நடுகை

"முன்னால் வாழத் தோப்பாக்கிடந்த இடந்தானே இதெல்லாம்?"

முதலில் அவர் மண்வெட்டியை உபயோகிக்கவில்லை. குனிந்து குனிந்து ஒவ்வொரு "பார்த்தீனியம்" செடியாகப் பிடுங்கிப் போடஆரம்பித்தார்.

"மேலெல்லாம் ஊறல் எடுக்கும்னு சொல்வாங்களே" என்று சொன்னபோது அவர் சிரித்தார்.

"ஊறல் எடுக்கும்னு பயந்துக்கிட்டே பூடுங்கினா ஊறல் எடுக்கத்தான் செய்யும்" - இரண்டு கையிலும் மாறி மாறிப் பிடுங்கப் பிடுங்க, ஐந்து நிமிடத்துக்குள் இரண்டு கொத்துச் சேர்ந்து விட்டது. இங்கேயிருந்து எட்டித் தூர வீசினது எல்லாம் காம்பவுண்ட் சுவரில் மோதி மண்ணுதிர விழுந்தது.

"பச்ச நாவியை நட்டு வச்சிட்டுப் பிடுங்கினாக் கூட மண்ணு வாசனை மண்ணு வாசனைதான். அது புல்லுண்ணு அள்ளுதா. புழுவுண்ணு தள்ளுதா" - யார் முகத்தையும் பார்த்துப் பேச வேண்டிய அவசியம் அவருக்குக் கிடையாதுபோல. நான் ஒப்புக்கு இப்படி நடையில் நிற்கினேறே தவிர என்னைப் பார்க்கவே இல்லை.

வழக்கம் போல, மஞ்சனத்தி மூட்டில், அவர் கன்றுக்குட்டியைக் கட்டினதோடு சரி. "சுத்தம் பண்ணிவிடலாமா?" என்று கேட்கக் கூட இல்லை. மண்வெட்டி மாத்திரம் வரும்போது தோளில் இருந்தது.

நேற்று நல்ல மழை. மழை பெய்கிறதற்குத் தேர்ந்தெடுக்கிற நேரம் எப்போதுமே அழகாகத்தானே இருக்கும். நல்ல வெயிலடித்த ஒரு நாள் முடியும்போது, சாயந்திரம் ஆறு ஆறேகாலுக்கு ஆரம்பித்தது அது. வெளிச்சம் இருக்கும்போது துவங்கி, அடர்ந்து பெய்கையில் இருட்டி விட்டிருந்தது. காற்றோ இடியோ இல்லாமல், நிர்ணயித்து வைத்த வேகத்துடன் அது கொட்டக் கொட்ட சாலையிலிருந்து பள்ளமான இந்தத் தெருவுக்குள் தண்ணீர் வழிய ஆரம்பித்தது. பப்பாளி மரத்தில் ஒரு காகம் இருந்து கத்தியது. ஒரு ஆட்டோ "விசுக்"கென்று பிள்ளைகளுடன் சீறியது. புதிதாகச் சாலை முனையில் கட்டப்பட்டிருக்கிற வணிக வளாகத்தின் தாழ்வாரங்களில் ஒதுங்கிக் கொண்டிருந்தவர்களும் தலையைக் குனிந்தபடி ஓடுகிற தண்ணீரையே பார்த்துக் கொண்டு நின்றார்கள். மேல் துண்டால் தலையை மூடிப்போர்த்தி நனைந்து கொண்டே வருகிறவரை இங்கிருந்து பார்க்கும்போதே அடையாளம் தெரிந்துவிட்டது. மாட்டைத் தேடி வருகிறாரா? மாடு மேய்ந்து கொண்டிருக்கிறதாக இருந்தால், பஞ்சு மிட்டாய்க்காரன் மணி மாதிரி சத்தம் கேட்டுக் கொண்டே இருந்திருக்குமே. இன்றைக்கு இல்லையே.

எதிர்ச் சாரியிலிருந்து குறுக்கே சாடி, இந்த வீட்டுக்கு அவர் தாவிவர முயன்றபோது, அதே வேகத்தில் ஒரு ஆட்டோ அவரை மோதித் தள்ளிவிடுவது போலப் பாய்ந்து, சடக்கென்று வளைந்து திரும்பி மேடு ஏறிச் சாலைக்குப் போய் மறைந்தது.

