பிம்பம்

மாசக் கடைசியில் ஒவ்வொரு மாசமும் அப்படித்தான் - பருப்புத் தட்டுப்பாடில் ஆரம்பித்து சிறுகச் சேர்ந்து கட்டுக்கடங்காமல், திடிரென்று பெருத்துவிட்ட பூதத்தைச் சமாளிக்க P.F. இல் கடன் வாங்குவது பற்றிப் பாரதியுடன் இறங்கிவிட்ட பேச்சு சுவாரஸ்யத்தில் தான் திடீரென்று நின்ற இடத்திலிருந்து தள்ளப்படுவதுகூடத் தெளியாத அதிர்ச்சியில் தள்ளாடிப் போனான்.

"ஸாரி மாடம்! மன்னிச்சுடுங்க மாடம்!" அந்த வாலிபனின் கைகளும் கண்களும் தவித்தன, கன்னங்கள் கருங்குழம்பு. "நான் எதிரே பார்த்துண்டு வரல்லே " அப்போதுதான் விஷயம் புரிந்து கடுங்கோபம் பற்றிக்கொண்டது.

"எதிரே குத்துக்கல் மாதிரி நிக்கறேன், அப்படி என்ன கண் தெரியாமல் பராக்குப் பார்த்துண்டு வரது? இதென்ன நிஜம்மா பராக்குத்தானா இல்லே Jayvalking, eveteesing இலே புது டெக்னிக்கா?"

"இல்லேம்மா, நான் இந்தப் பக்கம் வந்து இருபத்தி அஞ்சு வருஷத்துக்கு மேலே ஆறது. இங்கே ஒரு கட்டடத்தைத் தேடி வரேன். அதிலே எதிரே வரவா நினைப்பேயில்லே!"

"உன்னுடைய இருவத்தி அஞ்சு வருஷத்தில் கட்டடம் பறந்துடுமா என்ன? இடிச்சுப் போட்டுப் புதுசு எழுப்பியிருப்பாங்க. ஆனால் காணாமல் போற புதுமையை உன்னிடமிருந்துதான் தெரிஞ்சுக்கணும்.

"அது ஸ்கூல் நான் படிச்ச ஸ்கூல்"

"இந்தச் சிரத்தை இந்த நாளில் சத்தே ஆச்சரியந்தான். ஸ்கூல் இங்கேதான் இருக்கு ஆனால் பெரிசாகி கட்டடம் விரிவடைஞ்சு, முதலதைப் பின்னுக்குத் தள்ளிடுத்து.

"ஓ Quite possible. என்னை இங்கே விட்டுத் துரத்திட்டாங்க. L..K.G. யிலிருந்து,"

"ஓ அப்பவே உன் நடத்தை இப்படி இருந்திருந்தால், அதில் ஆச்சரியமில்லே. விளையும் பயிர் முளையிலே"

"எனக்கு கோபம் வராதம்மா. நான் இடிச்சது தப்புத்தானே! அங்கே நான் தேடற டீச்சர் இப்போஇருக்காங்ளோ ரிடையர் ஆயிருப்பாங்களோ!"

அவளுக்குக் கோபம் மறந்து curiosity தூக்கிற்று. நான் இங்கேதான் வேலை செய்யறேன். யார் அந்த டீச்சர்?"

"டீச்சர் சுமதி. நான் தான் டீச்சர் சுமதி"

அவன் திக்கெனப் பின்னடைந்தான். "நான் விளையாடல்லேம்மா"

"ஏன் நீ இருவத்தி அஞ்சு வருஷத்துக்கப்புறம் தேடிட்டு வரப்போ, நான் இங்கேயே முப்பது வருஷம் சர்வீஸ் பார்க்கக்கூடாதா? அடுத்த வருஷம் ரிடையர்மெண்ட்" அதன் Problem அதுக்கு மேலே இருக்கு அதையெல்லாம் உன்கிட்ட சொல்லியாகணுமா?"

