கல்லணைக்கோர் பயணம்003

கல்லணைக்கோர் பயணம்..003
தோட்டத்தின் தோள்களில்
சாய்ந்திருந்த கிளைகளில்
காய்த்திருந்த காய்களில்
ஐந்தை மட்டும் பறித்தனர்..
உறங்கிக் கொண்டிருந்த
மாஞ்சருகுகளின் ஒலி
எனக்கு எதிர்திசையில்
மறைந்து கொண்டே செல்ல
உறுதியானது ஏதோ பிரச்சனையென்று..
திட்டமிட்ட இடமாகிய
சங்களிகருப்பு கோவிலை அடைந்தேன்
மாற்றுப் பாதையில்
மூச்சு திணற திணற..
ஓடி வந்து பார்க்கையில்
நால்வரும் ஆளுக்கொன்றை
திருப்தியாய் தின்றுவிட்டு
என்பங்கை மட்டும்
வைத்திருந்தனர் சிரிப்புடன்..
என்னாச்சுடா.. என்றபோது
உன்னை பயமுறுத்தவே
அப்படி செய்தோமென்றனர்
யாரும் துரத்தாமலே
ஊரே துரத்தியது போல்
ஓடிவந்த நான்
வெட்கி தலைகுனிந்தேன்
தைரியத்தின் முன்..
திருட்டு மாங்காய்க்கு
ருசி அதிகமாமே..!
எஞ்சிய மாங்காயை
ஆம்.. கல்லாமணி
மாங்காய் அது
தோலும் இனிக்கும்
தேவாமிர்த செங்காயை
கோவிலின் முன்
சாப்பிடுவது குறுகுறுத்தாலும்..
சாராயமும் சுருட்டும்
படைக்கப்படும் சங்களிகருப்புசாமி
சகமனிதன் ஆகிப்போனார்
எங்களுக்கு அந்நாட்களில் ..
ஊரை மதுரைவீரன்
இரவில் குதிரையில்
காவல் காப்பதாய்..
நப்பிக்கை எங்களுக்கு
நம்பிக்கையிலும் அனுபவத்திலும்
கடவுள் காட்சியளிப்பது
உலகறிந்த உண்மைதானே..
தெருவில் யாரும்
படுப்பது அரிது
அப்பட்டியே படுத்தாலும்
கட்டில் ஓரங்கட்டப்பட்டிருக்கும்
என்பது ஊர்பேச்சு..
ஊர் எல்லைவரை
மதுரை வீரனும்
கொள்ளிட பயணத்திற்கு
சங்களி கருப்பும்
கூடவே பயணிப்பதுபோல்
நெஞ்சுக்குள் நிம்மதி
எப்போதும் பயணத்தில்..
( பயணிப்போம்.. 03)
புகைப்படங்கள்: Suresh Nagasen