இன்னொருமுறை,,,

இன்னொருமுறை,,,

வினவலில் கண்ட அந்த ஒருநாள்
விரகங்கள் இட்ட கோட்டை மறவா
பொழிந்திடும் காமன் கானமழையில்
அவள் குழலிலே குளித்த வைகையிவனே

மருண்டிடும் பார்வை மறந்த விடியல்
பருகுமோ காற்றும் உந்தனழகை
உருகுமோ தேனும் பனியின் விழியில்
இணைந்த தாழ் சொல்லும் கதையுமழகே

கனிநிறைக் கொண்ட இதழ் மலரால்
கிறக்கங்கள் தழுவ எனை யிழந்தேன்
இரவுகள் தின்ற கொஞ்ச சிலநாள்
மறக்குமோ சிதையில் வேகும்வரையில்

சிணுங்கல்கள் தந்த உந்தனுறவில்
சிறைப்பட நாடி வந்த பறவை
சிதறலாம் காவல் மீறும் தருணம்
சிதையுமே யாவும் கண்ட எழிலில்

குறையுதிர்ப்பார்வை குறிகள் பிடுங்கி
எனதுநாள் பறித்த வினையென்னடி
தொடருமோர் யாக வளர்நிசியில்
என் இடைவெளித்தளர உனைப்புதைத்தாய்

நேரிழை யொதுக்கிக் கண்ட பிறையால்
பேரிழை யொன்று உயிரை இறுக்க
பெரும்பிழைச் செய்த நொடிகள் சொல்லவா !!
பின் எழுந்த நாளெனக்குப் பகலல்லவா !!

மருவியப் பாதையில் சென்ற நினைவா
மறைவிலே நின்று பார்த்த நிறைவா
மறுத்ததால் இன்று இந்த தொலைவா
மரணந்தான் என்னிலென்று இறைவா ?

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (16-Jan-14, 5:02 am)
பார்வை : 82

மேலே