தங்கும் இடம்

நல்ல மழை!
நடுவீதியில் நான்,
புதிய செருப்பு
புதைந்தது சேற்றில்!

விடமாட்டேன் என
நான் இழுக்க,
வரமாட்டேன் என
அது மழுப்ப,

இறுதியில் வெற்றி
எனக்கே!
இருந்தாலும் இழப்பும்
எனக்கே!

காலை அலங்கரிக்க
வேண்டிய செருப்பு!
இப்போது அலங்கோலமாய்
என் கையில் இருப்பு!

நல்ல வேளையாய்,
பக்கத்தில் என் நண்பன் வீடு!
பிய்ந்துவிட்ட என் செருப்பு
ஒருநாள் மட்டும்

தங்க இடம் கேட்டு
தஞ்சம் அடைந்தேன்!
தாராளமாய் என்றவன்
தன் செருப்பையும்
இரவலாய் தந்தான்!
=====================
=====================
=====================

நல்ல மழை!
நடுவீதியில் நாங்கள்
தாத்தாவை சவமாக
தோளிலே தூக்கிக்கொண்டு!

அட! என்ன ஆச்சரியம்!
நல்ல வேளையாய்,
பக்கத்தில் அதே நண்பனின் வீடு!

கேட்க மனமின்றி....
கேட்டும் விட்டேன்,
ஒரு இரவு மட்டும்
தாத்தாவின் சவம்
தங்க இடம் கொடு!

வாய்க்கு வந்தபடி
வசைபாடி தீர்த்தான்!

நல்லவன் தான்
என் நண்பன்
புரிய வைத்தான்
ஒரு உண்மை!

பிய்ந்து விட்ட பின்னும் செருப்பிற்கு
கிடைக்கும் இடம் கூட
உயிர்
பிரிந்து விட்ட பிறகு மனிதனுக்கு
கிடைப்பது இல்லை
ஓரிடமும் பூமியின் மேல்!!!

எழுதியவர் : உமர்ஷெரிப் (21-Jan-14, 11:41 pm)
பார்வை : 103

மேலே