில் உண்டாக்கும்
காரியவாதி நீ
வரிகளில் மிரட்டி
அழைப்பில் அமுக்கி
வலைதளத்தில்
கொலைகளம் காணும்
தீவிரவாதி நீ
கட்டாயமாய்
கௌரவம் நான் தான்
என
பகட்டாய் திரியும்
பகல் வேஷக்காரி நீ
உன்னை தடுக்க
சட்டம் இல்லை
உன்னால் இன்று
மனிதனிடம்
மனித சட்டமே இல்லை
உள்ளங்கள் ஒட்டாமல்
உடல்கள் உரசாமல்
உணர்வுகள் களவாடப்படாமல்
வெட்கத்தை கண்களுக்கு
விருந்தாக்கி
மிச்சத்தை
மெத்தைக்கென ஒதுக்கி
உயிர்களுக்குள் கூடு பாய்ந்து
வீடு மறந்து
காதல் காடு வழி
திரிய வேண்டிய
காதலை
காதோரம் மட்டும் காட்டி
வாழ்க்கையின் இன்பத்தை
வீழ்த்தி
படுகுழி அனுப்பிய
காலத்தின் சாபம் நீ
வாழ்வியலுக்குள்
வர்த்தகம் நுழைத்த
வித்தகன் நீ
உன் லாபக் கணக்கால்
உன் சாபக் கணக்குகள்
வாழ்க்கை சலுகை பெற்று
வலம் வந்து கொண்டிருக்கிறது
உன்னால்
அப்பா அம்மாவுக்கு
கடமையை
கொடுமையாய்
செல் கால் போட்டு
முடிக்கும் கயவர்கள்
முளைத்திருக்கிறார்கள்
விஷம்
வைத்திருக்க வேண்டும்
உன் வேர்களுக்கு
இத்தனை பேர்
முளைத்திருக்க மாட்டார்கள்
இன்று உன்னில்
இச்சை இன்றியமையாத தாகிவிட்டது
அந்த எச்சங்களை
மிச்சம் இன்றி ருசிக்கும்
தலைமுறையும் உருவாகி விட்டது
எல்லாவற்றையும் உனக்கு
காவு கொடுத்து
காசு கொடுத்து
உன்னை வளர்த்து - உனக்கு
நடக்குதிங்கு வழிபாடு
தொலை தூரத்தில் இருக்கும்
அம்மாவின்
குரலை கொண்டு வந்தாய் - அவள்
விரல்களை ஏன்
மறந்து வந்தாய்
நீ வெறும்
தொழில் நுட்பம் தான்
தொடும் நுட்பமும் - அதின்
வெப்பமும்
உனக்கு எங்கே புரியப் போகிறது
இதை புரிந்து கொள் ...!