கல்லிலே இருப்பதென்ன கண்ண பெருமானே

கல்லைக் காணும் போது
சிலை வடிக்கவேண்டும்
என்று நீ எண்ணினால்
நீ கலைஞன்

கல்லை உடைத்து
ஊருக்குச் சாலை போடவேண்டும்
என்று நீ எண்ணினால்
நீ சமுதாயச் சிற்பி

கல்லைச் செதுக்கி
தலைவனுக்கு சிலை எடுத்து
நடு ரோட்டில் நிறுத்தி
ஊர்வலம் போய் மாலையிட்டு
வணங்கி நின்றால் நீ
அரசியல் தொண்டன்
இளிச்சவாயர் சன நாயகத்தில்
எதிர்காலத் தலைவன்

கல்லை எடுத்து விட்டெறிந்து
காயப் படுத்தி கலகம் செய்து
பொதுவுடமைக்கு சேதம் விளைவித்தால்
சார்ந்த கட்சிக்கு தீவிரத் தொண்டன்
உண்மையில் நீ சமூகத் துரோகி

கல்லில் வடித்த சிலைகளை
கடவுளாக வணங்கும் தெய்வீக கோயில்களில்
கல்லிலே கடவுளை காணவில்லை
கலையை ரசிக்கிறேன் என்று நீ சொன்னால்
அறிவினால் உந்தப்பட்ட அகந்தைஉடையவன்
தத்துவச் சிந்தனையில் மந்தன்

கல்லிலே கடவுளும் இல்லை
கல்லிலே தலைவனும் இலை
தொண்டனும் இல்லை
காண்பதில்லெல்லாம் ஒன்னும் இல்லை
என்று நீ சொல்லிச் செல்வாயேயானால்
நீ முற்றியவன் சத்தியம் உணர்ந்தவன்
தத்துவ ஞானி
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jan-14, 6:26 pm)
பார்வை : 125

மேலே