அன்புள்ள அம்மா
அம்மா !
என்தாய் மொழியின்
முதல் மொழி!
என்னை பத்து மாதம்
சுமந்து பெற்றதாய்
சொன்னாய் !
ஆனால்
முப்பத்திரண்டு வருடமாய்
சுமந்து கொண்டேயிருக்கிறாய் !
சிலகாலம் வயிற்றிலும்
பலகாலமாய் நெஞ்சிலும்!
உன் உணர்ச்சி மறந்தாய்
பசி உறக்கம் இன்றி
எனை காத்து வந்தாய் !
எனக்கு என்ன வேண்டுமென
நீ தெரிந்திருந்தாய்!
எனக்கு எல்லாமே நீதான்
என்றிருந்தாய்!
என் சிரிப்பு கண்டால்
உள்ளம் பூரித்து மகிழ்ந்தாய் !
ஒடி விளையாடி
விழுந்து அழுவேன்-
தரையை அடித்து
ஆறுதல் சொல்லுவாய்!
கல்லிலோ முள்ளிலோ
கால் கிழித்து வருவேன்
கல்லையும் முள்ளையும்
கடிந்து கொள்வாய் !
கணக்கு பாடத்தில்
எப்போதுமே தோல்வியடைந்து
வந்த போதும்
பாவ மன்னிப்பை அளித்தது
ஏசு கிறிஸ்த்து அல்ல !
நீதானே அம்மா !
வீட்டுப் பாடம்
எழுதாத என்னிடம்
ஆசிரியருக்கும் பயம் !
ஒருநாள் அடித்ததை
அம்மாவிடம் சொன்னதிலிருந்து !
கல்லிலும் முள்ளிலும்
நடப்பது அம்மா மட்டும் தான் !
செருப்பு எனக்கு
மட்டும் தான்!
இரத்தமும் வியர்வையும் சிந்தி
காசாக்கும் வித்தை
அம்மாவுக்கு தெரியும் !
காசை தண்ணீராய்
செலவுசெய்யும் வித்தை
எனக்கு தெரியும் !
நீ உறங்கியதை
ஒருநாளும் கண்டதில்லையே
அம்மா!
எத்துப்பல் எனக்கு
அதுதான் உனக்கு
எடுப்பாய் இருக்கிறது
என்றாய்!
கருங்குரங்கு நிறம் எனக்கு
என் கருப்பசாமி
நீதான் என்றாய்!
படிக்காத மக்கு பயலாக
இருந்தேன் !
என்பிள்ளை அறிவாளி
என்றாய் !
எப்படி அம்மா?
உன் கண்களுக்கு மட்டும்
நான் அழகாகவும்
அறிவாகவும் தெரிந்தேன் !
பட்டினி கிடந்து
என் பசியாற்றினாய்!
களை பறித்த காசில்
கல்லூரிக்கு அனுப்பினாய் !
காதலிக்கிறேன் என்று
வந்து நின்றேன் !
நான் நல்லவன்
என்று வக்காலத்து
வாங்கினாய்!
வேலை கிடைத்தால்
எனைப்போல் வேதனை
உனக்கில்லை என்றாய்!
வேலை என்று
வெளிநாட்டு சென்றேன் !
காசு வந்ததும்
காதலியும் வந்தாள்!
அம்மாவின்
ஒற்றைசேலை மாற்றி
பட்டுசேலை
வாங்கி கொடுத்தேன் !
நினைத்த போது
பேச கைப்பேசி !
பொழுது கழிக்க
தொலைகாட்சி !
என்றே வாங்கி
கொடுத்தேன் !
அம்மா
இப்போது சந்தோசமா என்றேன்?
நீ வரும் தேதி சொல்
அதுதான் எனக்கு சந்தோசம் என்றாய் !
அம்மா உன் அன்பை
எப்படி சொல்லுவது என்று
தெரியாமல் ...
அன்புள்ள அம்மாவுக்கு
கோடீஸ்வரன்