அவன் ஒன்றும் பேசவில்லை. சற்று திடப்பட்டு நின்று அவளை மேலுங்கீழுமாய்ப் பார்த்தான். ஆமாம், இருக்கக் கூடும். உடம்பு சற்று அகன்று தடித்துவிட்டது. கூந்தல் சாம்பல் பூத்து (வேறு எப்படி இருக்க முடியும்?) விட்டதே தவிர அடர்த்தி குறைந்த மாதிரி தெரியவில்லை. முகவார்ப்படம் எல்லாம் அவளாய் இருக்கக்கூடும். Yes, அவளேதான். அந்த அடையாளம் நிச்சமானதும் அவனுள் ஒரு எழுச்சி பொங்குவதை உணர்ந்தான். தான் ஆடிப்போகாமல், பூமியில் பாதங்களை அழுத்தமாய்ப் பதித்துக் கொண்டான்.

"என்னைத் தெரியல்லே? நான் கண்ணன் அம்மா?"

""இந்த சர்விஸ்ஸிலே எத்தனை கண்ணன்கள் கசுமாலங்கள் வந்து போயிருக்கும்! எதைத் தனியா நினைவு வெச்சுக்க முடியறது!"

"நான் ஸ்பெஷல் துஷ்டை"

"சர்க்கரை போட்டிருக்குமா, இல்லே ஸ்பெஷல் மாசலா சேர்த்திருக்குமா?"

" அப்படித்தான் வெச்சக்கோங்களேன்". பையன் படு உற்சாகமாகிவிட்டான்.

"பக்கத்துப் பெஞ்சு பசங்களைச் சீண்டிக் கிட்டேயிருப்பேன், பின்பெஞ்சைக் கூட விடமோட்டேன். பின்னலைப் பிடிச்சு இழுக்கறது. அவங்க கொண்டுவந்த ஸ்னாக்ஸைப் பிடுங்கியோ திருடியோ தின்கறது, அவங்க பென்சிலைப் பிடுங்கிக்கிறது. ஜன்னல் வழியா வீசி எறியறது. அவங்க மூஞ்சியை நாய்க்குட்டியாட்டம் நக்கறது, கையிலே எச்சில் துப்பறது, சொல்லிண்டே போகலாம்"

"எந்தப் பையன் செய்யாத Mischief புதுசா நீ செஞ்சுட்டே?"

"இதே வார்த்தையை அப்படியே பிட்டு வெச்சுதுப் போலத்தான் என் தாத்தா, பிரின்சிபாலிடம் சொன்னார், அவர் சீட்டெழுதி எங்களுக்கு அனுப்பிச்சபோது! அப்போது Principal உங்களுக்குச் சொல்லி அனுப்பிச்சு, நீங்க வந்து அவர் பக்கத்திலே உக்கார்ந்தீங்க"

"எல்லாம் வானரங்கள்னா வாலில்லாத வானரங்கள்! இன்னமும் க்ளாஸ் கூட மாத்தல்லே. இன்னமும் L..K.G. லேதான் மாரடிச்சுண்டிருக்கேன். இதுவே போறும்னு Management தீர்மானிச்சுடுத்து. என் பிழைப்பும் இப்படியே போயிடுத்து. சே! என்ன பிழைப்போ?"

அவள் அவனை மறந்தாள். பாரதியை மறந்தாள். தன் பொருமலில் எதிரே போவோர் வருவோர் அவளைச் சற்று ஆச்சரியத்தில் பார்த்துக்கொண்டே போமளவுக்கு அவள் சத்தமாகிவிட்டதை உணர முடியவில்லை.

அவன் அதைக் கண்டுகொள்ளாதது மாதிரி "என் தாத்தா இது வேறே சொன்னார்: இவன் ஜாதக ராசிப்படி இவன் அசாதாரணமானவன். ஒண்ணு பெரிய பதவிக்குப் போயிடுவான், இல்லே உலகம் மெச்சும் துறவி ஆயிடுவான், ஸ்வாமி விவேகானந்தர் மாதிரி அதீதம்தான்.

மொத்தத்தில் உங்கள் பள்ளிக்கூடத்துக்குப் பெருமையைத் தரப்போறான். இவனை நீங்கள் வெளியே அனுப்பினால் பள்ளிக்கூடத்துக்குதான் நஷ்டம். நான் தம்பட்டமடிச்சுக்கலே. எனக்கு Astrology கொஞ்சம் தெரியும். சயன்ஸாகவே ஆராய்ஞ்சிருக்கேன்.

