சொத்து

மாஞ்சோலைக்குள்
மௌனமாக
நிமிர்ந்திருக்கும்
அந்த வீடு
கூட்டிப் பெருக்கி
நீர் தெளித்து
கோலமிட்டு
கோயில் போல்
இருக்கும் குடிசை

சாணி மணக்கும்
திண்ணையில்
சாக்குக் கட்டிலில்
நிகண்டு நளவெண்பா
ராமயணம் படித்து
பொழிப்பு கூறும்
கந்தப்பா.

ஆடும் மாடும்
கோழியும் குஞ்சும்
குழந்தைகளாய்
சுற்றி வரும்
மயிலம்மாவை.

காலாற பாட்டியுடன்
நடந்து போன நாட்களில்
மயிலம்மா வீட்டில்
வெயிலுக்கு வயிறார
குடித்த மோர்
இன்னும் ஞாபகத்தில்.

இருபதாண்டு
கால ஓட்டத்தில்
பஞ்சு போல் பறந்த
நாட்கள்....
உள் மனம்
ஊமையாய் அழுதது.

மயிலம்மா வீடு
மாஞ்சோலை
முள் முருக்கம் வேலி
கமுக மரம்
எதையும் காணவில்லை.
இதயம் இரும்பாக கனத்தது.

மண்மேட்டில்
முளைத்து நின்ற
எருக்களைச் செடிகளின்
அடியில் துருப் பிடித்து
மக்கிக் கிடந்த
கந்தப்பரின் பாக்கு
உரலைத் தவிர எதுவும்
அந்த சந்ததியின்
வாழ்வைகூறவில்லை.

கையில் எடுத்த உரல்
கந்தப்பர் ஞாபகமாய்
வாழும் நாள் வரை
வாழட்டும் என்னோடு!

எழுதியவர் : வளவன் (9-Jan-14, 10:25 am)
Tanglish : soththu
பார்வை : 56

சிறந்த கவிதைகள்

மேலே