"பார்த்துக் போ...... பார்த்துக் போ" - அவர் வாசல் கதவைத் திறக்கும்போது பதற்றத்தில் இரண்டு அடி கீழே இறங்கி, " என்ன தாத்தா, ஆளை அடிச்சுக் கொல்லப் போகிற மாதிரி அவன் போகிறான். நீங்க என்னடான்னா "பார்த்துப் பார்த்து"ன்னு என்னமோ ஆசிர்வாதம் பண்ணிவிட்டு வாரீங்களே. ரெண்டு திட்டுத் திட்டினால் என்ன?"

முக்காடு போட்டிருந்த துண்டைப் பிழிந்து கையில் வைத்து உதறிக் கொண்டே அவர் சொன்னது நன்றாக இருந்தது.

"தண்ணியைப் பார்த்தா பயம் வேணும்னா வரலாம். கோபம் வரலாமா? எப்பமாவது உனக்கு தண்ணியைப் பார்த்துக் கோபம் வந்திருக்கா? சொல்லு. அதுவும் இது மழைத்தண்ணி, பள்ளம் எங்கே எங்கேண்ணு ஓடியார தண்ணி" - என்று சொல்லிக்கொண்டே துண்டை மறுபடி ஒரு உதறு உதறினார். "அவன் அவசரம் அவனுக்கு" என்று மீண்டும் சொன்னார்.

"புள்ளைகள்ளால் இன்னும் வரலையா?" என்றார்.

""நான் வந்த விஷயம் வேறே. இந்த இடத்தையெல்லாம் சுத்தம் பண்ணணும்னு என்னிக்கோ சொன்னியே. மம்பட்டியோட நாளைக்கு வாரேன்".

"இதைச் சொல்லுறதுக்கா இப்படி மழையிலே நனைஞ்சுகிட்டு வந்தீங்க?"

"ஒவ்வொண்ணுக்கும் ஒரு முறை இருக்குல்லா, தாயி" - என்று மறுபடியும் முக்காடு போட்டுக் கொண்டு, வெளிக் கதவைத் தள்ளினார். மழை பெய்யும்போது, கதவு திறப்பதும் மூடுவதும் கூட வேறு மாதிரி இருந்தது.

அப்போது அவர் அவ்வளவு பழக்கமாகவில்லை. சொல்லப்போனால், அவரைச் சத்தம் போடுகிற சந்தர்ப்பமாக அது இருந்தது. காலிமனையாகக் கிடக்கிற அடுத்த இடத்தில் செடி கொடிகள் அதிகம். அதற்குப் பின்னால் இதே போல் காலியாக இருக்கிற இன்னொரு மனையின் முட்கம்பியை நெகிழ்த்திக் கொண்டு இருட்டுகிற நேரத்தில் இவர் பசுமாட்டை ஓட்டியபடி வருவதும், அந்தப் பசுவின் கழுத்தில் அந்தப் பஞ்சு மிட்டாய் மணி அடிப்பதும், அது போடுகிற சாணி குப்பம் குப்பமாகக் கிடப்பதும், அப்படி ஒரு நாளில், இன்னும் சற்று இருட்டின நேரத்தில், இவர் "ஹாவ், ஹாவ்" என்று சத்தம் கொடுத்துக் கொண்டு நடமாடும்போது, இரண்டு நாட்களுக்கு முன்பக்கத்து டாக்டர் வீட்டில் யாரரோ சுவர் ஏறிக் குதித்து விட்டதாகச் சொல்யிருந்த பதற்றத்தில் - "யாரது?" என்று நான் அதட்டியபோது

"கண்ணுக்குட்டியைக் காணோம். தேடுதேன் தாயி" என்றார். எருக்கலஞ் செடிகளுக்கும், வேலிக் கருவைக்கும் இடையில் இன்னும் ஒரு புதர் போல அவர் அசைந்து கொண்டு பதில் சொன்னார்.

"கண்ணுக்குட்டியைத் தேடுகிற நேரமா இது?" - மறுபடியும் அதே அதட்டல். பயத்தை மறைக்க எழுப்புகிற உரத்த குரல்.