பிரின்சிபால் உங்கள் பக்கம் திரும்பி "சிஸ்டர் என்ன சொல்றீங்க?"

நீங்கள்: "இல்லேங்க இவனைச் சமாளிக்கிறது கஷ்டம் பேரண்ட்ஸ் கம்ப்ளெயின்ட் பண்றது சமாளிக்கமுடியல்லே." I wish him all luck in his next school- அங்கேபோய் சரியாக மாறலாம். இங்கே நமக்கு அதிர்ஷ்டம் இல்லை. அதுதான் இப்போ தெரியுது. we have given him all chances" பிரின்சிபால் உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்தார்.

"நீங்களே கேக்கிறீங்க. நாங்க இப்போ நடக்கறதைக் கவனிக்க வேண்டியிருக்கு. எங்கள் பள்ளிக்கூடம் நடக்கணும் and we have to live know. I am sorry, next year வாங்க, பார்க்கலாம்."

தாத்தா சிரித்தார். "Next year நான் இருக்கேனோ இல்லேயோ?"

பிரின்சிபால் நாற்காலியை விட்டு எழுத்தார். " நாம் டாப்பிக் மார்றோம். இந்த விஷயம் முடிஞ்சுப் போச்சு டயம் வீணாவுது."

நீங்களும் எழுந்தீங்க. "வரேன். பாதி கிளாஸ்லே வந்திருக்கேன். அழைச்சீங்களேன்னு வந்தேன்."

ஆகவே நீங்க "Out" முத்திரை குத்தித்தான் நான் இந்த ஸ்கூலை விட்டு வெளியே வரும்படி ஆயிடுச்சு."

"ஆமாம் லேசாக கண்ணுல பூச்சி பறக்கற மாதிரி நினைப்பு. ஒரு பையன். அவன் மண்டை குடுமி பிய்ச்ச தோங்காய் மாதி ரி உருண்டையாய் இருக்கும். Special feature"

"Correct" பையன் சந்தோஷத்தில் கைகொட்டிச் சிரித்தான். "பிரசவக் கோளாறு ஒண்ணும் கிடையாது. இன்ஸ்ட்ரூமென்ட் ஒண்ணும் அப்ளையாவல. வயிற்றைக் கிழிச்சு அப்படியே அலாக்கா எடுத்துட்டாங்க. ஸிஸரியன் - குறைமாஸம் அதனால் hyperactive. இப்பவும் அப்படியே தான் இருக்கு ஆக்ஸிடென்ட் அது இதுன்னு மண்டையை உடைச்சுக்கலே நசுங்கலே."

"இன்னொரு நல்ல பாயின்ட் ஞாபகம் வருது. உனக்கு இஷ்டப்பட்டால் "நல்லா recite பண்ணுவே. மாரிலே கை கட்டிக்கொண்டு ஸ்லோகம் சொன்னால் கடைசிவரை க்ளியரா, நல்லா சொல்லுவே. அந்தச் சமயத்துலே அழகாயிடுவே."

"ம்ம்......."

அவன் முகத்தில் சந்தோசம் குழுமிற்று.

"ஆமாம் கண்ணன், உங்க தாத்தா ஜோஸ்யம் என்னவாச்சு?"

"தாத்தா போயிட்டாரு. ஆனா ஜோஸ்யம் பலிச்சிடுச்சி. நான் படிச்சு படிப்படியா உசந்து சிங்கப்பூர் சைனான்னு தேசம் தேசமா சுத்தி இப்போ அமெரிக்காவுல மூணு வருசமா இருக்கேன். ஒரு மாசம் லீவுலே வந்திருக்கேன். என் employers அனுப்பிச்சிருக்காங்க. அங்கே அவங்க ஆபீஸ மானேஜ் பண்றேன். அதை விருத்தி பண்ணும் பொறுப்பு. அவங்க நல்ல பேரிலே இருக்கேன்."

அவள் முகம் லேசாக வெளிறிற்று. "அப்போ தாத்தா ஜோஸ்யம் பலிச்சுப்போச்சு!"

"எல்லாம் பெரியவர் ஆசீர்வாதம். உங்கள் ஆசீர்வாதம். ஆனால் எனக்கு சர்ட்டிபிகேட்டு கொடுத்து அனுப்பிட்டிங்க."

