விரல்கள்

உள்ளங்கையில் இருக்கும் விரல்களுக்கிடையே `யார் சிறந்தவர்? என்ற போட்டி வந்தது.

எல்லா விரல்களையும் விட நான்தான் சிறந்தவன்? என்று இறுமாப்புடன் கூறியது கட்டை விரல்.

இல்லை! இல்லை!! மற்ற விரல்களைவிட நானே உயர்ந்தவன். எனவே நானே சிறந்தவன் என்று பெருமை கொண்டது நடுவிரல்.

மனிதன் அணிகலனான மோதிரத்தை அணிவித்து அழகு பார்ப்பது என்னைத்தான். எனவே நானே உயர்ந்தவன் என்றது மோதிரவிரல்.

மனிதர்களுக்கு கடைக்குட்டியான செல்லப் பிள்ளைகள் மீதுதான் பிரியம்
அதிகம். எனவே உங்களைவிட நான்தான் கடைக்குட்டி. அதனால் செல்லப்பிள்ளையும் நான்தான் என்றது சுண்டுவிரல்.

ஆள்காட்டி விரல் மட்டும் எதையும் சொல்லாமல் மவுனம் சாதித்தது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உள்ளங்கை, உங்களுக்கு நான் சரியான தீர்ப்பு கூறுகிறேன் என்று விரல்களின் போட்டிக்கு
நாட்டாமை ஆனது.

நீங்கள் எல்லாம் யாருடைய கைகளில் விரல்களாக இருக்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பயன் கொடுக்கிறீர்கள். ஆனால் ஆள்காட்டி
விரல் மட்டும் திசை தெரியாமல் வரும் பிறருக்கும் `அதோ வழி’ என சுட்டிக்காட்டி உதவுகிறது.

பிறருக்கு உதவும் பண்பினை ஆள்காட்டி விரல் கொண்டிருப்பதால் அதுவே முதலிடம் என்று உள்ளங்கை தீர்ப்பளித்தது.

நீதி: பிறருக்கு உதவுபவர்கள் மட்டுமே என்றும் முதலிடம் பிடிக்கிறார்கள்.

நன்றி: ந.சிவநேசன்

எழுதியவர் : சிவநேசன் (8-Jan-14, 5:18 pm)
Tanglish : viralgal
பார்வை : 118

மேலே