"இப்ப தொலைச்சிட்டு, நாளைக்கு உதயத்திலேயா நீ தேடுவே? சொல்லு" - வேறு திசைகளில் திரும்பித் திரும்பித் தேடிக் கொண்டே எனக்கும் ஒரு பதில் வந்தது.

"என்ன மரியாதையில்லாமல் போயிட்டிருக்கு பேச்சு?"

"நான்"லா அதைச் சொல்லியிருக்கணும்" - என்று இருட்டுக்குள் இருந்து பதில் வந்தது. "ஹாவ், ஹாவ்" - என்கிற சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டுக்குள் தேடிக் கொண்டே நகர்ந்து போனது.

மறுநாள் தபால்காரர் வருகிற நேரம். மணி அடிப்புக் கேட்டுக் கதவைத் திறந்தால் இவர். பாசிப் பயிறுக் கலரில் ஒரு கிழிந்த ஸ்வெட்டர். முழுக்கை ஸ்வெட்டருக்கும் வெளியே தெரிகிற நீலநிறச் சட்டை, வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். ஒரு காலில் ஒரு ஹவாய்ச் செருப்பு. வலது காலில் இன்னொரு நில ஹவாய்.

"கண்ணுக்குட்டி கிடைச்சுட்டுது, தாயி" என்றார். நெற்றியில் பச்சை குத்தியிருந்தது. பழுக்கப் பழுக்க நரைத்த மீசை. கண் இடுங்கி, பார்வை அப்படியே குளிர்ந்து கிடந்தது.

தான் யார் என்று அவரே முடிச்சை அவிழ்ப்பது போல், "நேற்று ராத்திரி வீட்டுக்குப் போய்ச் சேர்கிறதுக்குள்ள, இது போய்த் தொழுவத்தில் ஒண்ணுந்தெரியாதது. மாதிரி நின்னுக்கிட்டு இருக்கு. இருட்டுக்குள்ளே நேத்து முகம் தெரிஞ்சிருக்காட்டாலும் உனக்கு நான் தகவல் சொல்கிறதைச் சொல்லணும்லா" - இதைச் சொல்லும்போதே "கீணூங்" என்று மணிச்சத்தம் கேட்டது. ஒரு மாதிரித் தகர மணி. மறுபடியும் "கிணூங்" என்று கேட்கிறபோது, "தேடுனது இந்தக் கண்ணுக்குட்டியைத்தான். உன் வீட்டுக்கு எதுக்கே மஞ்சணத்தி மூட்டுலதான் கட்டிப் போட்டிருக்கேன்"

நான் அந்தச் செவலைக் கன்றுக்குட்டியையே பார்த்தேன். அது குனிந்து, தலையை அசைத்து அசைத்துப் புல்லை மேய்ந்து கொண்டிருந்தது.

"அழகா இருக்குல்லா. இதுக்கு அம்மாக்காரி இதை விட அழகு" என்று சொல்லி விட்டு நடையை விட்டு இறங்கி "ஹாவ். ஹாவ்" என்றார்.

"கிணூங்". குனிந்த தலை நிமிர்ந்து மான் மாதிரித் திரும்பியது. காது விடைத்துச் சிலிர்த்து உயரமாகி, சத்தம் வந்த திசையைப் பார்த்தது. காதில் ஓடின நரம்புப் புடைப்பும், காதோர விளிம்பின் கீற்று முடிகளும் அவருடைய குரலைத் தேடின. அசையாமல் நின்று பார்வையுடன் மினுங்கிய கண் அபூர்வமாகப் பளபளத்தது. அவர் எருக்கலஞ் செடிக்குப் பக்கத்தில் இறங்கினார். வெளிப்பார்வைக்குத் தெரியாத ஒற்றையடித் தடங்களை அவரைப் போல ஆட்கள்தான் உண்டாக்கி இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி அவர்.

"இன்றைக்குப் பள்ளிக்கூடம் கிடையாதுல்லா உம் பிள்ளைகளுக்கு?" - வந்து நின்றதுமே கேட்டார்.

