கனவுப் பூதம்
சோகமே உருவாக அமர்ந்திருந்தான் அரசி மதுவந்தி. அகண்ட அவள் விழிகளில் துயரம் தேங்கிக் கிடந்தது. சமீப காலமாக அவளை ஏதோ கவலை பிடித்து ஆட்டி வந்தது. அடிக்கடி, சோர்ந்த முகத்துடன் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தவளாக அமர்ந்து விடுகிறாள்.
"உள்ளே வரலாமா அரசியாரே?"
குரலைக் கேட்ட மாத்திரத்தில் அரசியாரின் முகம் மாறியது. "வா கனகதாரா" என்றாள். வந்தது அமைச்சர் வித்யார்த்தியின் மனைவி கனகதாரா. அரண்மனையிலேயே, சொல்லப்போனால் அந்த பிரத்யுக தேசத்திலேயே மதுவந்திக்கு மிகவும் நெருக்கமானவள் கனகதாராதான்.
"ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தீர்கள் போலிருக்கிறது........ இடையூறு செய்துவிட்டேனோ?"
"ம்ம்ம்......அதெல்லாம் ஒன்றுமில்லை." சேடிப் பெண்டிரை வெளியேறுமாறு சைகை செய்தாள் மதுவந்தி.
"நான் சரியான இக்கட்டு ஒன்றில் மாட்டிக்கொண்டு விட்டேன் கனகதாரா. அதிலிருந்துவெளியேற வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் யோசனை" வருத்தமுடன் சொன்னாள்.
"அப்படியென்ன அரசியாருக்கு இக்கட்டு?"
சிலகாலம் முன்பு க்ருஷ்ய தேசத்திலிருந்து சட்ஷயன் என்ற மாந்திரீகன் அரசனைக் காண வந்தான். அரசன் அநிருத்யபாலனுக்கு மாந்திரீகம் தொடர்பான விஷயங்களில் மட்டு மீறிய ஆவலும் ஈடுபாடும் இருந்து வந்தது. ஒரு திங்கள் சட்ஷயனை அரண்மனையில் தங்கவைத்து ராஜ உபசாரம் செய்தான் அரசன். தினமும் பலமணி நேரம் அரசனும் சட்ஷயனும் மாந்திரீகம் சம்பந்தமாக ரகசியமாக உரை யாடினர். சட்ஷயன் அரசனுக்குப் பல மாந்திரீக விஷயங்களைக் கற்றுத்தந்ததாகவும் அரண்மனையில் பேச்சு. அரசனது உபசரிப்பால் மனம் குளிர்ந்த சட்ஷயன், கிளம்பும்போது தன்னிடம் குற்றேவேல் புரிந்து வந்து பூதங்களில் ஒன்றை அரசனுக்குப் பரிசாகத் தந்துவிட்டுச் சென்றான்.
சட்ஷயன் அரசனுக்குப் பரிசாகத் தந்த பூதத்தின் பெயர் கனவுப் பூதம். அடுத்தவரது கனவில் நுழைந்து அவரறியாமல் அவர் காணும் கனவை அப்படியே கண்டுவந்து சொல்லக் கூடியது. பூதம் இரவில் மட்டுமே பூதத்திற்குண்டான குணங்களைக் கொண்டு விளங்கும். பகலில் அது அரண்மனை விதூஷகனைப் போன்ற உருவத்தில் அரசமண்டபத்தில் காணப்படும். அதன் சிருங்கார ரசம் சொட்டும் பேச்சை அரசன் மிகவும் விரும்பிக் கேட்பான். அவையில் பலருக்கு அதன் பேச்சு அருவருப் பூட்டியது. அரசனுக்குப் பயந்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிக் காட்டாமல் மறைத்து வந்தார்கள். அது மட்டுமன்றி அந்த விதூஷகன் தான் கனவுப்பூதம் என்று எல்லோரும் அறிந்திருந்ததால் எங்கே தங்கள் கனவில் புகுந்து தம்மை மீறி வெளிப்படும் பாதகமான எண்ணங்களை ஒற்றறிந்து அரசனிடம் அது சொல்லிவிடுமோ என்ற பயப்படவும் செய்தனர்.
