காதலின் சாதி

காதலின் நிறம்

ஜன்னலோர இருக்கையில் தலைசாய்த்திருந்தாள். அவள் கண்கள் ஆழமாயிருந்தன. வளி மண்டலம் அவளை சுற்றிக் கனத்திருந்தது. சன்னலைத் துளைத்து வந்த காற்று அவளை ஒன்றும் செய்துவிடவில்லை. அவளது மௌனம் எதிர் இருக்கையிலிருந்த பெண்ணை இவள் குறித்து ஆய்வு செய்யத் தூண்டியிருக்க வேண்டும். ஆம், அப்பெண்ணின் மௌனம் துளைத்து வெளி வந்த பார்வையின் கூர்மை அப்படித்தான் சொன்னது.
ஓரிடத்தில் வண்டி நின்ற போதும் கலையவில்லை அவளின் கனத்த பிம்பம். தூரத்தில் புணர்ந்திருந்த இரு நாய்கள் கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்றது போல் ஆளுக்கொரு பக்கமாய் இழுத்துக் கொண்டிருந்தன. அதைப் பார்த்தபோது அவள் கண்கள் சில துளிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது. .எங்கிருந்தோ பறந்து வந்த ஈ அவள் உதட்டில் அமர்ந்து உடனே பறந்தது. ஆம், காலையில் அருந்திய தேனீரின் மிச்சம் ஒட்டியிருந்திருக்க வேண்டும். அவள் உதட்டில். ஈக்கும் வயிறு இருக்கிறதே ,அடுத்த துளி அதற்குக் கிடைக்கும் வரை பறப்பதற்கான சக்தியை அவள் உதடுகள் அதற்குக் கொடுத்திருக்கவேண்டும்.
எதிர் இருக்கையிலிருந்த பெண்மணி பயணம் முடிந்ததை அறிவித்ததற்கு நன்றி சொல்லக் கூட பிரக்ஞையின்றி வேகமாய் வெளியேறி போஸ் பூங்கா நோக்கி நடந்தாள். பூங்காவை நெருங்க நெருங்க மழைக்கால மேகங்களைப் போல் நினைவுகள் திரண்டு வந்து அவளை அமுக்கின.
“எவனோ ஒருவன் வாசிக்கிறான் “ ரிங்க் டோனாய் ஒலித்த பாடல் அவளை இப்போது வசீகரிக்கவில்லை.ஆயினும் அனிச்சையாக அலைபேசியை எடுத்து செவிகளுக்குக் கொடுத்தாள்.பூங்காவை சுத்தம் செய்யும் துப்புரவுப் பெண் குப்பையைக் கூட்டி அவளிருந்த இருக்கைக்குப்பின் புறமாய் குவித்தாள். அந்தக் குப்பையில் நேற்றைய பூக்களும் இலைகளும் மட்டுமன்றி கசக்கி வீசப்பட்டதும், பல நூறாய் கிழிக்கப்பட்டதுமான காகிதச் சிதறல்கள். ஒரு வேளை அவை சிலரது காதல் கடிதங்களாயிருக்கவும் கூடும்.
………………………….
Its too late Abi, I ‘m back to my own ………………everything is ended.
……………………………….
Don’t call pandilaxmi. நான் இப்பொ பழைய முத்து லட்சுமி.
…………………..