"என்ன பண்ணிக்கிட்டு இருக்கு வீட்டுக்குள்ள?"

"டீவி பார்த்துக்கிட்டு இருக்கும். இல்லை அக்காளும், தம்பியும் அடிபிடி சண்டை போட்டுக்கிட்டு இருக்குங்க"

"கொஞ்ச வரச்சொல்லேன். பார்ப்போம்."

மூணு தடவை கூப்பிட்டு நாலாவது தடவை கூப்பிட ஆரம்பிக்கும்போது பையன் வந்தான். "அக்கா எங்கேடா?" என்று கேட்கும்போது அவளும் வந்துவிட்டிருந்தாள்.

"வண்டியைக் காணுமே. இன்னைக்கும் ஆபீஸ் உண்டா உங்க அப்பாவுக்கு?" - என்று பையனைப் பார்த்துக் கேட்டார். பையன் வெறுமனே தலையை ஆட்டினான். பெண் அவர் பக்கத்தில் போய் சிரித்துக் கொண்டு, "ஊருக்கும் போயிருக்காங்க தாத்தா ஏன் கேட்க?" என்றது.

"வெளியில் வரச் சொல்லத்தான். வீட்டில இருக்கிறது மாதிரிக் கொஞ்சநேரம் வெளியிலயும் இருக்கணும்லா?"

"எதுக்கு இருக்கணும்?"

"இந்த அருகம் புல்லு, துளசி, தும்பை, அந்த வேப்பமரம், கோவைப்பழம், மஞ்சணத்திப் பூ, நான், எங்கண்ணுக்குட்டி இப்பிடி எவ்வளவு இருக்கு வெளியிலே" - என்று அவர் சொல்லும்போது, "பாம்பு இருக்குமா?" என்று ஜடையை ஒதுக்கிக் கொண்டே அவள் கேட்டதும் அவர் பெரிதாகச் சிரித்தார்.

"இருந்தா என்ன? அதையும் பாரு."

"பயமாருக்கும்."

"பார்த்துட்டுல்லா பயப்படணும். பார்க்காமலே பயப்புட்ட எப்படி?" இருபாகம் நீளமுள்ள, "தெருவுக்கு அந்தக் கரையில் தலையும் இந்தக் கரையில் வாலும் இருக்கிற" பாம்பு பற்றிச் சொல்ல ஆரம்பித்ததுடன் அவருடைய வினோத உலகம் பிள்ளைகள் இருவரையும் இழுக்க ஆரம்பித்து விட்டது. ஐந்த தலையுள்ள, நாகரத்தினம் கக்கிவிட்டு இரை தேடுகிற பாம்புக் கதையை அவர் சொல்லும்போது, நான் ஒருத்தி இருக்கிறதே அவர்களுக்கு மறந்த விட்டது. ரகசியங்கள் நிரம்பிய அடர்ந்த கானகத்துள், ஒரு பரிவு நிறைந்த மந்திரவாதியின் இரண்டு கைகளிலும் ஆளுக்கு ஒருபுறமாக அழைத்துச் செல்லப்படுவது போல, அவருடன் இரண்டும் புறப்பட்டன.

"செருப்புப் போட்டுக்கிடுங்க" - நான் நடையில் நின்று சத்தம் கொடுத்தேன்.

"செருப்பு என்னதுக்கு? ஒரு இடத்தில் முள்ளை மிதிக்கும். இன்னொரு இடத்தில் புல்லை மிதிக்கும். சரியாகப் போகும் எல்லாம்" அவர் சொல்வதையும் கேட்கவில்லை. நான் சொல்வதையும் கேட்கவில்லை பிள்ளைகள்.

"டே....டேய். இந்தக் குட்டிப் புழுவைப் பாரேன். பச்சைக் கலரா இருக்கு." - அக்காவின் சத்தம் வந்த இடத்தை நோக்கி, இவருடைய கைகளில் இருந்து திருகிக் கொண்டு ஓடினான். ஓடும்போது, "கிணூங்" என்று மணிச் சத்தம் கேட்கிற மாதிரி இருந்தது. கேட்கவில்லை. அப்படி ஒரு நினைப்பு.

