இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி
அன்போடு சொன்னார்!
ஆர்வத்தோடு சொன்னார்!
இன்முகத்தோடு சொன்னார்!
இயற்கை விவசாயம் பற்றி!
சட்டை இல்லாத உடம்புடன்
சாட்டையடிப் பேச்சுடன்
உறவாடும் நெஞ்சத்துடன்
உணர்ச்சி பொங்கச் சொன்னார்!
இயற்கை உரங்களால்
விளையும் நன்மைகள்
செயற்கை உரங்கள்
செய்த தீமைகள்!
வளமை இழந்த
வயல்கள் பற்றி
கெட்டுப் போன
நீர்நிலை பற்றி!
மரங்கள்,மனிதர்கள்,
மாடுகள் பற்றி
இயற்கையோடிணைந்த
வாழ்வியல் பற்றி !
சமூக வாழ்வின்
சந்தோசம் பற்றி !
அரசியல் வாதிகளின்
சுயநலம் பற்றி!
அறிவுரை கூறும்
ஆசானாக,
அருகினில் இருக்கும்
அப்பாவாக !
குழந்தைகளுக்குத்
தாத்தாவாக!
விவசாயிகளுக்கு
நண்பராக!
இயற்கை மீது
கொண்ட நேசத்தால் ,
இடைவிடாமல்
உழைத்த இதயம் !
மீத்தேன் எடுக்கக்
கையகப் படுத்தும்
கயமைத்தனமான
அரசியல் கண்டு,
பொங்கி எழுந்து
போராட்டம் செய்து
அடக்கு முறையினால்
அடங்கிப் போனதோ?
இயற்கையைப் பற்றிய
இனிய கானம் பாடிய
இன்னிசைக் குயிலை
இழந்து தவிக்கிறோம்!
மண்ணுலக மானுடர்கள்
கேட்காத காரணத்தால்
விவசாயம் செய்ய
விண்ணுலகம் போனாரோ?

