அவளின் நினைவுகள் இன்னும் பசுமையாக
மடிப்பு களையாத சட்டைக்குள்
என்னவளின் களையாத நினைவுகள்
அப்படியே ஆனந்தமாய் இருந்தன!
அது ஒரு நிலாக்காலமா ?
கனாக்காலமா? வசந்தகாலமா ?
அது ஒரு இனிமையான காலம்!
தலைநிறைய பூவோடு
தாவணியில் அவளைப் பார்த்தேன்
தடுக்கி விழுந்தது என் இதயம்!
சிநேகமாய் எனைப் பார்த்துச் சிரிப்பாள்
என்னுள் காதல் வாசம் வீசும்
ஆனாலும் சிறு புன்னகையை மட்டுமே காட்டுவேன்!
அவள் முகம் பார்க்கவே
அவளின் இல்லத்திற்கே செல்வேன்
அவளின் அண்ணன் என் நண்பன்!
அதனால்த்தானோ என்னவோ
என் காதலை அவளிடம்
சொல்லாமல் இருந்துவிட்டேன்!
அவள் எதேட்சையாக எனைத் தொட்டாள்
அவள் ஸ்பரிசம் பட்ட சட்டையை
அப்படியே இன்னும் என் பெட்டிக்குள்.....!