"என்னை என்னப்பா பண்ணச் சொல்றே அன்னிய நிலைமை அப்படியிருந்தது. இப்பொ சொல்லிக்காட்டி வஞ்சம் தீர்த்தாச்சு இல்ல?"

"வஞ்சம் தீர்ப்பதா?" அவன் வெளியில் சொல்லவில்லை. அன்றைய சுமதி டீச்சர் - அவள் வழக்கை மன்றாட அவன் தாத்தா பள்ளிக்கு வந்திருந்தபோது, பிரின்சிபாலுடன் உட்கார்ந்திருந்த அன்றையவளை நினைத்துக்கொண்டிருந்தான். அவளுடைய பழுப்புநிற அழகுடன் மனம் எங்கோ நூலோடிவிட்டது.

உடம்பை உருவினாற்போல உடுத்தியிருந்தாள். ஒரு சுருக்கமில்லை வாட்டசாட்டமான ஆகிருதியில் ரவிக்கை சதைப்பிடிப்பாய் - அவள் வயதை நிர்ணயிக்கும்படி அவள் தோற்றமில்லை. மதிப்பிட அவனுக்கும் தகுதியேது? ஆனால் ஏதோ காந்தம் அவளிடமிருந்தது. முதல்நாள் அவன் கொண்டு வந்திருந்த சாக்லேட், குழந்தைகளுக்குப் பங்கீடானபோது வெட்கத்துடன் அவளிடம் இரண்டு சாக்லேட் நீட்ட, அவள் அவன் வாயைத் திறந்து ஒன்றைப் போட்டு மற்றதைத் தான் போட்டுக் கொண்டாள்.

"O.K.?" அவன் மறக்கவே மாட்டான். முடியல்லியே?

மேஜையை அடிக்கடிக் கையால் தட்டுவாள், பையன்கள் சத்தம் போடாதிருக்க. அது நடக்கிற காரியமா? "தங்களுக்குத் தொந்தரவு கூடாதுன்னு பெத்தவங்க இங்க அனுப்பிச்சுடறாங்க. நம்ம மேய்க்க வேண்டியிருக்கு." மூட் அவுட் ஆனால் அலுத்துக் கொள்வாள். மற்ற நேரங்களில் சிரித்தபடிதான். எல்லாரும் என் குழந்தைகள்தான். இல்லாட்டி என்னால் இத்தனை பெத்துக்கொள்ள முடியுமா? இப்படிச் சொன்னதும் அதன் தமாஷ் உரைத்ததும் அசட்டுச் சிரிப்புச் சிரித்துவிட்டாள். விஷயம் புரியாமலே அவனும் சிரித்தான். என் சுமதி டீச்சர்.....ஏதோ பெருமையாயிருக்கும்.

அவள் சொல்லும் பாடங்களைக் கோட்டானோ? ஏதோ சத்தம் இந்தக் காதில் புகுந்தது அந்தக் காது வழி..

அழுந்த வாரிய அவள் கூந்தலில் நெற்றியின் பக்கவாட்டில் இரண்டு பிரிகள் எதிரும் புதிருமாய் ஓடி விளையாடிக்கொண்டிருந்தன. அவைகளைக் கவனித்துக் கொண்டிருப்பான். இப்போது அவை இருக்குதோ, அன்றைய சகவாச ஞாபகத்தில் கண்கள் தேடின. இருப்பதாய்த் தெரியவில்லை. உதிர்ந்து போயிருக்கும் அல்லது இப்போது அழுந்தியிருக்கலாம். என்ன அசட்டுத்தனம்! இன்னுமா குழந்தைத் தனம்? Why not? இப்போது நார்மலாகவா இருக்கேன். ஏதோ துக்கம் தொண்டையை அடைத்தது. என் அம்மவைவிட ஏன் எனக்கு இவளைப் பிடிச்சப்போச்சு?.