அரசன் அநிருத்யபாலன் தீவிர உறங்காநோயினால் பாதிப்புற்றிருப்பதாகவும், இரவுகளில் உறங்காமல் உப்பரிகையில் உலாத்திக் கொண்டிருக்கும் அவனால் இனி ஒருபோதும் உறங்க முடியாதெனவும், உறங்க இயலாத காரணத்தால் இனி தன் வாழ்வில் எப்போதும் அவனால கனவு காணமுடியாதென்றும், அதனாலேயே அடுத்தவரது கனவை ஒற்றறியும் பூதத்தைக் கொண்டு அடுத்தவரது கனவுகளைக் கண்டு தனது கனவு ஏக்கத்தைப் பூர்த்தி செய்து கொள்வதாகவும் அரண்மனையில் ரகசியமாகப் பேசிக்கொண்டனர்.
கனவுப் பூதம் கனவுகளை ஒற்றறிந்து சொல்வதோடு மட்டுமல்லாமல் அந்தக் கனவுகளுக்குத் துல்லியமாகப் பலன்களைக் கணிப்பதிலும் திறமை பெற்றிருந்தது. இப்படித்தான் அது அநிருத்யபாலனின் தளபதி மௌத்திகவாசனது திட்டத்தைக் கண்டறிந்து அரசனிடம் சொன்னது. கனவுப் பூதம் மௌத்திகவாசனது கனவில் நுழைந்த போது விழுதூன்றிப் படர்ந்து கிடந்த ஆலமரமொன்றின் கிளையொன்றை யாருமற்ற இரவில் அவன் மறைந்திருந்து ரகசியமாக வெட்டுவதாகக் கண்ட கனவை ஒற்றறிந்து அரசனிடம் சொன்னது. அக் கனவின்படி மௌத்திகவாசன் பிரத்யுக தேசத்தின் ஒரு பகுதியைத் தந்திரமாகக் கைப்பற்ற மனதிற்குள் திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாகப் பூதம், கனவுக்கு வியாக்யாணமும் சொன்னது. அரசன் அநிருத்யபாலனும் மௌத்திகவாசனை ரகசியமாகக் கண்காணிக்கும்படி ஒற்றர்களுக்கு உத்தரவிட்டான். கனவுப் பூதம் சொன்னது போலவே படையினரில் ஒரு பிரிவை கைக்குள் போட்டுக் கொண்டு திடீர்ப்புரட்சி மூலம் தேசத்தின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்ற அவன் ரகசியத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது. தக்க நேரத்தில் தளபதியை பிடித்து சிறையிலடைத்து நிகழவிருந்த புரட்சியை ஒடுக்கினான் அரசன்.
இப்படிப் பலரது கனவிலும் புகுந்து ஒற்றறிந்து சொன்ன கனவுப் பூதம் ஒரு நாள் விளையாட்டாக பட்ட மகிஷி மதுவந்தியின் கனவிலும் புகுந்தது. அன்றைக்குப் பார்த்து தன் கனவில் அவள் அவித்யுக தேச அரசன் சாம்பவகேசனுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தாள். கனவுப் பூதம் இதை அரசனிடம் சொல்லவில்லை. தன் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக் கொண்டது.
ஒரு நாள் அரசனில்லாத வேளை அந்தப்புரத்தில் நுழைந்து அரசி மதுவந்தியிட்ம் அவள் கண்ட கனவைப் பற்றிச் சொன்ன்து. அரசி ஆடிப் போனாள். அவையில் நிற்க வைத்து ஆடைகளைக் களைந்தது போல நெஞ்சம் பதறி உடல் குறுகிப் போனாள்.
சாம்பவகேசன் மதுவந்தியின் இளவயது கனவுப் புருஷன். அவளது தந்தையின் நாடான வசுத்யாயபுரியின் அண்டைநாடுதான் அவித்யுக தேசம். மதுவந்தியை சாம்பவகேசனுக்கு மணமுடிப்பதாக சிறுவயதிலேயே பேசி முடித்திருந்தது. மணநாளை நோக்கிய ஏக்கத்துடன் பரஸ்பரம் எதிர்பார்ப்புடன் இருவரும் காத்திருந்த வேளையில் தான் வசுத்யாயபுரி பிருகத்ஷானர்களது படையெடுப்புக்கு ஆளானது. தன்னைக் காத்துக்கொள்வதற்கே பெரும் பிரயத்தனம் புரிய வேண்டியிருந்த அவித்யுக அரசன் சாம்பவசேகனால் மதுவந்தியின் தந்தைக்கு உதவ முடியாத நிலை.
