-கருத்திலே பூத்தது திரு ஹரிஹர நாராயணனுக்குப் பாராட்டு
இது யாரையும் புண்படுத்த எழுதப்படவில்லை. பல சமயங்களில் பிறருடைய நல்ல கவிதை வரிகள் நம்முள் எழுதிப் பார்க்க ஒரு உந்துதலை ஏற்படுத்துகின்றது என்பதற்கு ஒரு சாட்சியாகவே இது இங்கு பதியப் படுகிறது.
இனி கவிதை:
==== புது விடியல் =====
------(எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)----
தொட்டெழுப்பி மொட்டுகளைத் துடிக்க வைக்கும்!
==தூக்கமில்லை ஏக்கமதைத் தூக்கி வீசும்!
கட்டிவைத்த மணமெல்லாம் கதிராம் கைகள்
==கட்டவிழ்த்து விடுவதனால் காற்றும் நாறும்!
முட்டிவந்து மோதுகின்ற வண்டின் கூட்டம்
==மொட்டுகளின் உயிர்த்தேனை உறிஞ்சி யோடும்!
தட்டியெமை எழுப்பிடுமாம் தேர்தல் காலை;
==தயங்காமல் கொடுப்போம்!பின் காத்தி ருப்போம்!
வருமிந்த காலைகளுக் காகத் தானே!
==மதுவேந்தும் மக்களென நிற்கின் றோம்,நாம்
தருகின்ற நன்மைகளை எண்ணித் தானே
==தயங்காமல் உழைப்புமணம் வீசு கின்றோம்!
விரிகின்ற காட்சியெலாம் நன்மைக் கென்றே
==வியக்கின்றோம்! கட்சிகளை வரவேற் கின்றோம்!
புரிகின்ற(து) இங்கெவரும் எதிராய் இல்லை!
==புதிரன்று! புதுவிடியல் பிறந்தால் நன்றே!
====
172526-என்ற எண்ணின் கீழ் ஒரு கவிதை எழுதி இந்த உந்துதலை எனக்குள் ஏற்ப்படுத்திய திரு. ஹரிஹர நாராயணன் - அவர்களுக்கு எனது பாராட்டுகளை மட்டுமல்ல நன்றியினையும் சமர்ப்பிக்கின்றேன்.
==== ======