குழந்தைகள் பாடு நிம்மதி என்கிறோம். பார்க்கப்போனால் அவர்கள் வாழ்க்கைதான் சலனமும் சஞ்சலமும். ஒவ்வொரு உணர்வும் அப்போதுதான் விழித்தெழுந்து அழுத்துகின்றன. அவைகளின் அந்நியம் தாங்க முடியனவாக இல்லை. இவ்வளவு ஸ்பஷ்டமாய் இப்போது விளங்கி என்ன பயன்? அதுவே புரியாத கோபம், பக்கத்துப் பையன்கள்மேல் ஆத்திரம். தன் மேலேயே ஆத்திரம். பசிப்பதில்லை. சாப்பிடத் தோன்றுவதில்லை

ஒரு நாள் கொண்டுவந்திருந்த இட்லியை, வகுப்பின் குப்பைத் தொட்டியில் ஒவ்வொன்றாய் அவன் எறிந்து கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு முதுகில் அறைந்தாள். "திக்கென ஆகிவிட்டது.

"அத்தனை குட்டி குட்டியா அவ்வளவு சிரத்தையா அன்போட வார்த்து அனுப்பிச்சிருக்கா. அவ்வளவு திமிரா உனக்கு ராஸ்கல்."

பிறகு அவளுடைய மதிய சாப்பாட்டு வேளையில் தன்னுடைய டிபன் பாக்ஸிலிருந்து ஒரு வாய் அவனுக்கு ஊட்டி, கையிலும் ஒரு கவளம் வைத்தாள்.

"அப்படியெல்லாம் செய்யக்கூடாதுடா கண்ணு, பசிக்குமில்லே! அம்மா இல்லே!"

அந்த ரசஞ்சாதம், தான் கொண்டு வந்திருந்த இட்லிக்கீடாகுமா? அவனுக்குத் தெரியாதா? இருந்தாலும் இன்னொரு பிடி கொடுக்கமாட்டாளா? நான் ஏன் இப்படி ஆயிட்டேன். அப்படித் தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ளக்கூடத் தெரியாத வயசு. ஆனால் துக்கம் தொண்டையை அடைத்தது.

அவளுடைய மேலுதட்டில் லேசாய் செவ்வரும்பு கட்டியிருந்தது. இப்போது அகு இருக்கமோ? Damn It, எனக்கு பைத்யம் பிடிச்சுடுத்தா? இல்லை இன்னும் விடல்லியா?

மாலைவேளையில் அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவள் புருஷன் வருவார் (வருவான்). நல்லாத்தான் இருந்தார்(ன்). டைட்பான்ட், டீசர்ட். ஆனால் இல்லை, அதனாலேயே அவனுக்கு அவரைப் பிடிக்கவில்லை. லேசாகிக் கொண்டிருக்கும் மண்டையுச்சியைச் சாமர்த்தியமாய் மறைத்து, விரலிடுக்கில் சிகரெட்டை இடுக்கிக்கொண்டு......

அவன் தன் உதடுகளை விரலால் பொத்தி எச்சரித்தும் கேட்பதாயில்லை. ஒரு நாள் கண்ணன் எதிரிலேயே அவளுடைய வார்த்தை தடித்தது "இங்கே உங்களுடைய சிகரெட் துண்டுகளைப் போட்டுவிட்டுப்போனால் என் பேர் கெட்டுவிடும். குழந்தைதகள் புழங்குற இடத்தில் நல்ல அடையாளம். நியாயமாய் நீங்கள் ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ளேயே வரக்கூடாது. நீங்கள் வந்தாலே என் ஸஹாக்களின் நெத்தியும் முதுகுத்தண்டும் சுருங்குது. என் பிழைப்பைக் கெடுத்தீடாதீங்க."

அப்பவும் சிரித்துக்கொண்டிருந்தான். அவன் சிரிப்பு நல்லாயிருந்தது. கன்னங்கள் இறுகிக் குழியும்.

அவளுக்க ஒரு தெற்றுப்பல். ஆனால் அழகு. இப்போது அவர் இருக்கிறாரோ?

பாரதியைக் காட்டி "இவள் யார்?"

"இவள் என் பெண்?" சுமதி டீச்சர மாதிரி இவள் இல்லை; சதைப் பிடிப்பாய் அப்பா ஜாடை தூக்கல் இருந்தாலும் என் சுமதி டீச்சர் மகள்"

"அதுசரி உன் சுவிஷத்தைப் பத்தி மொத்தமா சொல்லிட்டே, சந்தோசம். இத்தனை நாள் கழிச்சு என்ன இந்தப் பக்கம்? இருவத்தி மூணு வருசங்கழிச்சு உன் பள்ளிக்கூடத்தைத் தேடிண்டு வரது பெரிசுதான். எங்களுக்குப் பெருமைதான். யார் இவ்வளவு சிரமமெடுத்துக்கறா?"

