இயல்பை மீட்போம்

கரிசல்க் காடிது விரிசல் விட்டதோ!
காய்ந்து சுட்டதால் ஓய்ந்து பட்டதோ!
நெரிசல் இல்லா நீண்ட பூமியோ!
நித்திய அமைதியில் நிறைந்து கிடக்குதோ!
வானம் பொய்த்தும் கானம் தொலைந்ததோ!
வருடும் தென்றலும் வறண்டு அலையுதோ!
ஊனம் ஆனதோ உழவுத் தொழிலுமே!
உதவும் பாங்கதும் ஊரும் மறந்ததோ!
பசுமை அலைகளும் விசும்பல் ஆனதோ!
பறவை இனங்களும் பறந்து போனதோ!
நஞ்சை புஞ்சைகள் நகரம் ஆகுதோ!
கஞ்சிக்கு அலையும் காலம் தோணுதோ!
பெய்தால் வெள்ளமாய்க் கொட்டிப் பொழிவதும்
பொய்த்தால் நெருப்பாய்க் கொட்டிச் சுடுவதும்
இயற்கை மாறிய விதிதான் என்ன?
இயல்பு மீறிய சதிதான் என்ன?
சமநிலை கெடுத்த சண்டாளர் ஆனோம்.
சமைந்த இயற்கை அமைதி காணோம்.
இயற்கை போற்றி இயல்பை மீட்போம்.
இவ்வுலகை இருத்தி இனிதே வாழ்வோம்.
கொ.பெ.பி.அய்யா.