எனவே பிரத்யுக மன்னன் அநிருத்யபாலனுக்கு, உதவிகேட்டு அவசரத் தூது அனுப்பப்பட்டது. பிரத்யுக தேசத்துப் படைகளை வசுத்யாயபுரிக்கு ஆதரவாகப் போரிட அனுப்புவதற்குப் பிரதிபலனாக மதுவந்தியை தனக்கு மணமுடித்துத் தரக் கேட்டான் அநிருத்யபாலன். மனமின்றி மகள் மதுவந்தியை அநிருத்யபாலனுக்கு மணமுடித்துத்தர வாக்களித்தார் வசுத்யாயபுரி மன்னர். அநிருத்யபாலனின் படைகள் பிருகத்ஷானர்களை விரட்டியடித்து வசுத்யாயபுரியை ஆபத்திலிருந்தும் காத்தன.
சண்டை முடிந்த பின் தந்தையின் வாக்குக்குக் கட்டுப்பட்டு அநிருத்யபாலனை மணந்தாள் மதுவந்தி. அநிருத்யபாலனுக்கு அப்போது அகவை அறுபத்து மூன்று. ஏற்கனவே அவனுக்கு மூன்று மனைவியர். ஒருவருக்கும் புத்தியர பாக்கியம் இல்லை. பிரத்யுக தேச வழக்கப்படி அரசனுக்கு வாரிசை ஈன்று தருபவளே பட்டத்து மகிஷியாவாள். திருமணமான மறுவருடமே மதுவந்தி ஒர் ஆண் மக€வைப் பெற்றெடுத்தாள். பட்டத்து அரசியும் ஆனாள். ஆனால் அவள் மனதில் ஒரு மூலையில் எங்கோ சாம்பவகேசன் மீதான காதல் அவளறியாமலே துளிர்விட்டபடி இருந்திருக்கிறது. அதுதான் அன்று கனவில் அப்படி வெளிப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கனவை வெளியில் யாரிடமும் சொல்லாமல் வேண்டாமென கனவுப் பூதத்திடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டாள். பூதம் அவளைப் பார்த்து குறும்பாகச் சிரித்தது. நீ கண்ட கனவை நான் யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டுமானால் ஒருமுறை நீ என் ஆசைக்கு இணங்கவேண்டும் என்று சொல்லிவிட்டு பதிலை எதிர்பாராமல் வெளியேறிச் சென்றுவிட்டது.
"மனதின் விந்தைதானே கனவு. எங்கோ ஆழத்திலிருக்கும் காலம் கடந்த நினைவுகளும் கனவாகக் கூடுமல்லவா? அப்படிப்பட்ட கனவுக்கு நாமெப்படிப் பொறுப்பாக முடியும் கனகதாரா?"
"நீங்கள் சொல்வது சரிதான் அரசியாரே, ஆனால் இதை அந்த பூதத்துக்கோ அல்லது அரசருக்கோ நம்மால் விளங்கவைக்க முடியுமா?" தனது தோழியின் இக்கட்டை அறிந்து கனகதாரவும் கவலை கொண்டாள். இந்த இக்கட்டிலிருந்து வெளியேறும் வழி அவளுக்கும்புலப்படவில்லை.
"இதோ பார் கனகதாரா, அரசரை மணமுடித்த நாள் தொட்டு இன்றளவும் நான் சிந்தனையிலும் சரி, செயலிலும் சரி, பதிவிரதையாகவே இருக்கிறேன். ஆனால் கனவு என்பது என் கட்டுப்பாடுகளை மீறிய ஒன்று. அதற்கும் என் பதிவிரதைத் தன்மைக்கும் எந்த சம்பந்தமுமில்லையே."
விதூஷகன் பேசுகிறான்.
"அரசே முப்பது தசாப்தங்களுக்கு முன் க்ருஷ்ய தேசத்தில் வாழ்ந்த சமஸ்கிருதக் கவியொருவன் பாடிப்போன கவிதையைச் சொல்வேன், கனிவுடன் கேட்பீர். கவி சொல்கிறான். "கன்னிப் பெண்கள் கலவியில் ஈடுபடுவது எதனாலென்றால் அதில் என்ன இருக்கிறதென்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தினால். வேசையருக்குக் கலவி ஒரு பொருளீட்டும் வழி. விதவையருக்கோ தங்கள் கடந்த கால நினைவுகளை வருடிப் பார்க்குமொரு சந்தர்ப்பம். மனைவியருக்கு ஒரு நாளில் பல்வேறு கடமைகளுள் கலவியும் ஒன்று. அகவே இவ்வுலகில் பெண்டிர் கலவியின் பூரண இன்பத்தையும் துய்ப்பது கள்ளப் புணர்ச்சியில்தான்."
