வாழ வைக்கும் தெய்வம் விவசாயி
தலையிலே முண்டாசுக் கட்டி,
கையிலே மண்வெட்டி,
தோளிலே ஏர்க்கலப்பை ஏந்தி,
தெருவிலே காளைகள் முந்தி,
தள்ளாட்டமும் தயக்கமும் இல்லாமல்
துள்ளாட்டம் போட்டு - கோலேச்சும்
மன்னவன்போல் ஏர் ஏந்திய
என்னவன் போகின்றான்.
மன்னவனோ மாறுவேடம் பூட்டி,
மதியூகி மந்திரியையும் உடன்கூட்டி,
நகர்வலம் செல்லுதல்போல் - விவசாயி
நிலவளம் காணப் புறப்பட்டான்.
வளம் பொங்கும் நிலமகளை
வணங்கி, விதை நாற்றை
விதைக்கும் முன்னே - நிலத்தைக்
காளைகள் கொண்டு - தன்
கால்களையும் ஆழப் பதித்தான்.
ஈரமண் சேற்றில் - பலரின்
ஈனப் பசியைப் போக்க - தன்னையே
ஈனப்படுத்தி மண்ணைக் களறி
ஈகைத் தரும் நிலமாய் ஆக்கினான்.
நீரும் சேறுமாய் ஆனா நிலத்தில்
நெல்மணியைத் தருகின்ற விதை
நாற்றை பலரோடுக் கூடி
நிலமுழுதும் நன்றாய் நட்டான்.
விவசாயிக் கூட்டம் நட்ட விதையை
வீசும் காற்று தாலாட்டுப் பாட
விதைநெல்லு நலமாக வளம்பெற
புதைநிலம் பூநிலமாய் பூத்தது.
பூ நிலமாய் பூத்த நிலத்தின்
பருவ அழகை பார்த்துவர - விவசாயி
பொன் நிறக் கதிரவன் வருமுன்னே
பூபாளம் பாடியே வந்து நின்றான்.
பூபாளம் பாடி வந்து நின்றவனை - பருவத்தின்
பசுமையால் விளைந்த நாற்றுகள் தென்றலோடு
பிரகாசிக்கும் தன்னழகால் தழுவியது.-பலரின்
பசிப்போக்க பாடுபட்ட பாட்டாளியே - விவசாயியே
பாருக்கே சோரளக்கும் தெய்வப் பிறவியே.
உழைத்து வாழ நேசிக்கும் மாண்பினை - இந்த
உன்னத மண் மீது விதைத்துக்காட்டியவனே.
மண் மீது நீ நேசம் கொண்டதால் - என்றுமே
மண்வாசனை உன்னால் மணக்குது.- நிலத்தை
மணம் வீச வைத்தவனே - என்று உன்னை
மனிதர்கள் நேசிக்கப் போகிறார்கள்.
வாழவைக்கும் தெய்வமாய் மனித உருவில்
விவசாயியாய் பிறப்பெய்து வாழ்பவனே.-நீ
வரமாய் கேட்பதை இந்த மனிதர்கள் -என்றைக்கு
விடை அளிக்கப் போகிறார்கள்.