நிஜமாகவே ஒரு பாம்பு நடமாடுவதைப் பார்த்த பிறகுதான் செடி கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று தோன்றிற்று. பாத்திரம் கழுவுகிற, துணி துவைக்கிற இடத்தில் சிமெண்ட் தளம் பெயர்ந்து விரிசல் விட்டிருந்த இடத்தில் கன்னங்கரேர் என்று ஒரு பாம்பு சுண்டுவிரல் பருமனுக்குப் படுத்துக் கிடந்திருக்கிறது. "கருமெழுகா இருந்துது. காலை மாத்திரம் ஒரு எட்டுத் தள்ளி வச்சிருந்தேனோ, போட்டு வாங்கியிருக்கும்" என்றும், அது கொஞ்சம் கூடச் சட்டை பண்ணாமல், நெளிந்து தலைதிருப்பி புடைக்குள் மறுபடி அசங்காமல் போனதையும், மினுமினுன்ணு எண்ணெய் தடவின உளுந்து மாதிரிப் பளபளத்ததையும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வேலை பா‘க்கிற சரசு சொல்லச் சொல்ல பயம் ஜாஸ்தி ஆயிற்று.

"எல்லாத்தையும் வெட்டித் துப்புரவு பண்ணினால்தான் நல்லது. அது அதுக்குத் தோதுவான இடத்தில் அதுஅது நடமாடுகிறதில் என்ன் ஆச்சரியம் இருக்கு" - கையில் வெதுவெதுப்பான காப்பித் தம்ளரை வைத்துக் கொண்டு, ஒரு வாய் குடிப்பதும், கொஞ்சநேரம் மௌனமாக அந்தச் செடிகளின் அடர்த்திகளையே துளாவுவதுமாகப் பார்த்துக் கொண்டே, ராத்திரி முழுவதும் ரயிலில் பயணம் செய்து எழுந்திருந்து வந்த முகத்தோடு, நெல்லையப்ப மாமா கூடச் சொன்னார்.

அவர் விடியக்காலம் நாலரை அஞ்சு மணிக்கு வந்து சேர்கிற ரயிலில் இப்படி வருவதும், பல் தேய்த்த கையோடு, இப்படிக் காப்பித் தம்ளருடன், முன்வாசலிலோ புறவாசலிலோ வந்து நின்று கொண்டு பார்ப்பதும், எதையாவது சொல்வதும், வேறு யாரும் சொல்லாததாக இருக்கும். வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்த என்னிடம் ஒரு தடவை - "இங்கே வா" என்று கூப்பிட்டு, விடிய ஆரம்பிக்கிற அந்த நேரத்தில் நீலக்குமிழ் போல ஜொலித்துக் கொண்டிருந்த ஒரு நட்சத்திரத்தைப் பற்றிச் சொன்னார். சொல்லச் சொல்ல நட்சத்திரம் மட்டுமே ஆயிற்று வானம். அப்போது வீசிய குளிர்ந்த காற்றை நட்சத்திரம் அனுப்பியது போல இருந்தது.

"ஒவ்வொரு ஊருக்கும் மாற்றிப் போகும்போதும் மூணு நாலு வருஷம் ஏதாவது ஒரு செடியை உன் கையால் நட்டு வச்சிருக்கியா எந்த வீட்லேயாவது?" - அவர் கேட்கும்போது சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. சொல்லாத அந்தப் பதில் வெவ்வேறு நேரங்களில் மனதில் முளைத்துக் கொண்டே இருந்தது அப்புறம்.

"துப்புறவு பண்ணினால்தான் நல்லது" - என்று நெல்லையப்ப மாமா சொல்லி விட்டுப் போன அன்றைக்குத்தான் தாத்தாவைக் கேட்கத் தோன்றிற்று. தாத்தாவை எப்படி வேலை ஏவுகிறது என்கிற தயக்கம் அதிகமாக இருக்க, அவரில்லாவிட்டாலும் அவருக்குத் தெரிந்த யாரையாவது வரச்சொல்லிச் சுத்தம் பண்ணலாம் என்ற யோசனை. தற்செயலாக அவரும் வந்து தண்ணீர் குடிக்கக் கேட்டார். நல்ல வெயில்.