அபி சினேகிதி. ஒரு பிராமணப் பெண். மிக வசீகரமானவள். ஆனால் இவளை விட ஐந்து வயது மூத்தவள். மூப்பின் எச்சம் எதுவுமில்லாத அவள் அழகு யாரையும் கவரக்கூடியதாய் இருந்தது. அந்தரங்கமாய் பேசிக்கொள்ளும் போது ஆச்சாரங்களை அவள் தவிர்ப்பது இவளுக்கு மிகவும் பிடிக்கும். இருவரும் படித்த கோச்சிங் கிளாஸில் தான் பாண்டியும். பலவேசமும் படித்தார்கள். எப்படியோ இந்த இருவர் அந்த இருவரிடம் நெருங்கிப் பழக வாய்ப்புக் கிட்டியதில் இரு இணைகளுமே அலாதி இன்பம் கண்டது உண்மை. ஆனால் அபிக்கு ஆதரவுக்கும் எதிர்ப்புக்கும் ஆளில்லை. அண்ணன் முக்குப் பிள்ளையார் கோவில் பூசாரி. தனிக்கட்டை. வயது 50. காணிக்கை வருமானத்தில் சாப்பிட்டது போக நகையொன்றும் சேர்க்கமுடியாது. அதுதான் கோச்சிங் கிளாஸில் மாதம் 500 ரூபாய் கட்டி சேர்த்துவிட்டிருந்தான். வேலை கிடைத்துவிட்டால் வேலையைக்காட்டி கட்டிக் கொடுத்துவிடலாம் என்பது அவன் நம்பிக்கை. அவளும் அந்தணப் பெண் என்றாலும் மரமண்டை. ஒன்றும் தேராது என்பது தான் ஆசிரியரின் முடிவு. பலவேசத்திற்கு அபியைவிட நான்கு வயது குறைவு. இருந்தாலும் அவன் அவளை விரும்பினான். அவளும் ஒத்துக்கொண்டாள். அவனது கருத்த நிறமும் தெத்துப்பல்லும் அவன் அருகாமையிலிருந்து வெளிப்பட்ட மாடு மரி களின் வாசமும் அவளுக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னபோது தன்னை சலீமாக கனவு கண்டான். அபி & கோ காதலுக்கு பாண்டி & கோ துணை சென்றதன் விளைவு பற்றிக்கொண்டது பருவத்தீ மறு புறமும்.
…………………………………………….
இல்லடி, இப்போதான் நிதானமாப் பேசுறேன்…………முடியலடி………..காதல் கத்தரிக்காய் இதெல்லாம் வாழ்க்கையில்லடி. எல்லாம் புரிஞ்சு போச்சு. அவன் மேல தப்பே இல்லடி. எல்லாம் என்னோடது தான்.
………………………………………
அவள் அமர்ந்திருந்த பெஞ்சைச் சுற்றி சுத்தம் செய்ய அப்புறப்படுத்தினாள் துப்புறவுக்காரி. அன்று அப்பூங்காவில் பூத்திருந்த எந்தப் பூவும் அழகாய் இல்லை என்பது அவள் முடிவு. குரோட்டன்ஸ் செடிகளைக் கண்டு வெட்கினாள். காரணம் அதற்கும் அவளுக்கும் தான் தெ ரி யும்
அவளது தந்தை கொத்தாளம் பெரிய விவசாயி. நடுத்தர பண்ணையார் என்று கூட சொல்லலாம். பாண்டியின் தந்தை அவர் பண்ணையில் வேலை பார்ப்பதாக பிற்பாடுதான் தெரிந்துகொண்டார்கள் பாண்டியும் அவளும்.. நடுத்தர சாதி இந்து குடும்பம். சாதிக்காக அரிவாளெடுப்பதில் இருவரில் எவரும் சளைத்தவரில்லை. கொத்தாளம் தன் தங்கை மகன் பட்டாளத்தானுக்கு தன் மகளைக் கொடுக்கப் போவதாக சத்தியம் மட்டும் தான் செய்யவில்லை. ஏகபோக பிரச்சாரம் செய்து வைத்திருந்தார்
……………………..
ஆமாண்டி, இல்லேனு சொல்லலே. விரும்பித்தான் நடந்தாலும் நடக்ககூடாதது நடந்துபோச்சுடி.
…………………………………….
நீ விவரமான ஆளுதாண்டி, 40 வயசானாலும் உன்னக் கட்ட ஒருவனும் வரப்போவதில்ல.அப்புடியே வந்தாலும் அவன் கேக்குறத குடுக்க முடியுமா ? முடியாது. அது தெரிஞ்சுதான் எப்புடியொ கருவாயன கரெக்ட் பண்ணி எந்தச் செலவுமில்லாம கலப்பு திருமணம்னு அரசாங்க வேலையும் வாங்கிட்ட. அதனால அந்த கருவாயன ஏத்துக்கிட்ட. அவன் உன் முன்னாடியாவது நிக்க முடியுமாடி ?
……………………………………..
ஆழப் பதிந்த வேர்களைக் கொண்ட சாதிய மரத்தின் வெவ்வேறு கிளைகள் அவர்களிருவரின் சாதிகளும் . அவர்கள் பேசிக்கொண்டதைவிட அவர்களின் அரிவாள் பேசிக்கொண்டதுதான் வரலாறு.
………………………………………
அபி ப்ளீஸ். காதலிக்கறப்போ எனக்கு சாதியப் பத்தியெல்லாம் எதுவுமே நினைவுல இல்லடி.நீயாவது எதிர்காலத்தப்பத்தி ஒரு முடிவுல இருந்த.நான் மோசம் போயிட்டேண்டி. காதல் அது இதுன்னு ………………………….
