இப்படியே தொடரப்போவதில்லை இந்த நாட்கள் பொங்கல் கவிதைப் போட்டி

"அ" என்னும் ஆதி எழுத்தின் உறவுகள் நாம்;
வரலாற்றின் முகவரியும் நாம்;
அந்நியத் திணையிலும் நம் ஐந்திணைகள்.
யாதும் ஊராய்...யாவரும் கேளிராய்..இப்பொழுதும்.

"பிறப்பொக்கும்"...சிதைந்த நூற்றாண்டுகளில்...
நம் வாழ்வின் நாக்கு கரையான்களால் ஆனது.
அது...தின்று ருசித்த பக்கங்களில்
கறையாய் எம் இனத்தின் செரிக்காத துயரம்.

வாளேந்திய (அ)சிங்கங்கள் சூதால் வென்றுவிட
அறைந்து சார்த்தப்பட்ட கதவுகளுக்கப்பால்
களைத்து நிற்கிறது நம் காலம்.
கோர்த்த நூல் அறுந்து சிதறிய மணிகளாய்...
உதடுகளும் ஓட்ட மறுக்கும் "அகதி"ச சொல்லாய்
உலகின் வீதியெங்கும் என் வேறு முகங்கள்.

துயரங்கள் வழியும் இந்தக் கணத்தில்...
தீயாடும் சொல்லாய் நீ....
திசையற்ற வெளியில் சிறகுகள் கருகியபடி.

"இழந்தவை போதும்.இருப்பதை நினை.."-வரலாறு.
"எடுக்கவோ...கோர்க்கவோ.." ஏதுமில்லை நமக்கு.
சிலுவைகளும்...ஆடுகளும்...இனி...
மறு கன்னத்தைக் காட்டச் சொல்லாதிருக்க..
போதிமரங்களால் நமது கரங்கள் நாணேற்றும் ...

புதிய சூரியனில்...
இப்படியே தொடரப்போவதில்லை இந்த நாட்கள்.

எழுதியவர் : rameshalam (17-Jan-14, 1:07 pm)
பார்வை : 88

மேலே