"ஆஹா, பேஷ்" என்கிறார் அரசர்.
அரண்மனையில் உலவ ஆரம்பித்த நாள் தொட்டே கனவுப் பூதத்துக்கு அரசி மதுவந்தி மீது ஒரு கண். அது என்னவோ மதுவந்தியைப் பார்க்கையில் எல்லாம் தானொரு பூத கணம் என்பதையும் மறந்து அதற்கு காதல் பொங்கிப் பிரவகிக்க ஆரம்பித்துவிடும். அவள் அரசனின் மனைவி, அதுவும் பட்டத்து ராணி. தன் மனதிலிருப்பது அரசருக்குத் தெரியவந்தால். பெரும் விபரீதமாகிவிடும். இப்படியெல்லாம் தனக்குள்ளேயே அது சிந்தித்தாலும் தன் இச்சையை அடக்கும் வழி மட்டும் அதற்கு புலப்படவில்லை. நிலை கொள்ளாமல் அது தவித்துக் கொண்டிருந்த போதுதான் எதேச்சையாக ஒரு நாள் அரசி மதுவந்தியின் கனவுக்குள் புகுந்து பார்த்தது.
வழக்கமாக பூத கணங்கள் மானுடரோடு காதல் உறவு கொள்வதில்லை. இருந்தாலும் சில விதிவிலக்குகள் உண்டு. மானுடரோடு கூடும் பட்சத்தில் பூதங்கள் தமக்குரிய மாய இயல்புகளை இழந்துவிடும் அபாயமும் உண்டு. கனவுப் பூதத்துக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லையென்று தோன்றியது. மதுவந்தியுடன் ஒரு முறை கூடியிருந்து அதனால் உயிரே போனாலும் பரவாயில்லையெனும் அளவுக்கு உன்மத்தம் அதைப் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. அது அடிக்கடி சென்று பணிந்தும் குழைந்தும் மிரட்டியும் மதுவந்தியை தன் ஆசைக்குப் பணியவைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.
"அரசியாரே, பரிவிருட்ஷ மலையடிவாரத்திலிருக்கும் ரிஷி ஒருவரிடமிருந்து மூலிகையொன்று பெற்று வந்திருக்கிறேன். உங்களது இக்கட்டு தீர இம்மூலிகை உதவிகரமாக இருக்கும்."
"என்ன மூலிகை, எப்படி அது என் இக்கட்டு தீர உதவமுடியும் கனகதாரா?"
"இந்த விசேஷ மூலிகையை ஒருவர் முகர்ந்தால் அவருக்குத் தன் பழைய நினைவுகளனைத்தும் மறந்து போகும். பல வருடத்து நினைவுகளை சுத்தமாக அழித்துவிடக்கூடிய சக்தி வாய்ந்த மூலிகை இது. இதை எப்படியாவது அந்த கனவுப்
பூதம் முகரும்படி செய்துவிடவேண்டும்."
"நீ சொல்வது சரிதான். ஆனால் இந்த மூலிகை பூதங்களிடம் பலிக்குமா?"
முயன்றுதான் பார்ப்போம், எனக்கென்னவோ பலிக்கும் என்றுதான் தோன்றுகிறது."
"சரி கனகதாரா. எப்படியோ இந்த இக்கட்டு நீங்கினால் சரி. நாள் ஒவ்வொன்றும் யுகமாகக் கழிகிறது எனக்கு."
கனவுப் பூதத்தின் இச்சைக்கு இணங்க இசைந்துவிட்டதாக மதுவந்தி அதற்கு ரகசியமாக தகவல் சொல்லியனுப்பினாள். அன்றைய தினம் பிரத்யுக நாடெங்கும் பெருமழை பெய்துகொண்டிருந்தது. அதிகாலை தொடங்கியே ஓயாது மழை கொட்டிக் கொண்டிருந்தது. நலக்குறைவு எனச்சொல்லி அன்றிரவு அரசரை அந்தப்புரம் வரவேண்டாமென கேட்டுக் கொண்டிருந்தாள். கனவுப்பூதம் இரண்டாம் சாமம் கடந்து வருவதாக ஏற்பாடு.
