காதல் கனியுமா

(ஆணும் பெண்ணும் மாறி மாறிப் பாடுகின்றனர்
ஆண்:
நாற்றைக் கரமெடுத்து நட்டசையும் சின்னவளே
. நின்விரலோ சேறளைந்து கொள்ளுகையில் - என்
. நெஞ்சினிலே நோவெழுந்து கொல்லுதடி
பெண்:
ஆற்றும் வகையறியேன் அம்புஜமாய் வாழுகிறேன்
. சேற்றில் நிறுத்தியும் நான் சிரித்திருப்பேன் -இந்தச்
. சின்னவளோ சூரியனைப் பார்த்திருப்பேன்

காற்றில் கனத்த குழல் கட்டழகி உன்மனம்போல்
. கீற்றாய் உருண்டு பக்கம் வந்ததுபார் -அது
. கொஞ்சுமிரு கன்னங்களும் என்பொருள் பார்
ஊற்றும் நதிகரையில் ஒடுமலைமேனிபட
. உள்ளிருந்து நாணமெழும் வேளையிலே நீ
. ஓரக்கண்ணில் பார்த்தவெட்கம் போகலையே

ஏற்றம் மிதித்திறங்கி எருதிரண்டும் ஓட்டிவர
. இளமகளே இடையினில் நீ வந்ததென்ன உன்
. எழிலிலங்கும் திமிரிலவை மருண்டதென்ன
ஊற்றில் நீர்துள்ளிவிழ ஓர்கலயம் கீழிருத்தி
. ஓடிவரும் நீர்தெளியக் கொள்கையிலே - நீ
. ஓசையின்றித் தாகத்தோடு நின்றதனால்

சோற்றுப் பருக்கைகிள்ளி சாதம்நெ கிழ்ந்ததெனச்
. சொல்லி வடித்திடலாம் சின்னவளே பெ.ண்
சித்தம் புரிந்துகொள்ளப் பின்னல்வலை’

மாற்று நினைந்தெதுவும் மங்கையிவள் கொள்ளவில்லை
மாதர் நிலை வேறெனவே நீயறிவாய் - ஓர்
மந்திரத்தில் காய்பழுக்கும் மாற்றமில்லை


போற்றி யுனை யிருத்தி பொன்னணிகள் மாலையிட்டு
போகமெனச் செல்வம் கொழித்தாக்கிடுவேன் உன்
புன்னகையில் உள்ளம் நிறைவெய்திடுவேன்
ஆற்றுக் கரைபுறத்தில் ஆடாமல் கொக்கு நின்றால்
காக்கவைத் தோடும்கயல் குற்றமென்றொ இக்
கன்னியிவள் கொண்டதன்மை வஞ்சமல்ல

தோற்றேன் என் பேச்சிழந்தேன் தேவமகள் நீயறிந்தேன்
தென்றல் தரும் இன்பநலம் கண்டிடலாம் . வாழ்வுத்
தேரிலேறிக் கையிணைத்து சென்றிடலாம்
நேற்றுக் கருக்கலிலே நேசம் கொண்ட ஈர்கிளிகள்
நீள்மரத்துக் கொப்பினிலே நின்றதய்யா - அவை
நெஞ்சினிலே தீ எழவும் கொஞ்சுதய்யா

ஏற்றல் இழிந்து கெட்டு இல்லறத்தின் மென்மைதொட்டு
. ஏனோ இருட்டில்வண்ணம் கண்டிடலாம் - உன்
. ஏக்கம் அழித்து மெய்யில் அன்பிடலாம்
கூற்று நடந்திடுமா கொக்கரக்கோ கூவிடுமா
. சேற்றில்கதிர் முளைத்து வந்திடுமா இந்தச்
. சின்னவளின் வாழ்வுமொளி கண்டிடுமா

எழுதியவர் : கிரிகாசன் (2-Jan-14, 7:02 pm)
பார்வை : 73

மேலே