"டீச்சர், நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். உங்களை மறக்க முடியல்லே. I was in love with you."

"so you have come to declare your love?"கை கொட்டிச் சிரித்தாள்.

"நீங்கள் சிரிக்கிறமாதிரி இல்லை. இருவத்தி மூன்ற வருஷங்கள் டீச்சர்."

சட்டெனத் தெளிந்தாள். " That happens sometimes; that is called puppylove" - ஒரு disease, வந்து இருந்துவிட்டுப் போயிரும்,"

"அது மாதிரி டீச்சருக்கு studendt மேல் நேர்வதில்லையா?" அவன் பரிதாபமாயிருந்தான்.

Oh, Yes எங்களுக்குக் குழந்தைகள் மேல் நேர்வது சகஜம். இயற்கையிலேயே எங்களுக்கு தாய்மை உண்டே! உள்ளத்திலும் உடல் அமைப்பிலும் அப்படித்தானே இருக்கிறோம்!"

"நான் மனதில் அதை வைத்துக் கேட்கவில்லை"

"புரிகிறது. அப்போ அவள் கிருஷ்ணப் பிரேமி ஆகிவிடுகிறாள், ஹே ராதா கிருஷ்ணா. பரவசமானாள். ஆனால் புத்தகத்தில் படிக்கிறோமே. ஒழிய அப்படி நிகழ்வது ரொமப அபூர்வம். யைன்கள் வகுப்பு மாறும்போது அல்லது பள்ளியையே விட்டுப் போகும்போது எல்லா முகங்களும் ஒருமுகமாத்தான் தெரியும். முகங்கள்தான் மாறிக்கொண்டே இருக்கின்றனவே. நாங்கள் கோபியர், எங்களுக்குப் பிருந்தாவனம் ஒன்றுதான் உண்டு. மாறுவதில்லை. நாங்களும் மாறு
வதில்லை.

"கலியாணம் ஆகி பள்ளியைவிட்டு, ஊர் விட்டு நாட்டையே விட்டுப் போனால் எங்கள் கிருஷ்ணனை ஏந்திக் கொண்டு விடுகிறோமே!"

அவரவர் சிந்தனையில் ஆழ்ந்தனர்.

ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. தழும்பேறிவிட்டாலும் இப்போது புதிதாய்ச் சூட்டைக் காய்ச்சியிழுத்தாற்போல் நெஞ்சு "சுறீல்".

அன்றொரு நாள் வகுப்பில் அவள் அவன் பக்கமாய் வருவதற்கும், அவளைப் பார்க்காமல் அவன் தன்னிடத்திலிருந்து எழுவதற்கும் சரியாக - பென்சிலைத் தேடினானோ ரப்பரைத் தேடினானனோ இருவரும் மோதிக்கொண்டனர். அவன் மார்பின் விம்மலின் அவன் முகம் பதிந்தது. மார்த்துணி ரவிக்கை முடிச்சுக்கும் கீழே சரிந்தது.

அவளுக்குக் கோபம் வரவில்லை. வீறிட்ட சிரிப்பை அடக்கிக்கொண்டு, மேலாக்கையும் இடுப்புச் செருகலையும் சரிப்படுத்திக்கொண்டு.....

"என்ன அப்படித் தட்டுக்கெட்டுப்போற அவசரம்?" குரல் உயரக்கூட இல்லை. Soft and melodious. அவனுக்குக் கேட்டதோ இல்லையே? மூர்ச்சையாகிவிட்டான்.

ஜன்மம், ஜீவராசி
யாவதுக்கும் பொதுவாய்
ஆண், பெண் எனும் அடித்தளம்
தான் உண்மைநிலை.
தன் முகம்,இனம்
இழந்த ஆதிவேட்கை
அவன் பச்சைப் பாலகன்
அவள் முதிர்ந்த மாது
பகலிலிருந்து இரவா?
இரவிலிருந்து.

