கைநாட்டுக் கவிதைகள் 39

தலை தீபாவளி!
புள்ளைக
கொண்டாடுவதற்காக
அப்பன் ஆத்தா
கெடந்து திண்டாடுறத
பார்த்ததால என்னமோ...
'தீபாவளி'ன்னாலே
சின்ன வயசிலிருந்தே
எனக்குப் புடிக்காது...
பட்டுப்புடவையை
கட்டிக் களிக்கிற
மேட்டுக்குடி ஆளுகளுக்கு
வேணும்னா தீபாவளி
பண்டிகையா இருக்கலாம்
ஆனா,
கந்துவட்டிக்கு
கடன் வாங்கி
சாலையோர
சந்தையில
தள்ளுபடியில
துணிவாங்கி
கண்­ணீர் சிந்திப்
பொழைக்கிற
ஏழை பாழைகளுக்கு
வருசம் தவறாம
வந்து போற
'தீராதவலி'தானே!
மச்சு வீட்டுக்காரங்க
கொளுத்திப்போட்ட
சரவெடியில
வெடிக்க மறந்து
உதிர்ந்த மிச்சத்த
பொறுக்கி
தங்களோட
பட்டாசு ஆசைகளை
தணிச்சுக்குது
ஒரு கூட்டம்...
அப்பல்லாம்
எங்க ஆத்தாவோட
அரைப்பவுன் தோடு
அடகுகடைக்குப்
போனாத்தான்
எங்களுக்கு
புது டிரஸ்
வீடு வந்து சேரும்
ஏற்றத் தாழ்வுகளை
ஏகத்துக்கும்
பட்டவர்த்தமா காட்டுற
பணக்கார
பண்டிகையா பட்டதால
'தீபாவளி'ன்னாலே
ஒரு பிடிப்பில்லாம போச்சு;
ஆனா,
எனக்கு
இது 'தலை தீபாவளி'
இன்ஜீனியரு
மாப்புளைன்னு
மாமனாரு
கையளவு கரைவச்ச
பட்டுவேட்டி சட்டை
எடுத்திருக்காரு!
அடுப்படியே
கெடைன்னு கெடந்து
அதிரசம் முறுக்கு
தேன்குழல் சீடைன்னு
மாமியாரு
அண்டா பூராவும்
பலகாரமா ரொப்பி
வச்சிருக்காக!
மச்சினனோ
சிவகாசி போயி
அணில் மார்க்
கம்பெனியிலேயே
அய்யாயிரம் ரூபாய்க்கு
வெடி வாங்கி
லோடு வண்டியில போட்டு
வீடு வந்து
சேந்திருக்கான்!
வீடே திருவிழாக் கோலந்தான்!
ஆனா,
எனக்கு
மனசு கெடந்து
அலை பாயுது
பொறந்ததிலிருந்து
அப்பான் ஆத்தாவோடவே
இருந்திட்டு...
புதுசா பண்டிகையும் நாளுமா
தலை தீபாவளின்னு
மாமனாரு வீட்டுல வந்து
கெடக்குறது
மனசுக்கு
சங்கடமா இருக்கு...
சலும்ப, சலும்ப
அப்பா தேச்சுவிடும்
நல்லெண்ணெய்...
அத... தலையிலிருந்து
அப்புறப்படுத்த
புலிமார்க் சீயக்காயை போட்டு
பலங்கொண்ட மட்டும்
தேய்ச்சு குளிப்பாட்டும்
எங்க ஆத்தா!
பலகாரமா
சுட்டிருக்கே!
நீ பலகாரத்தை
பார்த்ததே...
என்னையை
கட்டிக்கிட்டு இங்க வந்த
பொறகு தானேன்னு
அப்பாவோட நையாண்டியும்...
அதுக்கு ஆத்தா காட்டும்
'போலிக் கோபமும்'
இப்படி,
எங்க வீட்டை நோக்கியே
கெடந்த,
என் நெனப்பை
மாமனாரு வந்து
கலச்சு எழுப்பனாரு...
என்ன மாப்ளே!
ஒரு வருசம் ஒங்க
தாய் தகப்பனை
விட்டு இருக்கிறது
ஒங்களுக்கு கவலையா
இருக்குதாக்கும்...
ஆனா இத்தனை வருசமா
நாங்க வளர்த்த
எங்க பொண்ணு
எங்களோட கொண்டாடுற
கடைசி தீபாவளி
இதுதானே!
ஒங்களுக்கு இது
தலை தீபாவளி..
எங்களுக்கு
இது தலை போற
தீபாவளி...
ஒரு தலை
எங்களவுட்டு போற
தீபாவளி இது
அதனால தான்
பொண்ண பெத்த
ஒவ்வொருத்தனும்
கடன ஒடன
வாங்கியாவது
மொதல் தீபாவளியை
மொகம் மலர
கொண்டாடுறது வழக்கம்...
தலை தீபாவளியை
மனசுல வச்சிக்கிட்டு
ஒவ்வொரு தீபாவளியையும்
பொண்டாட்டி புருசன்
சந்தோசம் கொறையாம
கொண்டாடனும்தான்
இவ்வளவும்!...
ஒரு காலத்துல
வறுமையில
திண்டாடுனதுக்காக
வளமையில்
கொண்டாடுறது தப்பில்ல
பழச மறக்காம
புதுச பழகிக்கிறது
குத்தமில்ல
மனசால
செல்வந்தர் ஆயிட்டோம்னா
குடிக்கிற கூழும் கூட
பாதாம் அல்வா தான்
குடியிருக்கிற குடிசையும்
'கோட்டை' மாதிரிதான்
மாமனாரு
சொன்ன வாக்கியங்கள்
என் வைராக்கியத்தை
ஒடச்சிப் புடிச்சு...
மகிழ்ச்சிங்கிறது
கட்டுற
துணியில இல்லை
வெடிக்கிற பட்டாசுல
இல்லை
மத்தாப்பா சிதறுற
மகிழ்ச்சி நெறஞ்ச
மனசுல தான்னு
புரிஞ்சு போச்சு
எனக்கு
இது தலை தீபாவளி
மட்டுமில்ல
பலவருச தலைவலி
போக்குன தீபாவளியும் கூட!

எழுதியவர் : (18-Jan-14, 4:27 pm)
பார்வை : 53

சிறந்த கவிதைகள்

மேலே