என் கதைச் சுருக்கம்
ஓர் அழகிய காடு - அது
தென்னை மரக்காடு
நடுவில் ஒரு வீடு - அது
நாங்கள் வாழ்ந்த கூடு.
ஆடும் அங்கே வாழ்ந்ததுண்டு
மாடும் அங்கே மேய்ந்ததுண்டு
கோழி நாங்கள் வளர்த்ததுண்டு
நன்றி கொண்ட நாயுமுண்டு
தூரி ஆடி விளையாட
வடக்கிலொரு புளியமரம்
துள்ளி குதித்து மிதந்தாட
கிழக்கிலொரு பெருங்கிணறு
அமர்ந்து இளைப்பாற
மேற்கிலொரு வேம்பு மரம்
கிரிகெட் விளையாட
தெற்கிலொரு வேம்பு மரம்
இது எங்கள் மேகச் சூழல்
அதில் நட்சத்திரங்கள் நாங்கள்
தந்தைக்கு வயதோ எண்பத்திரண்டு
கொண்ட பிள்ளை ஓராயிரத்திரண்டு
முதலாயிரம் தென்னம்பிள்ளைகள்
மீத கணக்கில் நானும் தமயனும்
விடிய விடிய பார்த்த கிள்ளை
வேலி கட்டி வளர்த்த பிள்ளை
தண்ணீர் விடாத நாளே இல்லை
சாட்சிகள் அங்கே இருந்ததில்லை
மரங்கள் என நினைத்ததில்லை
உறவுகள் என்றால் மிகையுமில்லை
பத்திரத்தில் பெயருமில்லை
எனவே எங்களுக்கு உரிமையில்லை
அறுபது வருட சலிப்புமில்லை
ஓர்நாளும் அலுத்ததில்லை
நடந்தே சுற்றுவார் விழுந்ததில்லை
இனிமேல் அவருக்கு வேலையில்லை
விற்று போக முதல்வர் முடிவு செய்தார்
சற்றே தந்தையும் மனம் தளர்ந்தார்
கற்ற நாங்கள் உணர்ந்து கொண்டோம்
பெற்ற அவரோ கண்ணீர் விட்டார்
நன்றி கூறி விடையளித்தார்
பொருளும் கொஞ்சம் கொடையளித்தார்
வேலி தாண்டும் முடிவை கேட்டார்
காலி செய்ய தேதி சொன்னார்
வளர்த்த தந்தை பிரிவது கண்டு
தென்னம்பிள்ளை அழுததுண்டு
ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை
கொடுத்து வாங்க பொருளுமில்லை
நாட்டை விட்டு போகும் போது
அகதிகள் என்று அழைப்பதுண்டு
காட்டை விட்டு போகும் நாங்கள்
அகதிகள் என்றால் அர்த்தமுண்டு
காடு முழுதும் விற்கப்பட்டன
மரங்கள் யாவும் வெட்டபட்டன
கட்டிடங்கள் கட்டப்பட்டன
வாழ்ந்த குறிப்பும் அகற்றப்பட்டன
எம் கதை முழுதும் சொல்லப்பட்டன
[ சுமார் அறுபது வருடமாக என் தந்தை ஒரு காட்டை பராமரித்து வந்தார், அவரே உருவாகிய தென்னை மரத்தோட்டம் அது.
2010 ஆண்டு அதை விற்க முடிவு செய்து விற்று விட்டார்கள் ..
இப்போது அது ஒரு மனை இடங்களாக காட்சி அளிக்கிறது.
புதிய வீடுகள் கட்டப்பட்டும் விட்டன. 1000 தென்னை மரங்களும் அளிக்கப்பட்டு விட்டன.
தனக்கு இடம் சொந்தம் இல்லை என்றாலும் மரங்கள் யாவும் என் தந்தையின் குழந்தைகள் தான்]