வெண்ணிலாக் கோதை

விண்ணில் உறங்கும் வெள்ளி நிலாவே
கன்னி யவளைப் பார்த்தாயோ ?
கண்ணில் பொன்னைத் தரித்த அழகியின்
தங்கக் குரலைக் கேட்டாயோ ?

மண்ணில் பாதம் படுகையில் பாடும்
மாணிக்கக் கொலு சொலியெல்லாம்
பண்களுக்கே நிகராக வைத்தால்
பண்ணும் தோற்கும் அறிவாயா ?

எண்ணில் எழுத்தில் என்றும் அவளே
ஏழு வண்ணம் தரித்தாளே ! இன்ப
வெண்ணிலாவே உந்தன் பாதி அந்த
அழகு மங்கையின் நெற்றியிலே !

கண்ணனுக்குப் பிடித்த மங்கை !
வேய்ங்குழல் போல் இனிப்பாளே !
மின்னல் நடையும் கொண்டாள் தாகம்
மீறும் போது தணிப்பாளே !

எழுதியவர் : விவேக்பாரதி (9-Jan-14, 9:33 pm)
பார்வை : 179

மேலே