விம்மி அழுதாள் .அவள் அழுகை போனைக்கூட ஈரமாக்கியது.அவள் மிகவும் தைரிய சாலி. சாதிக்குரிய குணம் என்பதாக அவளுக்கு கற்ப்பிக்கப்பட்ட பாடம் அது. அதையும் மீறி அவள் அழுத போது அபியால் ஆறுதல் சொல்ல முடியவில்லை.
……………………………………………..
ஆமாண்டி என் சொந்த பந்தமெல்லாத்தையும் விட்டுட்டு இப்போ அனாதையா நிக்கறது கஷ்டமா இருக்குடி
………………………………..
இல்லடி நான் மறுக்கல, நான் தாண்டி வந்த மாதிரி அவனால அவன் சாதிய தாண்டி வரமுடியல. இது ஒரு வேள பழிவாங்குறானோ அப்புடினு நினைக்க தோனுது.அந்தக் காலனி, தெரு வாசம் ,பன்னிக்கறி, மாட்டுக்கறி எதுவுமே எனக்கு பிடிக்கல
50வயது மதிக்கத் தக்க ஒருவர் சீஷன் துண்டு தலைப்பாகையுடன் கேண் டீ எடுத்து வந்தார்.நிச்சயமாய் அவர் குளித்திருக்க வாய்ப்பில்லை.அழுக்கேறிப்போன அவரது ஆடைகளை வறுமைக்கானது , மட்டுமல்ல அவரின் இடைவிடாத உழைப்புக்கான அடையாளமாய் ஏன் கொள்ளக்கூடாது ?
ஒரு கோப்பை தேனீர் அவளுக்கு ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும்.ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்ற பழமொழிக்கேற்ப 3 மாதத்தில் முடிவுற்ற சிறுகதையா அவள் காதல் ?ஆண்டாள் கொண்டதும் மீரா கொண்டதும் ஆன்மீகக் காதல் என்று ஊர் சொன்னாலும் அவள் ஏற்பதாய் இல்லை. காதல் என்ற சொல்லுக்கு காமமென்றும் இச்சையென்றும் மொழி பெயர்த்திருந்த அவள் தன்னை அதற்கான அடையாளமாக்கியிருந்தாள்.
……………………………………………………………………..
தனிக்குடித்தனத்துக்கு நான் எவ்வளவோ அழது பாத்துட்டேன், மாட்டேங்குறான்.
…………………………………………………………………….
அவன் தெருவில நான் இருக்குறதுல அவனுக்கு என்னடி பெருமை வந்துடப்போகுது. என்ன இருந்தாலும் ஓடி வந்த கழுத ன்னு தான ஊர் சொல்லப்போகுது
………………………………………….
நட்டாத்துல நிக்கேண்டி. புரியல . அவனுக்கும் எங்கப்பனுக்கும் நடுவில.எங்க என் நாடகத்த தொடங்கினேனோ அங்கதான். எனக்கு நாடகம் உனக்கு …………………..
50ரூபாய்க்கு சில்லரை இல்லாமல் மாற்றிக்கொண்டு வந்த டீ க்காரர் மீதியைக் கொடுக்கும் போது அவர் முகமும் கண்களும் கோபத்திலிருந்தன ஏதோ ஓர் உரிமையில்.”இந்தப் பொட்டக் கழுதைகளுக்கு போன் வாங்கிக் கொடுக்கிறவன சிரச் சேதம் செய்யனும்” னு அவன் நினச்சாலும் தப்பில்ல. பிறகென்ன அரை மணி நேரமா அவளும் அவன் முன்னாடி பேசிக்கிட்டிருக்காளே
…………………………………………………………..
தாங்க்ஸ் அபி, எல்லா முடிவுகளுமே நான் எடுத்ததுதான். இனியும் நான் தான் எடுக்கனும். தீதும் நன்றும் பிறர் தர வாரா.யாரையும் குற்றம் சொல்ல நான் விரும்பல.அவனப் பிரிஞ்சு வந்து 13 மணி நேரம் ஆகுது. இதுவரை நீ சொன்ன காதல் ஒரு போண் கூட பண்ணல. அவனுக்கு சேதாரம்னு எதுவும் இல்லைனா எனக்கு என்ன சேதாரம் .ஒன்னுமில்ல.
……………………………………………………..
ஒரு எழவுமில்ல. …………………….அதுவும் நல்லதுக்குதான் .சரி கேள்விப்பட்டேன் வாழ்த்துக்கள் அபி. வைஷ்னவி சொன்னா.பெண் பிள்ள பெத்துக்கோ
…………………………………………………….
ஏய் don’t worry நான் mbc கோட்டாவில இன்னும் ஒரு வருஷத்துல வேல கிடைச்சு சம்பளத்தோட உன்னவந்து பாக்குறேன்bye di . thanks …………….sorry………..
போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு துப்பட்டாவால் முகத்தை துடைத்தபடி வெளியேறும் போது இன்னொரு காதல் ஜோடி கைகளைக் கோர்த்தபடி உள்ளே நுழைந்தது

எழுதியவர் : ராசைக் கவிபாலா (24-Jan-14, 4:21 pm)
சேர்த்தது : ராசைக் கவி பாலா
Tanglish : kathalin saathi
பார்வை : 224

மேலே