வலிமை கொண்டவர் பெண்களடி

இழப்புகள் எங்கள் பிறப்பு விதி
பெண் இனத்திற்க்குச் செய்த கூட்டுச் சதி
மரபுகள் சுமந்த வாழ்க்கையடி
அதை மாற்றத் துடிக்குது மனதின் வெறி..

கனவுகள் கிழிந்த சேலையடி
மனக் காட்சிகள் பூக்கும் முன் சாகுமடி
நினைவுகள் விதையை உடைக்கும் முன்பே
நயவஞ்சகக் கால்கள் நசுக்குமடி..

கயவர்கள் வாழும் கூட்டமடி
கண் பார்வைகள் யாவிலும் விரசமடி
மனதினில் உள்ள மனிதத்தை
பார்ப்பவர் இங்கே குறைச்சலடி..

நதிகள் நமக்குத் தோழியடி
இந்த நாடும் நமக்குத் தோழியடி
ஆள நினைக்கும் பெருங்கூட்டம்
நம் மூவரையும் சிதைக்குது விருப்பப்படி..

பொறுத்தது போதும் உடைத்து எறி
தடுத்தது போதும் எதிர்த்து அடி
வீரத்தை எதிர்க்கும் ஓர் வலிமை
நம் விரலிலும் உள்ளது உண்மையடி..

எழுதியவர் : வெ கண்ணன் (5-Jan-14, 8:45 am)
பார்வை : 1912

மேலே