வாங்கி கடகடவென்று அண்ணாந்து குடித்து விட்டு, "ஹ" என்று காலிச் செம்பை நீட்டும்போது . "ஒரு உதவி பண்ணணும்" - என்று ஆரம்பித்தேன்.

"பண்ணீருவோம்" - தாத்தா உள்ளங்கையில் வைத்திருந்த தண்ணீரை இரண்டு கண்களிலும் அப்பி, முகம் முழுவதும் நனைகிற மாதிரி வழித்து விட்டுக் கொண்டார்.

"இந்தச் செடியை எல்லாம் வெட்டி...."

"அதுக்கென்ன சுத்தம் பண்ணீருவோம்" - என்று தாத்தா முடித்துவிட்டு, "இன்னொரு நாளைக்கு ஞாபகப்படுத்து தாயி வெயிலுக்கு முன்னால் ஆரம்பிச்சிடுவோம். எம்பொறுப்பு இது" - என்ற சொல்லிவிட்டுப் போனார். "என் பொறுப்பு" என்கிற வார்தை ரொம்பப் பிடித்திருந்தது. சிலபேர் இப்படி எதையாவது சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போய் விடுகிறார்கள். திரும்பத் திரும்ப அது நாள் முழுவதும்கேட்டுக் கொண்டே இருந்தது.

"துளசிச் செடியையும் வெட்டீரவா?" - நடையை ஒட்டி நாலைந்து மூடு மூடாக வளர்ந்திருந்த இடத்திலிருந்து கேட்டார். ரொம்ப அடர்த்தியாகவும், சில சமயங்களில் சரசரவென்ற அதற்குள் நகர்வதுபோல ஒரு பயத்தையும் ஏற்கெனவே உண்டாக்கி இருந்தது அது.

"ஏன் வெட்டினா என்ன?"

"பொதுவாக வெட்டமாட்டாங்க"

"தானாத்தானே வளர்ந்திருக்கு. நாங்க வளர்க்கலை."

"அப்போ தானாத்தானே கருகணும்" - தாத்தா இப்போது சிரித்தார். "நீ பெருமாளைக் கும்பிட மாட்டியோ என்னவோ. நாங்க கும்பிடுவோம்.... சென்ட்ராயப் பெருமாள்...." தாத்தா இரண்டு துளசி இலையைக் கிள்ளி வாயில் போட்டுக் கொண்ட கையை உயர்த்திக் காட்டினார். "கோப்பாளம் போட்டிருக்கேனே, பார்க்கலையா?" என்றார். புருவம் சுருக்கின மாதிரி நெற்றியில் பச்சை இருந்தது. தாத்தா துளசிச் செடிகளின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது வேறு மாதிரி ஆகிவிட்டிருந்தார்.

"செடிண்ணா எல்லாம் செடிதானேங்கியா?" - அவர் கேட்கும்போது நான் ஒன்றும் சொல்லவில்லை.

"ஒண்ணு நிக்கட்டும், ஒரு அவசரத்துக்குக் காய்ச்சல், மண்டையிடிண்ணு குடினிப் போடணும்னா யாருக்காவது உதவும்" - இதையும் அவரே சொன்னார். சொல்லிவிட்டுப் பிடுங்க ஆரம்பித்தபோது, காற்ற முழுவதும் துளசியின் வாடை நிறைந்தது. இலைகள் உருவப்பட்டும், கசங்கியும், வேர்கள் பிடுங்கப்பட்டுமாக முழு வீச்சில் ஒரே துளசியின் மணமாகப் பரவும்போது, " என்னதும்மா வாசம் அடிக்கு?" என்று பாவாடை தடுக்க ஓடிவந்து என் பக்கம் நின்றவளிடம், "துளசி" என்றேன். "துளசியா?" என்று கீழே இறங்கி ஓடிப் போய் தாத்தா பக்கத்தில் பிடுங்கிக் கிடக்கிற துளசிச் செடியை இரண்டு கைகளிலும் அள்ளி முகர்ந்து கொண்டு, "நல்லா இருக்கு" என்று மறுபடி முகர்ந்தது.

தாத்தா அப்படியே சேர்த்து அவளை அணைத்துக் கொண்டு தலையை வருடினார். "சென்ட்ராயப் பெருமாள் கோவிலுக்குப் போவுமா?" என்றார்.

