கூன் கிழவி
நிமிர்ந்து நடக்கும்படியாய்
எத்தனையோ முறை சொல்லிருக்கிறாய்
ஆனால் எதையும் நான் காதில்
போட்டுக்கொண்டதாய் இல்லை.
இன்றளவும் நீ சொல்லிக்கொண்டுதான் இருக்கிறாய்
அதே கரகரத்த குரலில்.
இப்பொழுதெல்லாம் நம் வீட்டுக்குள் மட்டும்
நான் நிமிர்ந்து நடப்பதை
யவரேனும் கவனித்திருக்க கூடும்.
காரணம் கண்டறிந்தால்
அது நீயாகத்தான் இருக்கிறாய்.
ஆமாம்,நிமிர்ந்து நடந்தாலொழிய தெரியவில்லை
சுவரில் சிரித்துகொண்டிருக்கும் நீ,புகைப்படமாய்.
கண்ணீர் மறைத்துவிடுமுன் ஒரு முறையேனும்
உன் முகத்தை முழுசாய் பார்த்துவிடுவேன்
என்ற நம்பிக்கையில் நிமிர்ந்து நடந்துகொண்டிருக்கிறேன்.