கனகதாரா பச்சைப் பனையோலைப் பெட்டியில் வைத்துக் கொடுத்தனுப்பியிருந்த மூலிகையை மஞ்சத்துக்கு அருகிலேயே வைத்திருந்தாள். பூதத்தின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். ஒரே பதற்றமாக இருந்தது. பூதம் வந்ததும் என்ன செய்யவேண்டுமென்பதை பலமுறை மனதில் ஒத்திகை பா‘த்திருந்தாள்.
முறுவலுடன் பூதத்தை வரவேற்று நைச்சியமாகப் பேச வேண்டும். பேசியபடியே, "உங்களுக்காக ஆபூர்வ மலரொன்றை கொண்டு வந்திருக்கிறேன். முகர்ந்து பார்த்து என்ன மலரென்று சொல்லுங்கள் பார்ப்போம்" என்று பனையோலைப் பெட்டியை பூதத்திடம் தர வேண்டும். பூதம் பெட்டியை வாங்கித் திறந்து முகர்ந்து பார்க்கும். உடனே மயங்கி விழுந்துவிடும். மயக்கம் தெளிந்து எழும்போது அதன் நினைவுகளனைத்தும் அழிந்திருக்கும். ஒரு வேளை பூதம் மயங்கி விழவில்லையாயின் மதுவந்தி மயங்கி விழுந்தவள்போல் நடித்து உடல் நலமில்லையென்று சொல்லி பூதத்தை பிறகொருநாள் வரும்படி சொல்லி அனுப்பி விடவேண்டும். ஒத்திகை கச்சிதம்தான். நிஜத்திலும் அப்படியே நடந்து விட வேண்டும். பூதம் மயங்கி விழுந்து அதன் நினைவுகள் அழிந்து போகவேண்டும்.
மதுவந்திக்கு நிலைகொள்ளவில்லை. இன்னும் இரண்டாம் சாமம் கடக்கவில்லை. திடீரென அவளுக்கு ஒரு ஐயம். பனையோலைப் பெட்டியில் மூலிகை நல்லவிதமாக இருக்கிறதா, அது தன் வேலையைச் சரியான விதத்தில் செய்யுமா? பனையோலைப் பெட்டியைக் கையிலெடுத்து மெதுவாகத் திறந்தாள். உள்ளிருந்த மூலிகையின் நெடி அவள் நாசியைத் தாக்கியது. அப்படியே மயங்கி மஞ்சத்தில் சரிந்தாள். அவள் நினைவு தப்பியது.
மழையில் நனைந்தபடி அந்தப்புரத்தை அடைந்த கனவுப் பூதம் ஒருக்களித்திருந்த கதவைத் திறந்தது உள்ளே நுழைந்தது. விளக்கு மிகவும் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. சிரமத்துடன் கண்களால் துழாவியபடியே அரசி மதுவந்தி மஞ்சத்தில் நிலைகுலைந்து கிடப்பதைக் கண்டது. காத்திருந்த களைப்பில் அரசியார் உறங்கிவிட்டிருக்க வேண்டும் என நினைத்த கனவுப் பூதம் உன்மத்தத்தின் விளிம்பில் நின்றது. அவளைத் தொட அதன் கைகள் பரபரத்தன. அவளது கால்களைத் தொட்டு மெதுவாக அசைத்து "மதுவந்தி" என்றது.
மயக்கம் நீங்கி எழுந்த மதுவந்திக்கு அந்தக் குறை வெளிச்சத்தில் எதிரில் ஒர் ஆடவன் நிற்பதை உணர சிறிது அவகாசம் பிடித்தது. அவள் முகம் ஒரு பூவைப் போல மலர்ந்தது. செல்லச் சிணுங்கலுடன் அவள் சொன்னாள்.
"ஏன் சாம்பவகேசரே இத்தனை தாமதம். பாருங்கள் காத்திருந்த களைப்பில் நான் உறங்கியே போய்விட்டிருக்கிறேன். ஆமாம் இன்று என் தந்தைக்குத் தெரியாமல் எப்படி அரண்மனைக்குள் நுழைந்தீர்கள்?"
கனவுப் பூதத்துக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதிர்ச்சி நீங்காமலேயே அது அவசரம் அவசரமாக அந்தப்புரத்தைவிட்டு வெளியேறியது. கனத்த அதன் பாதச் சுவடுகளை மழை பின்தொடர்ந்து அழித்தபடியே வந்தது.
அன்றிலிருந்து இரவுகளில், உறக்கம் வராமல் அரண்மனை உப்பரிகையில் இரண்டு பேர் உலாத்துவதைப் பார்க்க முடிந்தது.