எது முன்? எது பின்?
விடியிருட்டின் விழிம்பில் வெள்ளி
எதைத்தான் யார் அறிவார்,
ஆனால்
Ecstasy

அவனுடையது அது என்று ஒன்று உண்டு என்று பாவம் அதையும் அறியான்.

திகைப்பூண்டு மிதித்தமாதிரி அவன் வளையவந்தான்
அவள் எதையும் கண்டுகொள்ளாமலே வளைய வந்தாள்.

Yes, that is as it should be.
We Forget because we must.
such is the cavalcade of life.

முதலில் அவன்தான் மீண்டான். குரல் சற்று அடக்கமாய் "சரி, உங்களைத்தான் கட்டிக்க முடியாது. உங்கள் பெண்ணைக் கட்டிக்கலாமில்லையோ?"

"என்ன உளறல்?"

"இல்லை. சரியாய்த்தான் பேசுகிறேன். கலியாணம் பண்ணிக்கத்தான் அமெரிக்காவிலிருந்து ஒரு மாத லீவில் வந்திருக்கிறேன். அதற்குள் எனக்குப் பெண்பார்த்து என் பெற்றோர்கள் எனக்குக் கலியாணம் பண்ணி எங்கோ அமெரிக்காவுக்குக் குடித்தனம் பண்ண அனுப்பிவிடுவார்கள். எனக்கு இந்தப் பெண் பிடிச்சும் போச்சுன்னு நான் சொன்னால் அப்பா அம்மா குறுக்கே நிக்கமாட்டா. அப்படி ஒண்ணும் மீனமேஷம் பாக்கறவாயில்லே. போன இடத்தில் தனியா உழன்று மாட்டின்டு அவா பாஷையிலே கழநீர் பானையில் கைவிடாமல் இருந்தார் சரி. சம்பந்தம் பேச உடனே வாருங்கள். கன்னாபின்னான்னு கேக்கமாட்டா. மஞ்சள் கயிறிலே மாட்ட ஏன், அதையும் நான் பாத்துக்கறேன். பையன் பெரியவனாயிட்டான். என்னை என்ன பண்ணமுடியும்?"

பேச்சும் இந்த முத்தல்லே போறதுனாலே, அவள் தடுத்தாள் "நீ ஒண்ணு தெரிஞ்சுக்கணும் இவளுக்கு அப்பா இல்லை."

"அப்படின்ன அன்னிக்கு அவரைப் பார்த்தேனே" குழம்பினான்.

"இவளுக்கு அப்பா இல்லை நான் ஏமாந்து போனேன் கண்ணா, இவள்தான் அவர் தந்த பரிசு!"

"So what! அதை நாமா தெரிவிச்சுக்கணுமா? தண்டோரா போட்டு ஊரை அழைக்கப்போறோமா? A Simple Affair"

"கோவிலில் தெரியாமல் இருக்கப்போறதா?"

"அட தெரிந்தால்தான் தெரியட்டுமே"

அவள் சற்று நேரம் மௌனமாய் அவனைப் பாத்துக்கொண்டிருந்தாள். முகம் பிட்டாய் பிசைந்தது. உதடுகள் நடுங்கின. அவன் மேல் சாய்ந்து கட்டிக் கொண்டு பொட்டென உடைந்துபோனாள்.

அவன், அவளை அணைத்துக்கொண்டான். எத்தனை நாள் பாரமோ! வேடிக்கை பார்ப்பவர் பார்த்துக்கொண்டு போகட்டும். சுமதியைத் தாண்டி அவன் பார்வை பாரதிமேல் தங்கிற்று. பாரதி சுமதியாக மாட்டாள் பரிகாரமாகக் கூட மாட்டாள். சுமதியே அவன் கண்ட சுமதியாகமாட்டாள். அந்த சுமதி அவன் நெஞ்சில் உண்டானவள். அங்கிருந்து நெஞ்சக்கடலில் ஆழ்ந்து அதன் ஆழத்தில் புதைந்து போய்விட்டாள் இனிமேல் வரமாட்டாள்.

அழியவும் மாட்டாள்.

எழுதியவர் : கணேஷ் கா (23-Jan-14, 9:16 am)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 463

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே