வேர் என்றே செல்
முன்னோர் சொன்னது யாதும் ஊரே..
அதன்படி.. நீ அன்புடன் உறவாடி..
பார்.. பரந்த மனதுடன் பார்..
பார்தன்னை நீ பகலவனாய் பார்..!!
முன்னேற சொன்னது திரைகடல் ஓடியே..
எனவே.. தேவை என்பதைத் தேட நீ..
சேர்.. சேரிடம் அறிந்து சேர்..
சிந்தனை பல கொண்டு வந்து சேர்..!!
நல்லோர் நயம்பட சொன்னது
கூடி வாழ்ந்தால் கோடி நன்மையாம்..!!
அந்த நன்மைகளை சேர்ந்து நாம்
பெற்றிடுவோம் ஒற்றுமையை..!!
வழிதேடவே எறும்பும் பிரிந்து போகும்..
கிடைத்துவிட்டால்.. உணவைப் பெற்றிட..
வழியதனில் ஒன்றாய் தொடர்ந்து போகும்..!!
வழி வழியாக தொடர்ந்து வரும் மரபிது..!!
உடைத்துக் கொண்டு போனால்
உன் அடையாளம் உனக்குத் தெரியாது..!!
உடைத்துவிட்டுப் போனால்
நம் அடையாளம் எவர்க்கும் தெரியாது..!!
எனவே தமிழா..
நீ(ர்) செல்லும் திசையினில் வேர் என்றே செல்..
நம் தமிழ் மரம் அதனை
செழுமையாய் வளர்த்திடலாம்.. என் தோழா..!!
-- வெ. கண்ணன்.
13 சனவரி 2014