கரை தேடும் மீன்கள்
அந்தி மழை மேகங்கள்
ஆர்ப்பரிக்கும் நேரம்
ஆளுயர நீர் மலைகள்
அசைந்து விளையாடும்.
சந்தமுடன் சிந்து தமிழ்
வந்து இசை பாடும்
சாரல் மலர் தூவும் மழை
ஜதியில் நடமாடும்.
சொந்தையிலே செவ்விளைகள்
துள்ளி விழும் போது
சித்தமெல்லாம் சில்லறைகள்
சிணுங்கும் ஒலி கேட்கும்.
முந்தி விழும் நீரின் துளி
மூக்கின் நுனி மோத
வந்து கரை சேரும் அலை
வழியில் படகோடும்
நொந்து தினம் மீன் வலித்து
நூலறுந்த வலையில்
வந்தமரும் நாரையினம்
வாய்க்கு இரை தேடும்.
வெந்து தினம் வீசும் வலை
வாழ்வின் விலை கூறும்
வந்து விழும் மீனின் சுமை
வயிற்றின் பசி ஆற்றும்.
அந்தரத்தில் தொங்குகின்ற
அவலம் எங்கள் வாழ்க்கை
எந்திரமாய் நாம் உழைத்தும்
எதுவும் மிஞ்சவில்லை!