ஒரு புல் பூண்டு இல்லாமல் வீட்டைச் சுற்றி அப்படிச் சுத்தமாக வெட்டியிருந்தது. மேடு பள்ளம் எல்லாம் கொத்தி எடுக்கப்பட்டுத் தன் தரையாகி, ஒரு வெதுவெதுப்பான மண்வாசனை மட்டும் வெயிலோடு வெயிலாகப் போய்க் கொண்டிருந்தது. பரசிப் பரசி அள்ளின விரல் தடம். நெல் கிண்டியது போலத் தோட்டம் முழுவதும் கிடந்தது. பின் வீட்டுக் காம்பவுண்டுச் சுவரின் இடுக்கிலிருந்து ஒரு வேப்பங்கன்று மட்டும் அசைந்தது.

"தம்பிக்கு முடி வெட்டினது மாதிரி இருக்கு" - இதை எப்படிச் சொல்லத் தோன்றியது அவளுக்கு என்று தெரியவில்லை. "காலு பொதுக்குப் பொதுக்குண்ணு அப்பிடியே அமுங்குதும்மா" - இதையும் உடனடியாக அவளே சொனாள். ஒரு வினாடி முடிவெட்டின தலையுடன், விநோதமான முகத்துடன் பசுபதி சலூனிலிருந்து வருகிற மாதிரி இருந்தது. புறவாசல் கதவைத் திறந்து கொண்டு மேலே போட்டிருந்த துண்டை உதறி, வாதமடக்கி மரத்தின் கிளையில் போட்டு விட்டு, அப்பா குளிப்பதற்குத் தண்ணீர் அடிகிற மாதிரி ஊர் ஞாபகம் வந்தது.

எத்தனை கொடிகட்டிக் கொடுத்தாலும் சரி. அப்பா குளிக்கப்போகும்போது துண்டை இப்படி மரத்தில் தான் போடுவார். வீட்டுக்குள் என்றால் ஜன்னல் கதவின் மேல் அல்லது அவருடைய நாற்காலி முதுகில். சிராய் சிராயாக முடி அப்பின அப்பாவின் சிட்டித் துண்டுவாடை எப்படி இருக்கும் முக்கட்டு மாதிரி மூன்ற புள்ளியும் இரண்டு கோடும் பக்கத்தில் போட்ட வண்ணான் குறியை இப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்க முடிந்தது எவ்விதம். திடீரென்று நடு வீட்டுப் பட்டாசலில் உட்கார்ந்து வெளுத்த உருப்படி எல்லாம் கணக்குப்பார்த்து வாங்கித் கொண்டிருப்பது போல இருந்தது.

"அடுத்த வெள்ளைக்கு நாச்சியாரு உங்க ஊரிலே இருப்பியோ" என்று இசக்கி சொல்கிறாள். வாசல் முழுவதும் பந்தல் போட்டு இருட்டிக் கிடக்க, ஒரு பச்சைக் சுங்குடிச் சேலையுடன் வாசல் நடைக்கு அந்தப்புறம் இசக்கி நிற்கிறாள். அவள் தன்னிச்சையாகப் பிடித்துக் கொண்டுள்ள நிலைப்படி இடுக்கில் கூழ்வற்றல் ஊற்றின மாதிரிச் சிலந்தி கூடு கட்டியிருக்கிறது வெள்ளையாக. கொட்டகைக் கால் நுனியில் அல்வான் துணிச் சிவப்பும், மாங்குலையும் அசைந்து கொண்டிருந்தன. மூலையில் யாரோ வெற்றிலை போட்டுத் துப்புயிருக்கிறார்கள்.

" என்ன தாயி, அப்பிடியே சிலை கணக்கா நிண்ணுட்டே?" தாத்தா சத்தம் கேட்டது. பக்கத்து மனையின் வேலியைத் தளர்த்திக் கொண்டு, நீர்க்கருவைக்கும் எருக்கலஞ் செடிகளுக்கு மத்தியில் இருந்து அவர் வந்து கொண்டிருந்தார்.

"இதைக் கொஞ்சம் பிடி" என்று நீட்டினார். கையில் முழுதாக வளர்ந்து பூத்துக் கொண்டிருந்த கேந்திச் செடி மண்ணும், வேரும் இலையுமாக இரண்டு மூன்று இருந்தது. "உம்புள்ளைகளை எங்கே காணும்?" என்றார்.

"இங்கே நிண்ணுகிட்டு இருந்துட்டு, இப்பதா உள்ளே போச்சு"

"வரச்சொல்லு. வரும்போது பேத்தியை ஒரு வாளித் தண்ணி கொண்டாரச் சொல்லு."

"தாத்தா நடைக்குப் பக்கத்தில், ஏற்கனவே துளசிச் செடியெல்லாம் பிடுங்கிப் போட்ட இடத்தில் ஒரு குச்சியை வைத்து மேலும் மேலும் ஆழமாகத் தோண்டினார்.

"நீ சீலைக்காரி அம்மன் கோவில் பாத்திருக்கியா?" என்றார்

"இல்லை" என்றேன்.

"ஆய்யப்பன் கோவில் போயிட்டு வார சாமி பூராவும் அம்புட்டு மாலையும் அங்க கழட்டிச் கழட்டிப் போட்டிருக்கும்." - தாத்தா சொல்லும்போது எனக்கு பஸ் கம்பியில் தொங்குகிற மாலைகள் தான் ஞாபகம் வந்தது.

"இது எல்லாம் கல்யாண மண்டபத்துக்குப் பின்னால் முளைச்சுக் கிடந்துது. இன்னும் பத்துச் செடி பிடுங்கலாம் இப்பிடி."

ஒரு பிளாஸ்டிக் வாளியும், கோப்பையுமாகத் தூக்க முடியாமல் அக்காளும் தம்பியும் தூக்கிக் கொண்டு வந்தார்கள். ஆரஞ்சு நிற வாளியில் தண்ணீரும், கோப்பையும், வாளிக் காவடியும் வெயிலில் வெவ்வேறு நிழல்களுடன் அலம்பியது.

"வந்துட்டீங்களா?" என்று தாத்தா சிரித்தார். அந்தச் சிரிப்புடன் எல்லாம் அமைதியாகி விட்டது போல இருந்தது. வெயில் அடிக்கும் போது சத்தம் கேட்கவா செய்யும். காலி ஊஞ்சல் அசைகிற சத்தம் வெயிலிலிருந்து வருவது போலத் தோன்றிற்று. கல் உடைப்பது மாதிரி, முற்றின கருங்கல்லில் உளி விழுவது போலத் தூரத்தில் ஒரு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வேப்ப மரத்தில் இருந்து காக்கை பறந்து போன நிழல் தரையோடு இழுபட்டு மறைந்தது. "கிணூங்" என்று மணிச் சத்தம் கேட்டது.

தாத்தா ஒவ்வொன்றாக ஒவ்வொருத்தர் கையில் கொடுத்து, மூன்று கேந்திச் செடிகளையும் நட்டு வைத்தார். இரண்டு செடிகள் ஏற்கெனவே பூத்திருந்த பூவுடன் மிகச் சிறியதாக அசைந்தன. இன்னொன்று சிறியதாகக் கொத்துமல்லிச் செடி மாதிரி அழகாக இருந்தது. தண்ணீர் விடச் சொன்னார். பாத்தி நிரம்பி, மண் உறிஞ்சிக் கொப்புளங்கள் தணிந்து வெடித்தன.

தலையை வருடுவது போல் செடிகளைப் பிள்ளைகள் இரண்டும் தடவிக் கொடுத்தன. ஏதோ இதே இடத்தில் ஏற்கெனவே வளர்ந்து, ஏற்கெனவே பூத்திருப்பது போலச் செடிகள் அசைந்தன.

ஒரே ஒரு துளசிச் செடி பக்கத்தில் இருந்தது,

தாத்தா வேறு ஒன்றும் சொல்லவில்லை.

"ஒண்ணைப் பிடுங்கினா, ஒண்ணை நடணும் இல்லையா" - என்று மட்டும் சொன்னார்.

எழுதியவர் : கணேஷ் கா (23-Jan-14, 9:18 am)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 130

மேலே